settings icon
share icon
கேள்வி

பல்வேறு வகையான ஜெபங்கள் யாவை?

பதில்


வேதாகமம் பல்வேறு வகையான ஜெபங்களை வெளிப்படுத்துகிறது மற்றும் அவற்றின் நடைமுறையை விவரிக்க பல்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது. உதாரணமாக, 1 தீமோத்தேயு 2:1 கூறுகிறது, "நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்." இங்கே, ஜெபத்திற்கு பயன்படுத்தப்படும் நான்கு முக்கிய கிரேக்க வார்த்தைகளும் ஒரே வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வேதாகமத்தில் காணப்படுகின்ற முக்கிய ஜெபத்தின் வகைகள் இங்கே:

விசுவாசமுள்ள ஜெபம்: யாக்கோபு 5:15 கூறுகிறது, "விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்." இந்தச் சூழலில், நோய்வாய்ப்பட்ட ஒருவருக்காக, தேவனிடத்தில் குணமாக்கும்படி வேண்டி, விசுவாசத்தில் ஜெபம் செய்யப்படுகிறது. நாம் ஜெபிக்கும்போது, நாம் தேவனுடைய வல்லமையிலும் நன்மையிலும் விசுவாசிக்க வேண்டும் (மாற்கு 9:23).

உடன்படிக்கையின் ஜெபம் (ஒருங்கிணைந்த ஜெபம் என்றும் அழைக்கப்படுகிறது): இயேசு பரமேறிச் சென்ற பிறகு, சீடர்கள் "ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்" (அப்போஸ்தலர் 1:14). பின்னர், பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு, ஆரம்பகால திருச்சபை ஜெபத்தில் "தங்களை அர்ப்பணித்தது" (அப்போஸ்தலர் 2:42). அவர்களுடைய உதாரணம் மற்றவர்களுடன் ஜெபிக்க நம்மையும் ஊக்குவிக்கிறது.

விண்ணப்பத்தின் ஜெபம் (அல்லது வேண்டுதல்): நமது விண்ணப்பங்களை தேவனிடம் கொண்டுச் செல்ல வேண்டும். பிலிப்பியர் 4:6 போதிக்கிறது, "நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்." ஆவிக்குரிய யுத்தத்தில் வெற்றி பெறுவதின் ஒரு பகுதி "எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம் பண்ணுவதாகும்" (எபேசியர் 6:18).

ஸ்தோத்திரஞ்செய்யும் ஜெபம்: பிலிப்பியர் 4:6ல் மற்றொரு வகையான ஜெபத்தைக் காண்கிறோம்: நன்றி அல்லது தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துதல். "ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்." ஸ்தோத்திரம் செலுத்தும் ஜெபங்களின் பல எடுத்துக்காட்டுகளை சங்கீதங்களில் காணலாம்.

ஆராதனை ஜெபம்: ஆராதனை ஜெபம் நன்றி செலுத்தும் ஜெபத்துக்கு ஒத்ததாகும். வித்தியாசம் என்னவென்றால், ஆராதனை தேவன் யார் என்பதில் கவனம் செலுத்துகிறது; நன்றி என்பது தேவன் என்ன செய்திருக்கிறார் என்பதில் கவனம் செலுத்துகிறது. அந்தியோகியாவிலுள்ள திருச்சபைத் தலைவர்கள் இவ்வாறு உபவாசத்தோடு ஜெபித்தார்கள்: “அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார். அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்” (அப்போஸ்தலர் 13:2-3).

அர்ப்பணத்தின் ஜெபம்: சில சமயங்களில், ஜெபம் என்பது தேவனுடைய சித்தத்தைப் பின்பற்றுவதற்கு நம்மைப் பிரித்துக்கொள்ளும் நேரமாகும். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய இரவில் இப்படிப்பட்ட ஒரு ஜெபத்தை செய்தார்: “சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்" (மத்தேயு 26:39).

பரிந்து பேசும் ஜெபம்: பல சமயங்களில், மற்றவர்களுக்காக நாம் பரிந்து பேசும்போது, அதுவும் நமது ஜெபங்களில் உள்ளடங்கும். 1 தீமோத்தேயு 2:1ல் "எல்லா மனுஷருக்காகவும்" பரிந்துபேச வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் இயேசு நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார். யோவான் 17-ஆம் அதிகாரம் முழுவதுமே இயேசுவின் சீடர்கள் மற்றும் அனைத்து விசுவாசிகளின் சார்பாக அவர் ஜெபித்த ஜெபமாகும்.

சாபமிடுதல் ஜெபம்: சங்கீதத்தில் சாபமிடுகிற ஜெபங்கள் காணப்படுகின்றன (எ.கா., 7, 55, 69). துன்மார்க்கர்கள் மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பைக் கொண்டுவரவும், அதன் மூலம் நீதிமான்களைப் பழிவாங்கவும் அவை பயன்படுத்தப்படுகின்றன. சங்கீதக்காரர்கள் தேவனுடைய பரிசுத்தத்தையும் அவருடைய தீர்ப்பின் உறுதியையும் வலியுறுத்த இந்த வகையான முறையீட்டைப் பயன்படுத்துகின்றனர். சபிக்காமல், எதிரிகளை ஆசீர்வதிக்கும்படி இயேசு நமக்குக் கற்பிக்கிறார் (மத்தேயு 5:44-48).

ஆவியில் ஜெபிப்பதையும் (1 கொரிந்தியர் 14:14-15) மற்றும் போதுமான வார்த்தைகளைக் கொண்டு நம்மால் சிந்திக்க முடியாதபோது ஜெபிப்பதைப் பற்றியும் வேதாகமம் பேசுகிறது (ரோமர் 8:26-27). அந்த சமயங்களில், ஆவியானவர் தாமே நமக்காக பரிந்து பேசுகிறார் மற்றும் உதவிச் செய்கிறார்.

ஜெபம் என்பது தேவனுடனான உரையாடல் மற்றும் இடைவிடாமல் செய்யப்பட வேண்டும் (1 தெசலோனிக்கேயர் 5:16-18). இயேசு கிறிஸ்து மீது நம் அன்பு வளரும்போது, நாம் இயல்பாகவே அவருடன் பேச விரும்புவோம்.

Englishமுகப்பு பக்கம்

பல்வேறு வகையான ஜெபங்கள் யாவை?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries