settings icon
share icon
கேள்வி

அந்நியபாஷைகளில் பேசுதல் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டதற்கு ஆதாரமா?

பதில்


அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தில் மூன்று இடங்களில் அந்நியபாஷையில் பேசுதலும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்வதும் கூறப்பட்டுள்ளது - அப்போஸ்தலர் 2:4; 10:44-46, மற்றும் 19:6. எனினும், இந்த மூன்று சந்தர்ப்பங்களில் தான், அந்நியபாஷைகளில் பேசப்படும் இடங்களில் பரிசுத்த ஆவியானவர் பெறும் சான்றுகள் உள்ளன. அப்போஸ்தலர் புத்தகத்தில் முழுவதும், ஆயிரக்கணக்கானோர் இயேசுவை நம்புகின்ற சம்பவங்கள் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் அவர்கள் அந்நியபாஷைகளில் பேசுவதைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை (அப்போஸ்தலர் 2:41; 8:5-25; 16:31-34; 21:20). பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுள்ளதன் ஒரே அத்தாட்சி அந்நிய பாஷைகளில் பேசுகிறது மட்டுமே என்று புதிய ஏற்பாட்டில் எங்கும் போதிக்கப்படவில்லை. உண்மையில், புதிய ஏற்பாடு இதற்கு நேர்மாறாக போதிக்கிறது. கிறிஸ்துவுக்குள் இருக்கிற யாவருக்கும் (விசுவாசிக்கும்) பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் (ரோமர் 8:9; 1 கொரிந்தியர் 12:13; எபேசியர் 1:13-14), ஆனால் எல்லா விசுவாசிகளும் அந்நிய பாஷை பேசுவதில்லை (1 கொரிந்தியர் 12:29-31).

அப்படியானால், அப்போஸ்தலருடைய அந்த மூன்று பகுதிகளிலும் அந்நியபாஷைகளில் பேசுதல் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்வதற்ககு ஏன் சான்றுகளாக இருக்கின்றன? அப்போஸ்தலர் 2-ஆம் அதிகாரத்தில், அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெற்று மற்றும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க அவரால் அதிகாரமும் பெற்றதாக பதிவு செய்கிறது. அப்போஸ்தலர்கள் பிற மொழிகளில் (தாய்மொழிகள்) பேச முடிந்தது, எனவே அவர்கள் அந்த மொழிகளில் ஜனங்களுடன் சத்தியத்தை பகிர்ந்துகொள்ள முடிந்தது. அப்போஸ்தலனாகிய பேதுரு அப்போஸ்தலர் 10-ஆம் அதிகாரத்தில் யூதர்-அல்லாத ஜனங்களிடம் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ள அனுப்பப்படுகிறார். பேதுருவும் மற்ற ஆரம்பகால கிறிஸ்தவர்களும், யூதர்களாக இருந்ததால், சபைக்கு புறஜாதிகளை (யூத அல்லாதவர்கள்) ஏற்றுக்கொள்வதற்கு கடினமான காரியமாக இருந்தது. அப்போஸ்தலர்கள் பெற்றிருந்த அதே பரிசுத்த ஆவியானவர் புறஜாதிகள் பெற்றுள்ளதை நிரூபிப்பதற்காக புறஜாதிகள் அந்நியபாஷையிலே பேசும்படி தேவன் பெலப்படுத்தினார் (அப்போஸ்தலர் 10:47; 11:17).

அப்போஸ்தலர் 10:44-47 வரையிலுள்ள வசனங்கள் இவ்வாறு விவரிக்கிறது: “இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிகொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும் தேவனைப் புகழுகிறதையும், பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள். அப்பொழுது பேதுரு: நம்மைப்போலப் பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதாபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா?” பேதுரு பின்னர் தேவன் புறஜாதிகளை இரட்சிக்கிறார் என்பதற்கு ஆதாரமாக இந்த சந்தர்ப்பத்தை மீண்டும் குறிப்பிடுகிறார் (அப்போஸ்தலர் 15:7-11).

அந்நியபாஷைகளில் பேசுவது என்பதை எல்லா கிறிஸ்தவர்களும், தங்கள் இரட்சகராக இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது, பரிசுத்த ஆவியானவர் மூலமாக ஞானஸ்நானம் பெறும்போதெல்லாம் எதிர்பார்க்கப்படுவதாக எங்கும் கொடுக்கப்படவில்லை. உண்மையில், புதிய ஏற்பாட்டில் உள்ள அனைத்து இரட்சிக்கப்படுகிற சம்பவங்களிலும், அந்த சூழலில் அந்நிய மொழிகளில் பேசும் இரண்டு பதிவு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கான ஒரு குறிப்பிட்ட நோக்கம் கொண்ட ஒரு அற்புதமான வரமாக அந்நியபாஷையில் பேசுதல் இருந்தது. பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரே ஆதாரமாக அல்லது வழியாக அந்நியபாஷையில் பேசுதல் இருந்ததில்லை, இருந்திருக்கவும் இல்லை.

English



முகப்பு பக்கம்

அந்நியபாஷைகளில் பேசுதல் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டதற்கு ஆதாரமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries