settings icon
share icon
கேள்வி

சில சமயங்களில் விசுவாசிகள் நோய்வாய்ப்படுவது தேவனுடைய சித்தமா?

பதில்


தேவனுடைய ராஜ்யபாரத்தைப் பற்றிய வேதாகாமக் கோட்பாடானது தேவன் எல்லாவற்றிலும் வல்லவர் என்று கூறுகிறது. கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் அனைத்தையும் அவர் முழுமையாகக் கட்டுப்படுத்துகிறார், அவருடைய அதிகார வரம்பிற்கு வெளியே எதுவும் நடக்காது. ஒன்று அவர் நேரடியாக சகல காரியங்களிலும் ஈடுபடுகிறார் அல்லது சம்பவிக்கிற சகல காரியங்களிலும் அவர் செயலற்ற முறையில் எல்லாவற்றையும் அனுமதிக்கிறார். ஆனால் எதையாவது நடக்க அனுமதிப்பதும், எதையாவது நடக்க வைப்பதும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள் ஆகும். உதாரணமாக, பரிபூரணமான, பாவமற்ற ஆதாம் மற்றும் ஏவாளின் உருவாக்கத்தை தேவன் ஏற்படுத்தினார்; பின்னர் அவர்கள் அவருக்கு எதிராக கலகம் செய்ய அனுமதித்தார். அவர் அவர்களைப் பாவம் செய்ய வைக்கவில்லை, அவர் நிச்சயமாக அவர்களைத் தடுத்திருக்க முடியும், ஆனால் அவர் தனது சொந்த நோக்கங்களுக்காகவும் அவருடைய சரியான திட்டத்தை கொண்டுவரவும் அப்படிச் செய்ய விரும்பவில்லை. அந்த கலகம் எல்லா விதமான தீமைகளையும் கொண்டு வந்தது, அந்த தீமையானது தேவனால் ஏற்படுத்தப்படவில்லை ஆனால் அவரால் இருக்க அனுமதிக்கப்பட்டது.

நோய் என்பது இரண்டு பரந்த வகையான தீமைகளின் ஒரு வெளிப்பாடாகும் அதாவது தார்மீக மற்றும் இயற்கையான தீமைகள். தார்மீக தீமை என்பது மனிதனிடம் மனிதனின் மனிதாபிமானமற்ற தன்மை. இயற்கை தீமைகள் என்பது இயற்கை பேரழிவுகள் மற்றும் உடல் நோய் போன்றவற்றால் ஆனது. தீமை என்பது ஒரு தவறான போக்கு அல்லது சீர்கேடு ஆகும், அது முதலில் நன்றாக இருந்தது, ஆனால் இப்போது அது முன்னிருந்த நிலையை இழந்துள்ளது. நோய்வாய்ப்படலில், நோய் என்பது ஒரு நல்ல ஆரோக்கியம் இல்லாத ஒரு நிலையைக் குறிக்கிறது. தீமைக்கான கிரேக்க வார்த்தை, பொனெரோஸ், உண்மையில் ஒரு கொடுமையின் கோரத்தை குறிக்கிறது, இது ஒரு நல்ல மற்றும் ஆரோக்கியமான நிலையை சீர்கெட்டுப்போகப் பண்ணுகிறது.

ஆதாம் பாவம் செய்தபோது, அந்த பாவத்தின் விளைவுகளை மனிதகுலம் முழுவதும் அனுபவிக்கத்தக்கதாக அவர் கண்டனம் செய்தார், அந்த பாவத்தின் விளைவுகளில் ஒன்று நோய் ஆகும். ரோமர் 8:20-22 கூறுகிறது, " சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது”. பாவத்தில் வீழ்ந்துபோன வீழ்ச்சியைத் தொடர்ந்து சிருஷ்டிப்பை விரக்திக்கு உட்படுத்திய தேவன்—சிருஷ்டிப்பை அதன் பிணைப்பிலிருந்து பாவத்தினுடைய அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்கான திட்டத்தைக் கொண்டிருக்கிறார், அவர் கிறிஸ்துவின் மூலம் அந்த அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவித்தார்.

அந்நாள் வரை, தேவன் தமது ராஜ்யபாரத்தைக் கொண்டுவருவதற்கும், தன்னை மகிமைப்படுத்துவதற்கும், அவருடைய பரிசுத்த நாமத்தை உயர்த்துவதற்கும் நோய் மற்றும் பிற தீமைகளைப் பயன்படுத்துகிறார். சில சமயங்களில், அவர் அற்புதமாக நோய்களை குணப்படுத்துகிறார். இயேசு இஸ்ரவேல் தேசத்தின் வழியாக கடந்து சென்று அனைத்து விதமான நோய்களையும் வியாதிகளையும் குணப்படுத்தினார் (மத்தேயு 4:23) மற்றும் நோய்வாய்ப்பட்டு லாசரு மரித்தபின் அவனை உயிரோடு எழுப்பினார். மற்ற சமயங்களில், தேவன் நோயை ஒழுக்க நடவடிக்கைக்காக அல்லது பாவத்திற்கு எதிரான தீர்ப்பாக பயன்படுத்துகிறார். பழைய ஏற்பாட்டில் உள்ள ராஜாவாகிய உசியா குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்டார் (2 நாளாகமம் 26:19-20). "உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார்" (தானியேல் 4) என்பதை அவர் புரிந்துகொள்ளும் வரை நேபுகாத்நேச்சார் தேவனால் பைத்தியம் பிடித்தவனானான். ஏரோது தேவனுடைய மகிமையை தன் மீது எடுத்துக் கொண்டதால் கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான் (அப். 12:21-23). தேவன் நோயை அனுமதித்த ஒரு நிகழ்வு கூட உள்ளது-குருட்டுத்தன்மை-பாவத்திற்கான தண்டனையாக அல்ல, ஆனால் அந்த குருட்டுத்தன்மையின் மூலம் அவரையும் அவருடைய வல்லமைமிக்க கிரியைகளையும் வெளிப்படுத்த தேவன் சித்தங்கொண்டார் (யோவான் 9:1-3).

நோய் வரும்போது, அது நம் வாழ்வில் தேவனுடைய நேரடி தலையீட்டின் விளைவாக இருக்காது, மாறாக அது பாவத்தில் வீழ்ந்துபோன உலகம், பாவத்தில் விழுந்துபோன சரீரங்கள் மற்றும் மோசமான ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகளின் விளைவாக இருக்கலாம். நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்று வேதப்பூர்வமான மேற்கோள்காட்டிகள் இருந்தாலும், (3 ஜான் 2), அனைத்து நோய்களும் வியாதிகளும் அவரின் நோக்கங்களுக்காக என்பதை, நாம் புரிந்து கொண்டாலும் இல்லாவிட்டாலும் அனுமதிக்கப்படுகின்றன.

நோய் நிச்சயமாக மனிதனின் பாவத்தின் வீழ்ந்துபோன வீழ்ச்சியின் விளைவாகும், ஆனால் தேவன் அனைத்தையும் மிகவும் தம் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிறார், மேலும் தீமை எவ்வளவு தூரம் வரை செல்ல முடியும் அல்லது செல்ல வேண்டும் என்பதை அவர் தீர்மானிப்பார் (சாத்தான் யோபுவைச் சோதித்த சோதனைகளை அனுமதித்தது போலவே - சாத்தான் தேவனால் கொடுக்கப்பட்ட அந்த எல்லைகளை மீற அனுமதிக்கப்படவில்லை) அவர் வேதாகமத்தில் ஐம்பது தடவைகளுக்கு மேல் சர்வ வல்லமையுள்ளவர் என்று நமக்குச் சொல்லுகிறார், அவருடைய சரியான திட்டத்தை செயல்படுத்துவதற்கு நாம் எடுக்கும் (நல்லதும் கெட்டதுமான) தேர்வுகளுடன் அவருடைய ராஜ்யபாரம் எவ்வாறு ஒன்றிணைக்கிறது என்பதைப் பார்க்க மெய்யாக ஆச்சரியமாக இருக்கிறது (ரோமர் 8:28).

இந்த வாழ்க்கையில் விசுவாசிகள் மற்றும் நோய், வியாதி, மற்றும்/அல்லது பல வாதைகளால் அவதிப்படுபவர்களுக்கு, அவர்கள் தங்கள் துன்பத்தின் மூலம் தேவனை மகிமைப்படுத்த முடியும் என்ற அறிவு, அவர் ஏன் அதை அனுமதித்தார் என்ற நிச்சயமற்ற தன்மையைத் தூண்டுகிறது, அவர்கள் நித்தியத்தில் அவருக்கு முன்பாக நிற்கும் வரை அவர்கள் உண்மையில் அவற்றைப் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. அந்த நேரத்தில், எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படும், அல்லது ஒருவேளை இன்னும் துல்லியமாக கூறவேண்டுமெனில், அப்போது நாம் கேள்விகளைப் பற்றி கவலைப்படவே மாட்டோம்.

Englishமுகப்பு பக்கம்

சில சமயங்களில் விசுவாசிகள் நோய்வாய்ப்படுவது தேவனுடைய சித்தமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries