யார் இரட்சிக்கப்பட முடியும்? யாராவது இரட்சிக்கப்பட முடியுமா?


கேள்வி: யார் இரட்சிக்கப்பட முடியும்? யாராவது இரட்சிக்கப்பட முடியுமா?

பதில்:
இயேசுவை விசுவாசிக்கிற எவரையும் அவர் இரட்சிப்பார் என்று யோவான் 3:16-ல் இயேசு தெளிவாகப் போதித்தார்: “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” இந்த "எவனோ" என்பது உங்களையும் மற்றும் உலகில் உள்ள ஒவ்வொரு நபரையும் உள்ளடக்கியுள்ளது.

இரட்சிப்பு நம் சொந்த முயற்சிகளை அடிப்படையாக கொண்டிருந்தால், யாரும் இரட்சிக்கப்பட முடியாது என்று வேதாகமம் கூறுகிறது: “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களானார்கள்” (ரோமர் 3:23). சங்கீதம் 143:2 மேலும் கூறுகிறது: "ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் இல்லை." ரோமர் 3:10, "அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை" என்று உறுதிப்படுத்துகிறது.

நம்மை நாமே இரட்சித்துக்கொள்ள முடியாது. மாறாக, நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது இரட்சிக்கப்படுகிறோம். எபேசியர் 2:8-9 போதிக்கிறது: “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல”. தேவனுடைய கிருபையால் நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம், கிருபை என்பது வரையறுக்கப்பட்டால் அது நம்மால் சம்பாதிக்க முடியாததாக இருக்கிறது. நாம் இரட்சிப்புக்கு தகுதியற்றவர்கள் அல்ல; நாம் அதை விசுவாசத்தால் பெற்றுக்கொள்கிறோம்.

தேவனுடைய கிருபை எல்லா பாவங்களையும் மூடிமறைக்க போதுமானதாக இருக்கிறது (ரோமர் 5:20). பாவப் பின்னணியில் இருந்து இரட்சிக்கப்பட்ட ஜனங்களின் எண்ணற்ற உதாரணங்களால் வேதாகமம் நிரம்பியிருக்கிறது. பாலியல் ஒழுக்கக்கேடு, விக்கிரகாராதனை, விபச்சாரம், ஓரினச்சேர்க்கை, துரோகம், பேராசை, குடிவெறி போன்ற பல்வேறு பாவம் நிறைந்த சூழ்நிலைகளில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். ஆனால் பவுல் அவர்களிடம், “கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்” (1 கொரிந்தியர் 6:9-11) என்று கூறுகிறார்.

அப்போஸ்தலனாகிய பவுல் முன்னே கிறிஸ்தவர்களை துன்புறுத்தினவராக இருந்தார், ஸ்தேவான் மரணத்திற்கும் சம்மதித்தவராக இருந்தார் (அப்போஸ்தலர் 8:1), மற்றும் கிறிஸ்தவர்களை கைதுசெய்து சிறையில் தள்ளினார் (அப்போஸ்தலர் 8:3). அவர் பின்வருமாறு எழுதுகிறார்: “முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச்செய்தபடியினால் இரக்கம்பெற்றேன். நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று. பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்” (1 தீமோத்தேயு 1:13-15).

தேவன் பெரும்பாலும் அவரது நோக்கங்களுக்காக சேவை செய்வதற்காக சாத்தியமற்ற நபர்களை இரட்சிப்பதை தேர்வு செய்கிறார். சிலுவையில் தொங்கி கொண்டிருந்த கள்ளனை மரிப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்பாக இரட்சிக்க தெரிந்துகொண்டார் (லூக்கா 23:42-43), திருச்சபையை உபத்திரவப்படுத்தியவர் (பவுல்), அவரை மறுதலித்த மீனவன் (பேதுரு), ஒரு ரோம சிப்பாய் மற்றும் அவரது குடும்பத்தினர் (அப்போஸ்தலர் 10), ஒரு ஓடிப்போன அடிமை (பிலேமோனில் உள்ள ஒநேசிமு), மற்றும் பலர். தேவனையல்லாமல் இரட்சிக்கும் திறன் வேறு எவருக்குமில்லை (காண்க ஏசாயா 50:2). நாம் விசுவாசத்தில் மறுமொழி அளிக்கவேண்டும் மற்றும் இலவச ஈவாகிய நித்திய ஜீவனையும் அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

யார் இரட்சிக்கப்பட முடியும்? ஒன்று மட்டும் நிச்சயம் – இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டால், நீங்கள் இரட்சிக்கப்பட முடியும்! நீங்கள் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா இல்லையா என்று உறுதியாக தெரியாவிட்டால், இதுபோன்ற ஒரு ஜெபத்தோடு நீங்கள் மறுமொழி அளிக்கலாம்:

"தேவனே, நான் ஒரு பாவி என்பதை உணருகிறேன், என் சொந்த நற்செயல்களால் ஒருபோதும் பரலோகத்திற்குச் செல்ல முடியாது. என்னுடைய பாவங்களுக்காக மரித்து, மரணத்திலிருந்து உயிரோடெழுந்து எனக்கு நித்திய ஜீவனைக் கொடுத்த தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் இப்பொழுதே எனது விசுவாசத்தை வைக்கிறேன். என்னுடைய பாவங்களை எனக்கு மன்னியும், உமக்காக வாழ எனக்கு உதவி செய்யும். என்னை ஏற்றுக்கொண்டு நித்திய ஜீவனைக் கொடுத்ததற்காக உமக்கு நன்றி."

நீங்கள் இங்கே வாசித்த காரியங்கள் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், கீழேயுள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிற பொத்தானை அழுத்தவும்.

English
முகப்பு பக்கம்
யார் இரட்சிக்கப்பட முடியும்? யாராவது இரட்சிக்கப்பட முடியுமா?