settings icon
share icon
கேள்வி

கடைசிக்காலங்களில் உயிர்பிழைத்து வாழுதல் - நான் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?

பதில்


பெரும்பாலும், மக்கள் எதிர்காலத்தைப் பற்றி நினைக்கும் போது கவலையை அனுபவிக்கிறார்கள்; இருப்பினும், அது அப்படி இருக்க வேண்டியதில்லை. தேவனை அறிந்தவர்களுக்கு, எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்கள் ஆர்வத்தையும் ஆறுதலையும் தருகின்றன. உதாரணமாக, தேவனை அறிந்த மற்றும் விசுவாசிக்கும் ஒரு பெண்ணை விவரிப்பதைக் கவனியுங்கள், நீதிமொழிகள் 31:25, "அவள் வருங்காலத்தைப்பற்றியும் மகிழுகிறாள்" என்று கூறுகிறது.

எதிர்காலத்தைப் பற்றி மனதில் கொள்ள வேண்டிய இரண்டு முக்கியமான எண்ணங்கள் இருக்கின்றன, முதலில், தேவன் இறையாண்மையுள்ளவர் மற்றும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவர். அவருக்கு எதிர்காலம் தெரியும் மற்றும் என்ன நடக்கும் என்பதை முற்றிலும் அவர் கட்டுப்படுத்துகிறார். வேதாகமம் கூறுகிறது, "முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி, உராய்ஞ்சுகிற ஒரு பட்சியைக் கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனை தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன். அதைச் செய்து முடிப்பேன்" (ஏசாயா 46:9-11, முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது).

எதிர்காலத்தைப் பற்றி நினைவில் கொள்ள வேண்டிய இரண்டாவது விஷயம் என்னவென்றால், வேதாகமம் "இறுதி காலங்களில்" அல்லது "பிந்தைய நாட்களில்" என்ன நடக்கும் என்பதை வரையறுத்து கோடிட்டுக் காட்டுகிறது. வேதாகமம் மனிதகுலத்திற்கு தேவனுடைய வெளிப்பாடாக இருப்பதாலும், தேவன் எதிர்காலத்தை முற்றிலுமாய் அறிந்திருப்பதாலும் மற்றும் கட்டுப்படுத்துவதாலும் (மேலே ஏசாயா தீர்க்கதரிசி சொல்வது போல்), எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று வேதாகமம் பேசும்போது, நாம் அதை முற்றிலுமாக நம்பலாம். எதிர்காலத்தைப் பற்றிய முன்னறிவிப்புகளைப் பற்றி, வேதாகமம் கூறுகிறது, "தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்" (2 பேதுரு 1:21). இந்த சத்தியம் தெளிவாக உள்ளது மற்ற மதங்களில் அல்லது நோஸ்ட்ராடமஸ் போன்ற தனிநபர்களால் சொல்லப்பட்ட பொய்யான தீர்க்கதரிசனங்களைப் போலல்லாமல், வேதாகமம் ஒருபோதும் தவறினதில்லை—ஒவ்வொரு முறையும் வேதாகமம் எதிர்கால நிகழ்வை முன்னறிவித்தபோது, அது சொன்னது போலவே நடந்தது.

கடைசிக்காலங்களை எவ்வாறு புரிந்துகொள்வது மற்றும் உயிர்வாழ்வது என்பதை கருத்தில் கொள்ளும்போது, இந்த மூன்று கேள்விகளுக்கு பதிலளிக்கவும்:

1. எதிர்காலத்தைக் குறித்து வேதாகமம் என்ன சொல்கிறது என்பதை நான் எப்படி வியாக்கியானம் செய்ய வேண்டும் (வேதாகமத் தீர்க்கதரிசனம்)?

2. கடைசிக்காலங்களில் சம்பவிக்கும் என்று வேதாகமம் என்னச் சொல்கிறது?

3. எதிர்காலத்தைக் குறித்து வேதாகமம் என்னச் சொல்கிறது என்பது இன்று நான் வாழும் வாழ்க்கைமுறையை எவ்வாறு பாதிக்க வேண்டும்?

வேதாகமத் தீர்க்கதரிசனத்தை எப்படி வியாக்கியானம் செய்வது

கடைசிக்காலம் தொடர்பான பகுதிகளை வியாக்கியானம் செய்யும் போது என்ன முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் பல கண்ணோட்டங்கள் உள்ளன. வெவ்வேறு விசுவாச கோட்பாடுகளை ஆதரிக்கும் நல்லவர்கள் இருந்தாலும், வேதாகமத் தீர்க்கதரிசனத்தை (1) எழுத்தியல் பூர்வமாக, (2) எதிர்கால பார்வையுடன், மற்றும் (3) "ப்ரீமில்லனியல்" முறையில் வியாக்கியானம் செய்யப்படுவதை நம்புவதற்கு நல்ல காரணம் இருக்கிறது. ஒரு எழுத்தியல் பிரகாரமான விளக்கத்தை ஊக்குவிப்பது என்பது கிறிஸ்துவின் முதல் வருகையைப் பற்றிய 300 க்கும் மேற்பட்ட தீர்க்கதரிசனங்கள் உள்ளன, அவை அனைத்தும் எழுத்தியல் பிரகாரம் நிறைவேற்றப்பட்டன. மேசியாவின் பிறப்பு, வாழ்க்கை, காட்டிக்கொடுத்தல், மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றைச் சுற்றியுள்ள முன்னறிவிப்புக்கள் வெறுமனே உருவகமாகவோ அல்லது ஆவிக்குரிய ரீதியிலோ நிறைவேற்றப்படவில்லை. இயேசு எழுத்தியல் பூர்வமாக பெத்லகேமில் பிறந்தார், அற்புதங்களைச் செய்தார், நெருங்கிய சிநேகிதனால் 30 வெள்ளிக் காசுகளுக்காக காட்டிக் கொடுக்கப்பட்டார், அவரது கைகளிலும் கால்களிலும் ஆணிகளால் அடிக்கப்பட்டார், கள்ளர்கள் நடுவில் மரித்தார், ஒரு செல்வந்தனின் கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டார், மற்றும் அவர் மரித்த மூன்று நாட்களுக்குப் பிறகு உயிர்த்தெழுந்தார் . இந்த விவரங்கள் அனைத்தும் இயேசு பிறப்பதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கத்தரிசனமாக முன்னறிவிக்கப்பட்டு அவை எழுத்தியல் பிரகாரம் நிறைவேறின. மேலும், பல்வேறு தீர்க்கதரிசனங்களில் (எ.கா., வலுசர்ப்பங்கள், குதிரை வீரர்கள், முதலியன) அடையாளங்களாக பயன்படுத்தப்பட்டாலும், இவை அனைத்தும் சிங்கமாகவும் ஆட்டுக்குட்டியாநவராகவும் பேசப்பட்டதைப் போலவே, நேரடி மனிதர்களையும் நிகழ்வுகளையும் சித்தரிக்கின்றன.

எதிர்காலக் கண்ணோட்டத்தைப் பற்றி, தானியேல் மற்றும் வெளிப்படுத்துதல் போன்ற தீர்க்கதரிசன புத்தகங்களில் வரலாற்று நிகழ்வுகள் மட்டுமல்ல, எதிர்கால நிகழ்வுகளின் முன்னறிவிப்புகளும் உள்ளன என்று வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது. யோவானுக்கு அவருடைய நாளின் சபைகளுக்கான செய்திகள் வழங்கப்பட்ட பிறகு, கடைசிக்காலத்தில் என்ன நிகழும் என்பது பற்றிய தரிசனங்களைப் பெற்றார். யோவானிடம், "இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன்" என்று கூறப்பட்டதைக் காண்கிறோம் (வெளிப்பாடு 4:1, முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது).

எதிர்காலக் கண்ணோட்டத்திற்கான இன்னும் வலுவான வாதம், இஸ்ரவேல் தேசத்தைப் பற்றி தேவன் ஆபிரகாமுக்கு (ஆதியாகமம் 12 & 15) அளித்த வாக்குறுதிகளை உள்ளடக்கியது. ஆபிரகாமுடனான தேவனுடைய உடன்படிக்கை நிபந்தனையற்றது, மற்றும் ஆபிரகாமின் சந்ததியினருக்கு அவருடைய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதால், இஸ்ரேலுக்கான வாக்குறுதிகளின் எதிர்கால பார்வைக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

கடைசியாக, தீர்க்கதரிசனத்தை "பிரீமில்லேனியல்" முறையில் விளக்குவதைப் பொறுத்தவரை, இதன் பொருள், முதலில், சபை எடுத்துக்கொள்ளப்படும், பின்னர் உலகம் ஏழு வருட உபத்திரவ காலத்தை அனுபவிக்கும், பின்னர் இயேசு கிறிஸ்து பூமியில் ஆட்சி செய்யத் திரும்புவார் அதாவது 1,000 எழுத்தியல் பூர்வமான ஆண்டுகளுக்கு ஆட்சிபுரியத் திரும்பி வருவார் (வெளிப்படுத்தல் 20).

ஆனால் அதற்கு முன்பதாக என்ன சம்பவிக்கும் என்று வேதாகமம் சொல்கிறது?

கடைசிக்காலங்களில் என்ன சம்பவிக்கும் என்று வேதாகமம் சொல்கிறது?

துரதிர்ஷ்டவசமாக, கிறிஸ்து திரும்பி வருவதற்கு முன்பு பேரழிவுகள், மனிதனின் பாவம் மற்றும் மத விசுவாசத்துரோகம் ஆகியவற்றை வேதாகமம் முன்னறிவிக்கிறது. பவுல் எழுதுகிறார், "மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வரும். . . . பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்” (2 தீமோத்தேயு 3:1, 13). உலகமானது தேவனையும், அவருடைய வார்த்தையையும் அவருடைய ஜனங்களையும் தொடர்ந்து நிராகரித்துக்கொண்டே இருக்கும்.

எதிர்காலத்தில் சில நாள் - யாருக்கும் தெரியாத ஒரு நாள் - பெந்தெகொஸ்தே நாளன்று முதல் நூற்றாண்டில் தொடங்கிய சபையின் யுகத்தை, சபை எடுத்துக்கொள்ளப்படுதல் என்று அழைக்கப்படும் ஒரு நிகழ்வு மூலமாக தேவன் முடிவுக்குக் கொண்டுவருவார் (அப்போஸ்தலர் 2). அந்த நேரத்தில், தேவன் தமது கடைசி நியாயத்தீர்ப்புகளுக்கு ஆயத்தமாகி கிறிஸ்துவிலுள்ள அனைத்து விசுவாசிகளையும் பூமியிலிருந்து நீக்குகிறார். சபை எடுத்துக்கொள்ளப்படுதல் பற்றி, பவுல் கூறுகிறார், "இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார். கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்" (1 தெசலோனிக்கேயர் 4:14-18).

சபை எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு முன்பதாக வருகிற சமாதானத்தின் சீர்கேடு மற்றும் பேரழிவின் அதிகரிப்பு பூமியிலிருந்து எண்ணற்ற மக்கள் காணாமல் போகும்போது மாபெரும் குறைவு விகிதத்தை அடையும். இதுபோன்ற ஒரு நிகழ்வு உலகின் அனைத்து பிரச்சனைகளுக்கும் பதில்களைக் கொண்ட ஒரு வலுவான தலைவனுக்கு பீதியையும் ஒரு வல்லமை பொருந்திய திறமையான தலைவனுக்கான கோரிக்கைகளையும் ஏற்படுத்தும். வரலாற்றாசிரியர் அர்னால்ட் டோயன்பீ குறிப்பிட்டது போல், இந்த தலைவனின் ஆயத்தம் சில காலமாக நடந்து வருகிறது, "மனிதகுலத்திற்கு மேலும் மேலும் ஆபத்தான ஆயுதங்களை கட்டாயப்படுத்துவதன் மூலம், அதே நேரத்தில் உலகை பொருளாதார ரீதியாக மேலும் ஒன்றோடொன்று சார்ந்திருக்கச் செய்யும், தொழில்நுட்பம் மனிதகுலத்தை அத்தகைய நிலைக்கு கொண்டு வந்துள்ளது. உலக ஒற்றுமை மற்றும் அமைதியைக் கொடுப்பதில் வெற்றிபெறக்கூடிய எந்தவொரு புதிய ராயனையும் தெய்வமாக்குவதற்கு துயரத்தின் அளவுக்குத் தக்கதான நிலையில் நாம் பழுத்திருக்கிறோம். புதுப்பிக்கப்பட்ட ரோமப் பேரரசிலிருந்து, ஐரோப்பிய பத்து-பகுதிகளின் தேசனகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (தானியேல் 7:24; வெளிப்படுத்துதல் 13:1), அந்திக்கிறிஸ்து எழும்பி இஸ்ரவேல் தேசத்துடன் ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திடுவான், இது கிறிஸ்துவின் இரண்டாவது வருகைக்கு தேவனுடைய தீர்க்கதரிசன ஏழு வருட கவுண்டவுனை அதிகாரப்பூர்வமாக தொடங்கும் (தானியேல் 9:27).

மூன்றரை ஆண்டுகள், அந்திக்கிறிஸ்து பூமியை ஆட்சி செய்வான் மற்றும் சமாதானத்தை உறுதிப்படுத்துவான், ஆனால் இது ஒரு பொய்யான அமைதியின் உடன்படிக்கையாகும், இது பூமியின் மக்களை அவனது கண்ணியில் சிக்க வைக்கும். வேதாகமம் கூறுகிறது, "சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை” (1 தெசலோனிக்கேயர் 5:3). யுத்தங்கள், பூமியதிர்ச்சிகள் மற்றும் பஞ்சங்கள் அதிகரிக்கும் (மத்தேயு 24:7) அந்திக்கிறிஸ்து 3.5-ஆண்டு ஆட்சி முடிவடையும் வரை, அவன் எருசலேமில் மீண்டும் கட்டப்பட்ட தேவாலயத்திற்குள் பிரவேசித்து தன்னை தேவனாக அறிவித்து அவனை ஆராதிக்கும்படி கோருவான் (2 தெசலோனியன் 2:4; மத்தேயு 24:15). அந்த சமயத்தில்தான் மெய்யான தேவன் அவனது சவாலுக்கு பதிலளிக்கிறார். இன்னும் 3.5 வருடங்களுக்கு, இதுவரை பார்த்திராத ஒரு பெரும் உபத்திரவம் உண்டாகும். "உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும். அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்" என்று இயேசு முன்னறிவித்தார் (மத்தேயு 24:21-22).

பெரும் உபத்திரவத்தின் போது சொல்லிமுடியா உயிரிழப்பு மற்றும் பூமியில் பெரும் நாசம் ஏற்படும். மேலும், அதிக எண்ணிக்கையிலான ஜனங்கள் கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பார்கள், ஆனால் பலர் தங்கள் உயிரையும் இழக்கவேண்டி வரும். தேவன் நியாயந்தீர்ப்பதற்காக உலகின் அவிசுவாசிகளாகிய படைகளை கூடிவரச்செய்து அவர் இன்னும் யாவற்றையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டிருப்பார். இந்த நிகழ்வைப் பற்றி, யோவேல் தீர்க்கதரிசி இவ்வாறு எழுதினார், “நான் சகல ஜாதியாரையும் கூட்டி யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகப்பண்ணி, அவர்கள் என் ஜனத்தையும் இஸ்ரவேலென்னும் என் சுதந்தரத்தையும் புறஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன்" (யோவேல் 3:2). அப்போஸ்தலனாகிய யோவான் யுத்தத்தை இப்படியாகப் பதிவு செய்கிறார்: “அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக்கண்டேன். அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது. . . . அப்பொழுது எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தான்” (வெளிப்படுத்துதல் 16:13-16).

இந்த கட்டத்தில், மேசியாவாக்கிய இயேசு திரும்பி வருவார், அவருடைய சத்துருக்களை அழிப்பார், மேலும் உலகத்தை தமது ஆளுமையில் கொண்டுவருவார், அது அவருடையது. "பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார். அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக்குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின்சென்றார்கள். புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார். ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது. பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன்; அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து: நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், சேனைத்தலைவர்களின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுயாதீனர் அடிமைகள், சிறியோர் பெரியோர், இவர்களெல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகாதேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான். பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன். அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள். மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன” (வெளிப்படுத்துதல் 19:11-21)

அர்மகெதோன் பள்ளத்தாக்கில் கூடியிருந்த அனைத்து படைகளையும் கிறிஸ்து தோற்கடித்த பிறகு, அவர் தமது பரிசுத்தவான்களுடன் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்வார் மற்றும் இஸ்ரவேலை அதனுடைய தேசத்தில் முழுமையாக மீட்டெடுப்பார். ஆயிரம் ஆண்டுகளின் முடிவில், சகல தேசத்தார் மற்றும் மீதமுள்ள அனைத்து மனிதகுலத்தினுடைய கடைசி நியாயத்தீர்ப்பு நிகழும், அதைத் தொடர்ந்து ஒரு நித்தியமான நிலை வரும்: ஒன்று தேவனுடன் செலவிடப்படுவது அல்லது அவரிடமிருந்து பிரிந்திருப்பது (வெளிப்படுத்தல் 20-21).

மேற்கண்ட நிகழ்வுகள் வெறுமனே ஊகங்கள் அல்லது சாத்தியக்கூறுகள் அல்ல - அவை எதிர்காலத்தில் துல்லியமாக நடக்கவிருக்கும் நிகழ்வுகளாகும். கிறிஸ்துவின் முதல் வருகையைப் பற்றிய அனைத்து வேதாகமத்தின் தீர்க்கதரிசனங்களும் நிறைவேறி உண்மையாகிவிட்டன, அதுபோலவே அவருடைய இரண்டாவது வருகையின் அனைத்து வேதாகமத் தீர்க்கதரிசனங்களும் நிறைவேறும்.

இந்த தீர்க்கதரிசனங்களின் உண்மையைக் கருத்தில் கொண்டு, அவை இப்போது நம் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்? பேதுரு இந்த கேள்வியைக் கேட்கிறார்: "இப்படி இவைகளெல்லாம் அழிந்துபோகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்! தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்" (2 பேதுரு 3:11-12).

இன்று நம்மேலுள்ள வேதாகமத் தீர்க்கதரிசனத்தின் தாக்கம்

வேதாகமத் தீர்க்கதரிசனத்திற்கு நான்கு பதில்கள் நமக்கு இருக்க வேண்டும். முதலாவது கீழ்ப்படிதல், மேலே உள்ள வசனங்களில் பேதுரு இதைக்குறித்துதான் பேசுகிறார். இயேசு எப்பொழுதும் நாம் அவருடைய வருகைக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறுகிறார், இது எந்த நேரத்திலும் நடக்கலாம் (மார்க் 13:33-37) மற்றும் நம் நடத்தைக்கு நாம் வெட்கப்படாத வகையில் வாழ வேண்டும்.

இரண்டாவது பதில் ஆராதனை. தேவன் தமது கடைசிக்கால நியாயத்தீர்ப்புகளில் இருந்து தப்பிக்க ஒரு வழியை வழங்கியுள்ளார்—இயேசுவின் மூலம் வழங்கப்படும் இலவசமான இரட்சிப்பின் பரிசு தான் அது. நாம் அவருடைய இரட்சிப்பைப் பெற்று அவருக்கு முன்பாக நன்றியுடன் வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். பூமியில் நம் ஆராதனை ஒரு நாள் சொர்க்கத்தில் ஆராதனையாக மாறும்: "தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோமென்று புதிய பாட்டைப் பாடினார்கள்” (வெளிப்படுத்துதல் 5:9-10).

மூன்றாவது பதில் பிரகடனம். தேவனுடைய இரட்சிப்பின் செய்தி மற்றும் அவரது இரண்டாவது வருகையின் சத்தியம் அனைவருக்கும் கேட்க, குறிப்பாக இன்னும் விசுவாசியாதவர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும். தேவனிடம் திரும்புவதற்கும் அவருடைய வரவிருக்கும் கோபத்திலிருந்து இரட்சிக்கப்படுவதற்கும் நாம் அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். வெளிப்பாடு 22:10 கூறுகிறது, "பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள, தீர்க்கதரிசன வசனங்களை முத்திரைபோடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது."

தேவனுடைய தீர்க்கதரிசன வார்த்தையின் கடைசி பதில் ஊழியம். அனைத்து விசுவாசிகளும் தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதிலும் நல்ல செயல்களைச் செய்வதிலும் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும். கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்புகளின் ஒரு பகுதி விசுவாசிகளால் செய்யப்படும் வேலைகளாக இருக்கும். ஒரு கிறிஸ்தவர் பரலோகத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதை அவர்கள் தீர்மானிக்கவில்லை, ஆனால் ஒவ்வொரு விசுவாசியும் அவருக்கு தேவன் கொடுத்த வரங்களை என்ன செய்தார்கள் என்பதை அவர்கள் காட்டுகிறார்கள். இந்த நியாயத்தீர்ப்பைப் பற்றி பவுல் கூறுகையில், "சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டு" (2 கொரிந்தியர் 5:10).

சுருக்கமாக, தேவன் உலகின் அனைத்து நிகழ்வுகள் மற்றும் மக்கள் மீது இறையாண்மை கொண்டவர். அவர் எல்லாவற்றையும் உறுதியாகக் கட்டுப்படுத்துகிறார் மற்றும் அவர் தொடங்கிய எல்லாவற்றிற்கும் அவர் சரியான முடிவைக் கொண்டுவருவார். ஒரு பழைய கிறிஸ்தவ பாடல் இதை இவ்வாறு கூறுகிறது: "அனைத்தும் தேவனுடைய படைப்பு ... ஒரு கையால் வடிவமைக்கப்பட்டது ... சாத்தான் மற்றும் இரட்சிப்பு ... ஒரு கட்டளையின் கீழ்."

வேதாகமம் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட புத்தகம் என்பதற்கு நிறைவேறிய தீர்க்கதரிசனம் ஒரு சான்று. நூற்றுக்கணக்கான பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் ஏற்கெனவே நிறைவேறிவிட்டன, மேலும் கடைசிக் காலங்களைப் பற்றி அது என்ன சொல்கிறது என்பதும் நிறைவேறும் என்று முடிவு செய்வது நியாயமானது ஆகும். இயேசுவை அறிந்தவர்கள் மற்றும் அவரை தங்கள் சொந்த இரட்சகராகவும் கர்த்தராகவும் நம்பியவர்களுக்கு, அவருடைய வருகை அவர்களின் ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கையாக இருக்கும் (தீத்து 2:13). ஆனால் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்தவர்களுக்கு, அவர் அவர்களுடைய பரிசுத்த பயங்கரமாக இருப்பார் (2 தெசலோனிக்கேயர் 1:8). முக்கிய விஷயம் இதுதான்: கடைசிக் காலங்களில் தொடர்ந்து உயிர்வாழ, நீங்கள் கிறிஸ்துவின் விசுவாசி என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: "தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்" (1 தெசலோனிக்கேயர் 5:9).

English



முகப்பு பக்கம்

கடைசிக்காலங்களில் உயிர்பிழைத்து வாழுதல் - நான் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries