யாராவது தேவனை எப்பொழுதாவது பார்த்திருக்கிறார்களா?


கேள்வி: யாராவது தேவனை எப்பொழுதாவது பார்த்திருக்கிறார்களா?

பதில்:
தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை என்று வேதாகமம் சொல்லுகிறது (யோவான் 1:18). யாத்திராகமம் 33:20-ல், “நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது என்றார்” என்று தேவன் உரைக்கிறார். இந்த வேதவாக்குகள், தேவனைக் "காணும்" அநேக ஜனங்களை விவரிக்கும் மற்ற வேதவாக்கியங்களோடு முரண்படுகின்றன. உதாரணமாக, மோசே தேவனை "முகமுகமாய்" பேசுவதை யாத்திராகமம் 33:11 விவரிக்கிறது. தேவனுடைய முகத்தை யாரும் பார்க்க முடியாதென்றால் மோசே எவ்வாறு தேவனை "முகமுகமாய்" பேச முடிந்தது மற்றும் உயிரோடு இருக்க முடிந்தது? இந்த நிகழ்வில், "முகமுகமாய்" என்கிற சொற்றொடர், அவர்கள் மிக நெருக்கமான ஐக்கியத்தில் இருப்பதை சுட்டிக்காட்டும் ஒரு பேச்சு உருவகம் ஆகும். இரண்டு மனிதர்கள் நெருங்கி உரையாடுவதைப்போலவே தேவனும் மோசேயும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஆதியாகமம் 32:30 ல், யாக்கோபு தேவன் ஒரு தேவதூதனாக தோன்றியதைக் கண்டார்; அவர் உண்மையிலேயே தேவனைக் காணவில்லை. சிம்சோனின் பெற்றோர் தாங்கள் தேவனைக் கண்டிருந்ததை உணர்ந்தபோது மிகவும் பயந்தார்கள் (நியாயாதிபதிகள் 13:22), ஆனால் அவர்கள் அவரை ஒரு தேவதூதராகத் தோன்றியதையே கண்டார்கள். இயேசு மாம்சத்தில் தேவனாய் இருந்தார் (யோவான் 1:1, 14) எனவே ஜனங்கள் அவரைக் கண்டபோது தேவனைக் கண்டார்கள். எனவே, ஆம், தேவன் "காணப்பட்டார்" மற்றும் பலர் தேவனை "கண்டார்கள்". அதே நேரத்தில், தேவன் தம்முடைய மகிமை முழுவதையும் உடையவராக இருந்த நிலையில் ஒருவரும் அவரைக் கண்டதில்லை. நம்முடைய விழுந்துப்போன இந்த பாவமான மனித நிலைமையில், தேவன் தம்மை முழுமையாக வெளிப்படுத்தியிருந்தால், நாம் பட்சிக்கப்பட்டு அழிக்கப்பட்டு போயிருப்போம். ஆகையால், தேவன் தமக்குத்தாமே ஒரு திரையை அமைத்துக்கொண்டு தமது பரிபூரணமான மகிமையை மறைத்துக் கொண்டு, நாம் அவரை “பார்க்க” முடிகிற வடிவங்களில் தோன்றுகிறார். இருப்பினும், தேவனை அவரது மகிமையும் பரிசுத்தமும் பொருந்தினவராக காண்பதைக்காட்டிலும் இது வித்தியாசமானது ஆகும். தேவனுடைய தரிசனங்கள், உருவங்கள், மற்றும் தோற்றங்களை ஜனங்கள் கண்டார்கள், ஆனால் ஒருவரும் அவரை அவருடைய முழுமையான நிலையில் சகல மகிமையோடும் கண்டதில்லை (யாத்திராகமம் 33:20).

English


முகப்பு பக்கம்
யாராவது தேவனை எப்பொழுதாவது பார்த்திருக்கிறார்களா?