settings icon
share icon
கேள்வி

தேவனுடைய கோபத்தைப் பற்றிய வேதாகமப் புரிதல் என்ன?

பதில்


"கோபம்," “உள்ளான கொதிப்பு," “ஆத்திரம்” அல்லது "எரிச்சல்" என அடிக்கடி மொழிபெயர்க்கப்படும் "தவறு மற்றும் அநீதிக்கு உணர்ச்சியின் மாறுத்திரம்" என கோபம் வரையறுக்கப்படுகிறது. மனிதர்களும் தேவனும் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் தேவனுடைய கோபத்திற்கும் மனிதனுடைய கோபத்திற்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. தேவனுடைய கோபம் பரிசுத்தமானது மற்றும் எப்போதும் நியாயமானது; மனிதன் ஒருபோதும் பரிசுத்தமானவன் அல்ல, அரிதாகவே அவனது கோபம் நியாயப்படுத்தப்படுகின்றன.

பழைய ஏற்பாட்டில், தேவனுடைய கோபம் மனித பாவம் மற்றும் கீழ்ப்படியாமைக்கு ஒரு தெய்வீக பதில் ஆகும். விக்கிரக ஆராதனை பெரும்பாலும் தெய்வீக கோபத்திற்கான சந்தர்ப்பமாக இருந்தது. சங்கீதம் 78:56-66 இஸ்ரவேலின் விக்கிரக ஆராதனையை விவரிக்கிறது. தேவனுடைய கோபம் அவருடைய சித்தத்தைப் பின்பற்றாதவர்களை நோக்கி தொடர்ந்து இயக்கப்படுகிறதாய் இருந்தது (உபாகமம் 1:26-46; யோசுவா 7:1; சங்கீதம் 2:1-6). பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் இனி வருகிரதான ஒரு நாளாக "உக்கிரத்தின் நாள்" என்று எழுதினார்கள் (செப்பனியா 1:14-15). பாவம் மற்றும் கீழ்ப்படியாமைக்கு எதிரான தேவனுடைய கோபம் முற்றிலும் நியாயமானது, ஏனென்றால் மனிதகுலத்திற்கான அவருடைய திட்டம் பரிசுத்தமானது மற்றும் பரிபூரணமானது, அதேபோல தேவனும் பரிசுத்தமானவர் மற்றும் பரிபூரணமானவர். தேவன் தெய்வீக தயவைப் பெற ஒரு வழியை வழங்கினார்—மனந்திரும்புதல்—இது தேவனுடைய கோபத்தை பாவிகளிடமிருந்து விலக்குகிறது. அந்த சரியான திட்டத்தை நிராகரிப்பது தேவனுடைய அன்பு, இரக்கம், கிருபை மற்றும் தயவை நிராகரித்து அவருடைய நீதியான கோபத்தை கொண்டுவருவதாகும்.

புதிய ஏற்பாடு தேவன் பாவத்தை நியாயந்தீர்க்கும் கோபத்தின் தேவன் என்ற கருத்தை ஆதரிக்கிறது. ஐசுவரியவான் மற்றும் லாசருவின் கதை தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் மனந்திரும்பாத பாவிக்கு கடுமையான விளைவுகளைப் பற்றி பேசுகிறது (லூக்கா 16:19-31). யோவான் 3:36 கூறுகிறது, "குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும்." குமாரனை நம்புகிறவன் தன் பாவத்திற்காக தேவனுடைய கோபத்தை அனுபவிக்க மாட்டான், ஏனென்றால் இயேசு சிலுவையில் நம் இடத்தில் மரணம் அடைந்தபோது குமாரன் தேவனுடைய கோபத்தை தன் மீது ஏற்றுக் கொண்டார் (ரோமர் 5:6-11). குமாரனை விசுவாசியாதவர்கள், அவரை இரட்சகராக ஏற்றுக்கொள்ளாதவர்கள், கோபத்தின் நாளில் நியாயந்தீர்க்கப்படுவார்கள் (ரோமர் 2:5-6).

மாறாக, ரோமர் 12:19, எபேசியர் 4:26 மற்றும் கொலோசெயர் 3:8-10 ஆகியவற்றில் மனிதக் கோபம் எச்சரிக்கப்பட்டுள்ளது. தேவன் மட்டுமே பதில் செய்ய முடியும், ஏனென்றால் அவருடைய பழிவாங்கல் சரியானது மற்றும் பரிசுத்தமானது, அதேசமயம் மனிதனுடைய கோபம் பாவமானது, அது அவனை பிசாசின் செல்வாக்கிற்கு வழி திறக்கிறது. கிறிஸ்தவரைப் பொறுத்தவரை, கோபமும் உக்கிரமும் நமது புதிய சுபாவத்துடன் பொருந்தாது, இது கிறிஸ்துவின் சுபாவம் (2 கொரிந்தியர் 5:17). கோபத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுதலையை உணர, விசுவாசிக்கு கோபத்தையும் உக்கிரத்தையும் உணர்வுகளைப் புனிதப்படுத்தவும் தூய்மைப்படுத்தவும் பரிசுத்த ஆவி தேவையாய் இருக்கிறார். ரோமர் 8-ஆம் அதிகாரத்தில் ஆவியானவரின் ஆளுகைக்குள்ளாக வாழும் ஒருவரின் வாழ்க்கையில் பாவத்தின் மீது உண்டாகும் வெற்றியைக் காட்டுகிறது (ரோமர் 8:5-8). ஆவியால் கட்டுப்படுத்தப்படும் மனம் சமாதானத்தால் நிரம்பியிருப்பதாக பிலிப்பியர் 4:4-7 கூறுகிறது.

தேவனுடைய கோபம் ஒரு பயங்கரமான மற்றும் திகிலூட்டும் விஷயம். சிலுவையில் நமக்காக சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தத்தால் மூடப்பட்டவர்கள் மட்டுமே, தேவனுடைய கோபம் அவர்கள் மீது ஒருபோதும் வராது என்று உறுதியளிக்க முடியும். "இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே!" (ரோமர் 5:9).

English



முகப்பு பக்கம்

தேவனுடைய கோபத்தைப் பற்றிய வேதாகமப் புரிதல் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries