settings icon
share icon
கேள்வி

இயேசு ஒரு யூதரா?

பதில்


இயேசுவின் இனத்தைக் குறித்த கேள்வியானது சர்ச்சைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்று தோன்றுகிறது. நிச்சயமாக இயேசு ஒரு யூதர் - இல்லையா? வேதாகமப் பதிவு சொல்கிறது, ஆம், இயேசு ஒரு யூதர். ஆனால் சிலருக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகள் மற்றும் ஆட்சேபனைகளை அது தடைபண்ணவில்லை. இதைக்குறித்து வேதாகமம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

இயேசுவின் நாட்களில், ஒரு நபர் 1) யூத மதத்தில் உள்ள ஒரு தாயிக்கு பிள்ளையாக பிறந்ததினால் அல்லது 2) யூத மதத்திற்கு மதம் மாறியிருந்ததினால் அவன் அல்லது அவள் யூதராக கருதப்படுகிறார். யூதர்கள் தங்கள் வம்சாவளியை பண்டைய எபிரேயர்களிடம் இருந்து கொண்டுள்ளனர்; யூதர்கள் மதமாற்றம் மூலம் எந்த இனப் பின்னணியில் இருந்தும் மதமாற்றம் செய்யப்பட்டவர்கள். இயேசு வம்சாவளியில் வந்த ஒரு யூதர், அவர் முதல் நூற்றாண்டில் ஒரு யூதராக வாழ்க்கை வாழ்ந்தார்.

இயேசு யூதாவில் ஒரு யூதத் தாய்க்கு மகனாகப் பிறந்தார், கலிலேயாவில் ஒரு யூத வீட்டில் வளர்க்கப்பட்டு, யூதத் தலைநகரான எருசலேமில் கற்பிக்கப்பட்டார். அவர் இஸ்ரவேல் தேசம் முழுவதும் ஊழியம் செய்தார்: "அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை" (யோவான் 1:11). ஒரு சமாரிய ஸ்திரீயிடம் பேசுகையில், இயேசு சொன்னார், “நீங்கள் [புறஜாதிகள்] அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் [யூதர்கள்] அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது” (யோவான் 4:22). இங்கே முதல் மற்றும் இரண்டாவது நபர்களுக்குப் பயன்படுத்தப்பட்ட பிரதிப்பெயர்களில், இயேசு தம்மை யூத மக்களில் ஒருவராக இருப்பதை அடையாளம் காட்டினார்.

வேதாகமப் பதிவு இந்த உண்மைகளை விவரிக்கிறது: இயேசு கிறிஸ்து "ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்து" (மத்தேயு 1:1) என்று அவரது வம்சவரலாறில் குறிப்பிடப்படுகிறார். தேவதூதனாகிய காபிரியேல் இயேசுவின் பிறப்பை அறிவித்தபோது, அவர் "அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தில்" மற்றும் "யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்" என்று அறிவித்தான் (லூக்கா 1:32-33). இயேசுவின் தனித்துவமான ஆசாரியத்துவத்தை எழுதுகையில், எபிரேயர் நிருபத்தின் ஆசிரியர் கூறுகிறார், "நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாயிருக்கிறது" (எபிரேயர் 7:14). யூதா யாக்கோபின் மகன், அவருடைய பெயரிலிருந்தே நமக்கு யூதர் என்கிற வார்த்தை வந்தது. மரியாளின் வம்சாவளி, லூக்கா 3 ஆம் அதிகாரத்தில், இயேசுவின் தாய் தாவீது ராஜாவின் நேரடி வம்சாவளியில் வந்தவர் என்பதைக் காட்டுகிறது, இது இயேசுவுக்கு யூத சிங்காசனத்திற்கு சட்டப்பூர்வ உரிமையை வழங்குகிறது மற்றும் இயேசுவானவர் யூத வம்சாவளியைச் சேர்ந்த யூதர் என்பதை சந்தேகமின்றி நிறுவுகிறது.

இயேசு ஒரு யூத வாழ்க்கை முறையைக் கடைபிடிப்பதாகவும், யூத நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிப்பதாகவும் வேதாகமப் பதிவு காட்டுகிறது. அவர் ஒரு யூத வீட்டில் வளர்க்கப்பட்டார், இயேசுவின் பெற்றோர் தங்களுக்குத் தேவையான யூத நியாயப்பிரமாணங்களைக் கடைபிடிப்பதில் மிகவும் கவனமாக இருந்தனர் (லூக் 2:39). அவருடைய ஊழியத்தில், இயேசு அடிக்கடி ஜெப ஆலயங்களில் போதித்தார் (மத்தேயு 13:54; லூக்கா 6:6; யோவான் 18:20), மற்றும் தேவாலயத்திலும் கூட (லூக்கா 21:37) போதித்தார். அவருடைய போதனைகளில், இயேசு நியாயப்பிரமாணம் மற்றும் தீர்க்கதரிசிகளை அதிகாரப்பூர்வமாக சுட்டிக்காட்டினார் (மத்தேயு 5:17; 12:5; மாற்கு 10:19), அவர் மற்றவர்களுக்கு நியாயப்பிரமாணத்தை கடைபிடிக்க கற்றுக்கொடுத்தார் (மத்தேயு 23:1-3), அவரம் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டார். இயேசு யூத மதத்தின் பரிசேயர்களுடைய பகுத்தறிவு மறு விளக்கத்தை கடுமையாக நிராகரித்தார் என்கிறபோதிலும், அவர் தம்மை யூதர்களின் மதத்தோடு அடையாளப்படுத்திக் கொண்டார் மற்றும் ஒரு யூத ரபீயாகக் கருதப்பட்டார் (யோவான் 1:38; 6:25).

ஒரு யூதனாக, இயேசு பஸ்கா பண்டிகையை ஆசரித்தார் (யோவான் 2:13), யூதருடைய கூடாரப்பண்டிகையில் பங்குக் கொண்டார் (யோவான் 7:2, 10) மற்றும் தேவாலயப் பிரதிஷ்டைபண்டிகை பண்டிகையிலும் பங்குக் கொண்டார் (யோவான் 10:22). இயேசு யூதர்களுடைய ராஜா என்று அழைக்கப்பட்டார் (மாற்கு 15:2).

பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசனமாக முன்னறிவிக்கப்பட்ட மேசியா ஒரு யூத இரட்சகர் ஆவார், ஒரு சிறப்பு நோக்கத்திற்காக தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேசியா இஸ்ரவேலை மீட்டு தேவனுக்கு சேவை செய்ய வேண்டும், பின்னர் இஸ்ரவேலுக்கு சமாதானத்தையும் நீதியையும் பாதுகாப்பையும் கொண்டுவந்து சீயோனை ஆள வேண்டும் (ஏசாயா 9:6—7; 32:1; எரேமியா 23:5; மற்றும் சகரியா 9:9 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்). இயேசு ஒரு யூத மேசியா, யூதர்களுக்கு அனுப்பப்பட்ட தாவீதின் குமாரன், அவருடைய பூமிக்குரிய ஊழியத்தில் அவர் "காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்தில்" கவனம் செலுத்தினார் (மத்தேயு 15:24). ஆனால் அவரது மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில், இயேசு தனது தேசத்தையோ அல்லது பின்னணியையோ பொருட்படுத்தாமல், தன்னை விசுவாசிக்கும் அனைவருக்கும் இரட்சிப்பைப் அருளினார். யூதருடைய மேசியா உலக இரட்சகரானார் (எபேசியர் 2:11-22).

English



முகப்பு பக்கம்

இயேசு ஒரு யூதரா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries