settings icon
share icon
கேள்வி

ஒரு கிறிஸ்தவன் ஐசுவரியத்தை எவ்வாறு பார்க்க வேண்டும்?

பதில்


ஐசுவரியத்தைக் குறித்த கிறிஸ்தவ பார்வை வேதவசனங்களிலிருந்து பெறப்பட வேண்டும். பழைய ஏற்பாட்டில் தேவன் தம்முடைய ஜனங்களுக்கு ஐசுவரியத்தைக் கொடுத்ததாகப் பல முறை உள்ளது. சாலமோனுக்கு செல்வம் வாக்களிக்கப்பட்டு, பூமியின் அனைத்து ராஜாக்களிலும் ஐசுவரியமுள்ளவனானான் (1 இராஜாக்கள் 3:11-13; 2 நாளாகமம் 9:22); தாவீது 1 நாளாகமம் 29:12 இல், “ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்." ஆபிரகாம் (ஆதியாகமம் 17-20), யாக்கோபு (ஆதியாகமம் 30-31), யோசேப்பு (ஆதியாகமம் 41), யோசபாத் ராஜா (2 நாளாகமம் 17:5) மற்றும் பலர் தேவனால் அருளப்பட்ட ஐசுவரியத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இருப்பினும், யூதர்கள் பூமிக்குரிய வாக்குறுதிகள் மற்றும் வெகுமதிகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களாக இருந்தனர். அவர்களுக்கு ஒரு தேசமும் அதில் இருந்த அனைத்து ஐசுவரியங்களும் கொடுக்கப்பட்டன.

புதிய ஏற்பாட்டில், வேறுபட்ட தரநிலை உள்ளது. திருச்சபைக்கு ஒருபோதும் தேசம் அல்லது ஐசுவரியத்தின் வாக்குறுதி கொடுக்கப்படவில்லை. எபேசியர் 1:3 நமக்குச் சொல்கிறது, “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.” கிறிஸ்து மத்தேயு 13:22 இல் தேவனுடைய வார்த்தையின் விதை முட்களுக்கு மத்தியில் விழுவதைப் பற்றியும், "உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால்" என்று பேசினார். புதிய ஏற்பாட்டில் பூமிக்குரிய செல்வங்களைப் பற்றிய முதல் குறிப்பு இதுவாகும். தெளிவாக, இது ஒரு நேர்மறையான சித்திரம் அல்ல.

மாற்கு 10:23ல், "அப்பொழுது இயேசு சுற்றிப்பார்த்து, தம்முடைய சீஷரை நோக்கி: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார்." இது சாத்தியமற்றது அல்ல—ஏனென்றால் எல்லாமே தேவனால் கூடும்—ஆனால் அது "கடினமாக" இருக்கும். லூக்கா 16:13 இல், இயேசு "மாம்மோன்" ("உலகப்பொருள்" என்பதற்கான அராமிய வார்த்தை) பற்றிப் பேசினார்: "எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது, ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை, அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.” மீண்டும், இயேசுவின் வார்த்தைகள் ஐசுவரியத்தை ஆவிக்குரிய நிலையின் மீது எதிர்மறையான செல்வாக்கையும் தேவனிடமிருந்து நம்மைத் தடுக்கக்கூடிய ஒன்றாகவும் முன்வைக்கின்றன.

தேவன் ரோமர் 2:4 இல் இன்று நமக்குக் கொண்டு வரும் உண்மையான ஐசுவரியங்களைப் பற்றி பேசுகிறார்: "அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ?" இவை நித்திய ஜீவனைக் கொண்டுவரும் ஐசுவரியங்கள். மீண்டும், இது ரோமர் 9:23-ல் மேலும் கூறப்படுகிறது: “தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன?” மேலும், எபேசியர் 1:7: “அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.” தேவன் இரக்கம் காண்பிப்பதைக் குறிப்பிட்டு, பவுல் ரோமர் 11:33 இல் தேவனைத் துதிக்கிறார்: “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!” புதிய ஏற்பாட்டின் வலியுறுத்தல் தேவனுடைய ஐசுவரியங்கள் நம்மில் உள்ளது என்பதாகும்: " தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும் அறியலாம்" (எபேசியர் 1:18). தேவன் உண்மையில் தம்முடைய ஐசுவரியத்தைக் காண்பிக்க விரும்புகிறார். பரலோகத்தில் உள்ள நம்மில்: “கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்” (எபேசியர் 2:6-7).

தேவன் நமக்காக விரும்பும் ஐசுவரியங்கள்: “அவர் தம்முடைய மகிமையான ஐசுவரியத்தினாலே நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும் ஜெபிக்கிறேன்” (எபேசியர் 3:16). ஐசுவரியத்தைப் பற்றிய புதிய ஏற்பாட்டு விசுவாசிகளுக்கான மிக முக்கியமான வசனம் பிலிப்பியர் 4:19: “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.” இந்த கூற்று பவுலால் எழுதப்பட்டது, ஏனெனில் பிலிப்பியர்கள் பவுலின் தேவைகளை கவனித்துக்கொள்வதற்காக காணிக்கைகளை அனுப்பியிருந்தனர்.

1 தீமோத்தேயு 6:17 ஐசுவரியவான்களை எச்சரிக்கிறது: “இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்.” யாக்கோபு 5:1-3 வரையிலுள்ள வேதப்பகுதி தவறாகச் சம்பாதித்த ஐசுவரியத்தைப் பற்றிய மற்றொரு எச்சரிக்கையை நமக்குத் தருகிறது: “ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள். உங்கள் ஐசுவரியம் அழிந்து, உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்து, அக்கினியைப்போல உங்கள் மாம்சத்தைத் தின்னும். கடைசிநாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்.” கடைசியாக வேதாகமத்தில் ஐசுவரியங்கள் குறிப்பிடப்பட்டிருப்பது வெளிப்படுத்துதல் 18:16 இல் ஆகும், இங்கே பாபிலோனின் மாபெரும் அழிவைப் பற்றி பேசுகிறது: "ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே!"

சுருக்கமாகப் பார்ப்போமானால், பூமியில் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களான இஸ்ரவேலுக்கு பூமிக்குரிய வாக்குத்தத்தங்களும் வெகுமதிகளும் வழங்கப்பட்டன. தேவன் அவர்கள் மூலம் பல உவமைகளையும் உதாரணங்களையும் சத்தியங்களையும் கொடுத்தார். பலர் தங்கள் ஆசீர்வாதங்களைப் பெற விரும்புகிறார்கள், ஆனால் அவர்களின் சாபங்களை அல்ல. இருப்பினும், வெளிப்படுத்துதலின் முன்னேற்றத்தில், தேவன் இயேசு கிறிஸ்துவின் மூலம் ஒரு சிறந்த ஊழியத்தை வெளிப்படுத்தினார்: “ஆனால் இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார்” (எபிரெயர் 8:6).

ஐசுவரியம் வைத்திருப்பதற்காக தேவன் யாரையும் கண்டிப்பதில்லை. ஐசுவரியங்கள் பல மூலங்களிலிருந்து ஜனங்களுக்கு வருகின்றன, ஆனால் தேவனை விட அதிகமாக அவைகளைத் தேடுபவர்களுக்கும், மேலும் தேவனை விட அதிகமாக அவைகள் மீது நம்பிக்கை வைக்கிறவர்களுக்கும் அவர் கடுமையான எச்சரிக்கைகளை அளிக்கிறார். இந்த பூமியில் உள்ள காரியங்களில் அல்லாமல் பரலோகத்தில் உள்ளவற்றில் நம் இருதயங்களை வைக்க வேண்டும் என்பதே அவருடைய மிகப்பெரிய விருப்பம். இது மிக உயர்ந்ததாகவும், அடைய முடியாததாகவும் தோன்றலாம், ஆனால் பவுல் இவ்வாறு எழுதினார், "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" (பிலிப்பியர் 4:13). கிறிஸ்துவை இரட்சகராக அறிந்துகொள்வதும், பரிசுத்த ஆவியானவர் நம் மனதையும் இருதயத்தையும் அவருக்கு ஒத்துப்போக அனுமதிப்பதும் இரகசியமாகும் (ரோமர் 12:1-2).

Englishமுகப்பு பக்கம்

ஒரு கிறிஸ்தவன் ஐசுவரியத்தை எவ்வாறு பார்க்க வேண்டும்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries