கேள்வி
நீங்கள் எனக்கு சில கிறிஸ்தவ உறவின் ஆலோசனைகளை வழங்க முடியுமா?
பதில்
நாங்கள் அடிக்கடி பின்வரும் வகையிலான கேள்விகளைப் பெறுகிறோம்: "எனக்கு இரண்டு வெவ்வேறு நபர்களில் ஆர்வமாக உள்ளது...எனது காதலனாக நான் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?" அல்லது, "நான் ஒரு உறவில் இருக்கிறேன், என் காதலி '_____' செய்தாள்/சொன்னாள்; அதனால், நான் அவளுடன் எனது உறவை முறித்துக் கொள்ளவேண்டுமா?" இந்த வகையான கேள்விகளுக்கு நாம் பதிலளிப்பது மிகவும் கடினம். GotQuestions.org ஒரு கிறிஸ்தவ உறவுகளைக் குறித்த ஆலோசனை மையம் அல்ல. கொடுக்கப்பட்ட சூழ்நிலையைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது என்பதை உங்களுக்குச் சொல்ல நாங்கள் எப்போதும் முயற்சிப்போம். இருப்பினும், உறவுகள் சம்பந்தப்பட்ட ஆலோசனை சிக்கல்களைப் பொறுத்தவரை, நம்மிடம் கேட்கப்படும் சூழ்நிலைகளை வேதாகமம் அரிதாகவே குறிப்பிடுகிறது. வேதாகமம் தேவனோடு நமக்குள்ள உறவில் அதிக அக்கறை கொண்டுள்ளது.
உறவுமுறை ஆலோசனைகளை வழங்க நாங்கள் மிகவும் தயங்குகிறோம். ஒரு தனிப்பட்ட பிரச்சினைக்கு ஒரு கட்டுரை மூலம் புத்திசாலித்தனமான ஆலோசனை வழங்குவது கடினம். சம்பந்தப்பட்ட நபர்களை நாங்கள் தனிப்பட்ட முறையில் அறியாதபோது, எல்லா விவரங்களையும் நாங்கள் பெறவில்லை, மற்றும்/அல்லது கதையின் ஒரு பக்கத்தை மட்டுமே நாங்கள் பெறும்போது கிறிஸ்தவ உறவுகள் குறித்த ஆலோசனைகளை வழங்குவது மிகவும் கடினம். கிறிஸ்தவர்களுக்கு அதிகாரபூர்வமான உறவுமுறை ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் நாங்கள் தேவனுக்காகப் பேசுவதாக எண்ணுவதில்லை.
அப்படிச் சொன்னால், எங்கள் ஆலோசனை என்ன? உங்கள் உறவைப் பற்றிய விஷயத்தில் நீங்கள் தேவனிடம் பேச வேண்டும் என்பது மட்டுமே எங்கள் ஆலோசனை. கர்த்தரிடம் ஜெபியுங்கள், அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பதை உங்களுக்குத் தெளிவாக வெளிப்படுத்தும்படி அவரிடம் கேளுங்கள் (பிலிப்பியர் 4:6-7). உங்களுக்கு ஞானத்தையும் பகுத்தறிவையும் கொடுக்கும்படி தேவனிடம் கேளுங்கள் (யாக்கோபு 1:5). தேவன் அவருடைய சித்தத்தின்படி கேட்கப்படும் ஜெபக் கோரிக்கைகளை கேட்டு பதில் வழங்குவதாக வாக்களித்திருக்கிறார் (1 யோவான் 5:14-15). ஞானமாகவும் விவேகமாகவும் இருப்பது நிச்சயமாக தேவனுடைய சித்தமாயிருக்கிறது. நீங்கள் நல்ல உறவு சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். கிறிஸ்தவர்கள் தங்கள் உறவுகளின் விளைவாக மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நீங்கள் தேவனிடம் திறந்த இருதயத்துடனும், மனத்தாழ்மையுடனும் கேட்டால், அவர் உங்களுக்குத் தேவையான உறவுகள் குறித்த ஆலோசனைகளை வழங்குவார்.
கடைசியாக, திருமணமாகி பல வருடங்களாக தேவனோடு வாழ்ந்துகொண்டிருக்கும் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களிடம் ஞானமான ஆலோசனையைக் கண்டறியவும். உங்கள் போதகர், மூப்பர்கள் அல்லது பிற முதிர்ந்த திருச்சபைத் தலைவர்களிடம் வழிகாட்டுதலைத் தேடுங்கள். அவர்களின் பல வருட அனுபவம், அவர்களின் வாழ்க்கையில் ஞானம் மற்றும் தேவனைப் பற்றிய அறிவைப் பேச அவர்களுக்கு உதவுகிறது.
English
நீங்கள் எனக்கு சில கிறிஸ்தவ உறவின் ஆலோசனைகளை வழங்க முடியுமா?