settings icon
share icon
கேள்வி

விபச்சாரத்தைப்/வேசித்தனத்தைப் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது? விபச்சாரியை/வேசியை தேவன் மன்னிப்பாரா?

பதில்


விபச்சாரம் பெரும்பாலும் "பழமையான தொழில்" என்று குறிப்பிடப்படுகிறது. உண்மையில், வேதாகம காலங்களில் கூட பெண்கள் பணம் சம்பாதிப்பதற்கான பொதுவான வழியாக இது இருந்தது. விபச்சாரம் ஒழுக்கக்கேடானது என்று வேதாகமம் சொல்கிறது. நீதிமொழிகள் 23:27-28 கூறுகிறது, " வேசி ஆழமான படுகுழி; பரஸ்திரீ இடுக்கமான கிணறு. அவள் கொள்ளைக்காரனைப்போல பதிவிருந்து, மனுஷருக்குள்ளே பாதகரைப் பெருகப்பண்ணுகிறாள்."

விபச்சாரிகளுடன் ஈடுபடுவதை தேவன் தடைசெய்கிறார், ஏனென்றால் அத்தகைய ஈடுபாடு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். "பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும். அவள் செய்கையின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமும் கருக்குள்ள பட்டயம்போல் கூர்மையுமாயிருக்கும். அவள் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்” (நீதிமொழிகள் 5:3-5 NKJV).

விபச்சாரமானது திருமணங்கள், குடும்பங்கள் மற்றும் வாழ்க்கையை அழிப்பது மட்டுமல்லாமல், உடல் மற்றும் ஆவிக்குரிய மரணத்திற்கு வழிவகுக்கும் வகையில் ஆவி மற்றும் ஆத்துமாவை அழிக்கிறது. தேவனுடைய விருப்பம் என்னவென்றால், நாம் பரிசுத்தமாக இருக்க வேண்டும், அவருடைய பயன்பாடு மற்றும் மகிமைக்கான கருவிகளாக இருக்க நமது சரீரத்தை பயன்படுத்த வேண்டும் (ரோமர் 6:13). 1 கொரிந்தியர் 6:13 கூறுகிறது, "சரீரமோ வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது; கர்த்தரும் சரீரத்திற்கு உரியவர்."

விபச்சாரம் பாவமானது என்றாலும், விபச்சாரிகள்/வேசிகள் தேவனுடைய மன்னிப்பை பெரும் எல்லைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ராகாப் என்ற வேசியை அவர் பயன்படுத்தியதை வேதாகமம் பதிவு செய்கிறது. அவள் கீழ்ப்படிந்ததன் விளைவாக, அவளும் அவளுடைய குடும்பமும் வெகுமதியும் ஆசீர்வாதமும் பெற்றனர் (யோசுவா 2:1; 6:17-25). புதிய ஏற்பாட்டில், விபச்சாரத்தில் ஈடுபட்ட பாவியாக அறியப்பட்ட ஒரு பெண் — இயேசு அவளை மன்னித்து பாவத்திலிருந்து சுத்திகரிப்பதற்கு முன்பு — ஒரு பரிசேயனின் வீட்டிற்குச் சென்றபோது இயேசுவுக்குச் சேவை செய்யும் வாய்ப்பைக் கண்டார். அந்தப் பெண், கிறிஸ்து யார் என்பதை உணர்ந்து, விலையுயர்ந்த வாசனை திரவியத்தை அவரிடம் கொண்டு வந்தார். வருத்தம் மற்றும் வேதனையில், மனந்திரும்பி, அந்த பெண் அழுது, அவரது பாதங்களில் நறுமணத்தை ஊற்றி, தன் தலைமுடியால் துடைத்தாள். "ஒழுக்கமற்ற" பெண்ணிடமிருந்து இந்த அன்பின் செயலை ஏற்றுக்கொண்டதற்காக பரிசேயர்கள் இயேசுவை விமர்சித்தபோது, அவர் அவர்களுக்கு அறிவுறுத்தினார் மற்றும் பெண்ணின் ஆராதனையை ஏற்றுக்கொண்டார். அவளுடைய விசுவாசத்தின் காரணமாக, கிறிஸ்து அவளுடைய எல்லா பாவங்களையும் மன்னித்தார், மேலும் அவள் அவருடைய ராஜ்யத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டாள் (லூக்கா 7:36-50).

தம்மைப் பற்றிய சத்தியத்தை நம்ப மறுத்தவர்களிடம் இயேசு கிறிஸ்து பேசுகையில், "ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் மனஸ்தாபப்படவில்லை என்றார்" (மத்தேயு 21:31-32).

மற்றவர்களைப் போலவே, விபச்சாரிகளும் தேவனிடமிருந்து இரட்சிப்பையும் நித்திய ஜீவனையும் பெறுவதற்கும், அவர்களின் எல்லா அநியாயங்களிலிருந்தும் சுத்திகரிக்கப்படுவதற்கும், ஒரு புதிய வாழ்க்கையை பெறுவதற்கும் வாய்ப்பு உள்ளது! அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், தங்கள் பாவ வாழ்க்கையிலிருந்து விலகி, கிருபையும் இரக்கமும் எல்லையற்றதாய் கொண்டிருக்கிற ஜீவனுள்ள தேவனிடம் திரும்புவதுதான். "இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின!" (2 கொரிந்தியர் 5:17).

English


முகப்பு பக்கம்
விபச்சாரத்தைப்/வேசித்தனத்தைப் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது? விபச்சாரியை/வேசியை தேவன் மன்னிப்பாரா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries