settings icon
share icon
கேள்வி

யுத்தத்தைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்


யாத்திராகமம் 20:13ல் “கொலை செய்யாதிருப்பாயாக” என்று கூறப்பட்டிருப்பதை அநேகர் தவறாக புரிந்துகொண்டு இந்த கட்டளையை யுத்தத்தில் பின்பற்ற முயற்சிக்கின்றனர். இருப்பினும் இந்த வார்த்தையின் சரியான எபிரேய அர்த்தம்: “வேண்டுமென்றே, திட்ட மிட்டு செய்யும் கொலை என்பதே” ஆகும். தேவன் அநேக நேரங்களில் இஸ்ரவேலரை பிற தேசங்களோடு யுத்தத்திற்கு போக கட்டளையிட்டார் (1 சாமுவேல் 15:3; யோசுவா 4:13). அநேக குற்றங்களுக்கு தேவன் மரண தண்டனையை கட்டளையிட்டு இருக்கிறார் (யாத்திராகமம் 21:12, 15; 22:19; லேவியராகமம் 20:11) எனவே தேவன் எல்லா சூழ்நிலைகளிலும் கொலைக்கு எதிரானவர் அல்ல. ஆனால் திட்டமிட்ட கொலைக்கு எதிரானவர். யுத்தம் நல்லதல்ல ஆனால் சில நேரங்களில் இது அவசியம். இந்த உலகம் பாவிகளால் நிறைந்திருக்கிறது (ரோமர் 3:10-18) எனவே யுத்தம் தவிர்க்க முடியாதது. சில நேரங்களில் பாவம் நிறைந்த மனிதர்கள் அப்பாவிகளுக்கு பெரும் துன்பத்தை விளைவிக்காதபடி தடுக்க உதவுவது யுத்தமே.

பழைய ஏற்பாட்டில் தேவன் “இஸ்ரவேல் புத்திரர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்கும்படி” கட்டளையிட்டார் (எண்ணாகமம் 3:12). உபாகமம் 20:16-17ல், “உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஜனங்களின் பட்டணங்களிலேமாத்திரம் சுவாசமுள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல், அவர்களை உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே சங்காரம்பண்ணக்கடவாய்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 1 சாமுவேல் 15:8ல், “அமேலேக்கியரின் ராஜாவாகிய ஆகாபை உயிரோடே பிடித்தான்; ஜனங்கள் யாவரையும் பட்டயக் கருக்கினாலே சங்காரம்பண்ணினான்” என்று கூறப்பட்டுள்ளது. நிச்சயமாக தேவன் எல்லா யுத்தங்களுக்கும் எதிரானவர் அல்ல. இயேசுகிறிஸ்து பிதாவாகிய தேவனுக்கு எப்பொழுதும் பரிபூரணமான ஒற்றுமையுடன் இருந்தார் (யோவான் 10:30), எனவே நாம் பழைய ஏற்பாட்டில் மட்டுமே யுத்தம் தேவனுடைய சித்தமாக இருந்தது என்று கூற முடியாது. தேவன் மாறாதவர் (மல்கியா 3:6; யாக்கோபு 1:17).

இயேசுவின் இரண்டாம் வருகை மிகவும் வன்முறை நிறைந்ததாக இருக்கும். வெளிப்படுத்தின விசேஷம் 19:11-21 ஜெய கிறிஸ்து நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுவார் (11ம் வசனம்) என்பதை விளக்குகிறது. இந்த யுத்தம் இரத்தம் தோய்ந்த (13ம் வசனம்) மற்றும் கோரமாக இருக்கப்போகிறது. அவரை எதிர்க்கிற அனைவருடைய வம்சத்தையும் பறவைகள் பட்சிக்கும் (17-18ம் வசனம்). அவருடைய எதிரிகளின் மீது அவருக்கு கரிசனையில்லை, அவர்கள் அனைவரையும் பிடித்து “எரிகிற அக்கினிக்கடலிலே” உயிரோடே தள்ளுவார் (20ம் வசனம்).

தேவன் யுத்தத்தை ஆதரிக்க வில்லை என்பது தவறான கருத்து ஆகும். இயேசு ஆயுதப் போராட்டத்திற்கு எதிரான கொள்கையை உடையவர் அல்ல. இந்த உலகம் தீயவர்களால் நிறைந்திருக்கிறது சில நேரங்களில் பெரும் தீய சக்திகளை கட்டுப்படுத்த யுத்தம் அவசியமாக இருக்கிறது. இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஹிட்லர் தோற்கடிக்கப்படாத பட்சத்தில் அவர் எத்தனை ஆயிரங்கோடி மக்களை கொன்றிருப்பார்? அமெரிக்காவில் உள்நாட்டு யுத்தமில்லாதிருந்தால் எத்தனை நாட்கள் அமெரிக்கர்களும் ஆப்பிரிக்கர்களும் அடிமைகளாக பாடுபட்டிருக்க வேண்டும்?

யுத்தம் பயங்கரமானது. சில யுத்தங்கள் பிற யுத்தங்களை பார்க்கிலும் சரியானவைகள், ஆனால் பாவத்தின் விளைவாகவே யுத்தங்கள் ஏற்படுகின்றன (ரோமர் 3:10-18). அதே நேரத்தில் பிரசங்கி 3:8 சொல்லுகிறது, “சிநேகிக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு; யுத்தம்பண்ண ஒரு காலமுண்டு, சமாதானம்பண்ண ஒரு காலமுண்டு.” இந்த உலகம் பாவத்தினாலும், வெறுப்பு மற்றும் தீமைகளால் நிறைந்திருக்கிறது (ரோமர் 3:10-18), எனவே யுத்தம் என்பது தவிர்க்க முடியாதது ஆகும். கிறிஸ்தவர்கள் யுத்தத்தில் நாட்டம் கொள்ள கூடாது, ஆனால் அதேவேளையில் தேவன் நமக்காக எற்படுத்தி வைத்திருக்கும் அரசாங்கத்தை எதிர்க்கவும் கூடாது (ரோமர் 13:1-4; 1பேதுரு 2:17). யுத்தம் நடக்கும் போது நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியம் நம்முடைய தலைவர்கள் தேவ ஞானத்தோடு செயல்பட, இராணுவத்தினரின் பாதுகாப்புக்கும், மோதல்களுக்கு விரைவான தீர்வு கிடைக்க, மற்றும் இரண்டு பகுதி மக்களுக்கும் குறைவான பாதிப்பு மட்டுமே ஏற்பட நாம் ஜெபிக்க வேண்டும் (பிலிப்பியர் 4:6-7).

Englishமுகப்பு பக்கம்

யுத்தத்தைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries