settings icon
share icon
கேள்வி

இந்த வாழ்க்கையில் முழுமையான பரிசுத்தமாக்கப்படுதல் / முழுமையான பாவமற்ற வாழ்க்கை சாத்தியமா?

பதில்


எபேசியர் 4:13, கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியெழுப்பவே ஆவிக்குரிய வரங்கள் கொடுக்கப்படுகின்றன என்று கூறுகிறது, “பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்." சில மொழிபெயர்ப்புகள் நாம் "பூரணர்களாகுவோம்" ("சீர்பொருந்தும்பொருட்டு" என்பதற்குப் பதிலாக) என்று கூறுகின்றன, மேலும் இதிலிருந்து நாம் இந்த வாழ்க்கையில் பாவமற்ற பரிபூரணத்தை அடையலாம் என்று சிலர் தவறாக நினைத்திருக்கிறார்கள். நாம் மாம்சத்தில் இருக்கும் போது, நாம் எப்போதும் பாவ சுபாவத்துடன் போராடுவோம் என்று வேதாகமம் போதிக்கிறது (ரோமர் 7:14-24 ஐப் பார்க்கவும்). நாம் பரலோகத்தை சென்று அடையும் வரை யாரும் "பூரணமாக" (பாவமற்றவர்களாக) இருக்க மாட்டார்கள்.

எபேசியர் 4:13ல் "சீர்பொருந்தும்பொருட்டு" என்று மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தை டெலியோஸ் என்ற கிரேக்க வார்த்தையாகும். இது புதிய ஏற்பாடு முழுவதும் "பரிபூரணம்," "முழுமையானது," "முழு வளர்ச்சியடைந்தது" மற்றும் "முதிர்ச்சியடைந்தது" என்று பொருள்பட பயன்படுத்தப்படுகிறது. எபேசியர் 4:13 போதிப்பது என்னவென்றால், நாம் கிறிஸ்துவில் எவ்வளவு அதிகமாக வளர்கிறோமோ, அவ்வளவுக்கு நாம் ஒரு திருச்சபையாக பலமாகவும் ஒற்றுமையாகவும் இருப்போம். பாவம் செய்வதை நிறுத்துவோம் என்று வசனம் போதிக்கவில்லை.

ஜனங்கள் சில சமயங்களில் குழப்பமடையும் மற்றொரு பகுதி கொலோசெயர் 1:28 ஆகும், இது சில மொழிபெயர்ப்புகளில், பவுல் "எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு" விரும்புகிறார் என்று கூறுகிறது. மேலும், கொலோசெயர் 4:12-ல் பவுல் நாம் “நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று” என்று ஜெபிக்கிறார். இரண்டு வசனங்களிலும், பரிபூரணத்திற்கான கிரேக்க வார்த்தையானது "முதிர்ச்சியடைந்த" அல்லது "முழுமையான" என எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் மாறாக "பாவம் இல்லாதவர்" என்று அர்த்தப்படுத்தப்படக் கூடாது.

மனிதர்களாகிய நாம் இவ்வுலகில் ஆதாமின் சுபாவத்துக்குக் கட்டுப்பட்டிருக்கிறோம். நாம் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், தேவனுக்கு எதிராக நாம் இன்னும் பாவம் செய்வோம். இது அனைவருக்கும் பொருந்தும். அப்போஸ்தலனாகிய பவுல் பேதுரு பாரபட்சமாக இருப்பதைக் கண்டித்தார் (கலாத்தியர் 2:11-13). தனது ஊழியத்தின் பிற்பகுதியில், பவுல் தன்னைப் பாவிகளில் பிரதானப்பாவி என்று அழைக்கிறார் (1 தீமோத்தேயு 1:15). பேதுரு, யாக்கோபு, யோவான், பவுல் ஆகிய அனைவரும் தாங்கள் பரிபூரணமானவர்கள் அல்ல என்பதை ஒப்புக்கொண்டனர். அப்படியானால், நீங்கள் அல்லது நான் எப்படி வித்தியாசமாக எதையும் கோர முடியும்?

திருச்சபையின் எடுத்துக்கொள்ளப்படுதல் வரை உண்மையான பரிபூரணம் வராது, நாம் ஆகாயத்தில் இயேசுவை சந்திக்க எழும்புவோம் (1 தெசலோனிக்கேயர் 4:17). அந்த நேரத்தில் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது உயிர்த்தெழுப்பப்படுவார்கள், மேலும் உயிருள்ளவர்களின் சரீரங்கள் மறுரூபமாக்கப்படும் (பிலிப்பியர் 3:20, 21; 1 கொரிந்தியர் 15:54). நாம் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போம் (2 கொரிந்தியர் 5:10) அங்கு நமது கிரியைகள் நியாயந்தீர்க்கப்பட்டு வெகுமதிகள் வழங்கப்படும் (1 கொரிந்தியர் 3:9-15). நம் மீட்பு முழுமையடையும், நம் பாவம் என்றென்றும் நீங்கும். என்றென்றும் பாவமில்லாத பரிபூரணத்தில் கிறிஸ்துவோடு வாழ்ந்து ஆட்சி செய்வோம்.

English



முகப்பு பக்கம்

இந்த வாழ்க்கையில் முழுமையான பரிசுத்தமாக்கப்படுதல் / முழுமையான பாவமற்ற வாழ்க்கை சாத்தியமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries