settings icon
share icon
கேள்வி

செழிப்பின் சுவிசேஷத்தை குறித்து வேதாகமம் என்ன சொல்கிறது?

பதில்


செழிப்பின் சுவிசேஷம் “விசுவாச வார்த்தை இயக்கம்” என்றும் அழைக்கப்படுகிறது. இதில் விசுவாசிகள் தேவனை பயன்படுத்த போதிக்கப்படுகின்றனர் ஆனால் வேதாகம கிறிஸ்தவம் முற்றிலும் மாறுபட்டதாகும். தேவன் விசுவாசிகளை பயன்படுத்துகிறார். விசுவாச வார்த்தை அல்லது செழிப்பின் உபதேசம் பரிசுத்த ஆவியனவரை விசுவாசிகள் தங்களின் விருப்பப்படி செய்வதற்கு தகுதிபடுத்தும் ஒரு வல்லமையாக மட்டுமே பார்கிறது. பரிசுத்த ஆவியானவர் ஆள்தன்மையுள்ளவர் மற்றும் அவர் விசுவாசிகளை தேவனுடைய சித்தத்தை செய்ய தகுதிபடுத்துகிறார் என்றும் வேதாகமம் போதிக்கிறது. ஆதி திருச்சபையில் பாதிப்புண்டாக்கிய அழிவை ஏற்படுத்தும் மத அமைப்புகளுக்கு இந்த செழிப்பின் சுவிசேஷம் மிகவும் ஒத்துப்போகிறது. பவுல் மற்றும் பிற அப்போஸ்தலர்கள் தவறான உபதேசத்தை பரப்புகிற கள்ளப்போதகர்களுக்கு இடங்கொடுக்கவில்லை மற்றும் இணங்கவில்லை. இவர்கள் ஆபத்தான கள்ள போதகர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டனர் மற்றும் கிறிஸ்தவர்கள் இவர்களை தவிர்க்கும்படியாக வற்புறுத்தப்பட்டனர்.

1 தீமோத்தேயு 6:5, 9-11ல் பவுல் இப்படிபட்ட மனிதர்களை குறித்து தீமோத்தேயுவை எச்சரிக்கிறார். “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்” (வசனம் 9). பணத்தின் மீதுள்ள நாட்டம் கிறிஸ்தவர்களுக்கு ஆபத்தான வழியாகும் மற்றும் இதைதான் தேவன் எச்சரிக்கிறார்: “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்” (வசனம் 10). செல்வந்தராக மாறுவதுதான் சரியான இலக்காக இருக்குமென்றால் இயேசு அதை நாடியிருப்பார். ஆனால் அதை அவர் விரும்பவே இல்லை அதற்கு பதிலாக அவர் தலைசாய்க்க இடமில்லாதவராக இருந்தார் (மத்தேயு 8:20) மற்றும் அதையே தன்னுடைய சீஷர்கள் கைக்கொண்டு செய்யும்படியாக போதித்தார். செழிப்பை குறித்து கரிசனையுள்ள ஒரே சீஷன் யூதாஸ் மட்டும் தான் என்பது ஞாபகப்படுத்தப்படுகிறது.

பவுல் பொருளாசையை விக்கிரகாராதனை என்று கூறுகிறார் (எபேசியர் 5:5) அதுமட்டுமன்றி விபசாரம் மற்றும் பொருளாசையை குறித்த செய்திகளை கொண்டுவருபவர்களை விலக்கும் படியாக எபேசியர்களுக்கு பவுல் போதிக்கிறார் (எபேசியர் 5:6-7). செழிப்பின் உபதேசம் தேவன் தன்னிச்சையாக செயல்படுவதை தடுக்கிறது அதாவது தேவன் எல்லாவற்றிற்கும் தேவன் அல்ல எனென்றால் நாம் அவரை செயல்பட விடுவிக்காத பட்சத்தில் அவரால் செயல்பட முடியாது என்பது அர்த்தமாகும். விசுவாச வார்த்தையின் அடிப்படையிலான விசுவாசம் தேவனிடத்தில் கீழ்படிதலோடுள்ள விசுவாசமல்ல. ஆனால் விசுவாசமாகிய சூத்திரத்தின் மூலம் நாம் ஆவிக்குரிய நீதியை திறமையாக கையாளமுடியும் எனென்றால் விசுவாசமே உலகத்தை ஆளுகிறது என்று செழிப்பின் உபதேசம் போதிக்கிறது. “விசுவாச வார்த்தை” பெயருக்கு ஏற்றாற்போல் நாம் யாரை விசுவாசிக்கிறோம் என்பதை விட நாம் எதை விசுவாசத்துடன் பேசுகிறோம் அல்லது எந்த சத்தியத்தை தழுவுகிறோம் மற்றும் நம்முடைய இருதயத்திலே வைத்திருக்கிறோம் என்பது தான் முக்கியம் என்று இவர்கள் போதிக்கின்றனர்.

“நேர்மறை அறிக்கையே” என்பது இந்த விசுவாச இயக்கத்தினரின் பிரசித்திப்பெற்ற வார்த்தையாகும். இது வார்த்தைக்கு தாமே உருவாக்கும் வல்லமை இருக்கிறது என்கிற உபதேசத்தை குறிக்கிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதுவே உங்களுக்கு நடைபெறும் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்று வார்த்தையில் விசுவாசத்தை மையப்படுத்தும் செழிப்புபதேச போதகர்கள் வலியுறுத்துகின்றனர். தேவனிடத்தில் நீ எதிர்பார்க்கும் நன்மையை எந்தவித தடுமாற்றமுமில்லாமல் நேர்மறையான வார்த்தைகளினால் அதை அறிக்கையிடவேண்டும். அப்பொழுது தேவன் அதற்கு பதிலலிக்க கடமைப்பட்டவர் ஆவார் (தேவனிடத்திலிருந்து மனிதன் எதையும் கேட்கலாம் என்பது போல்). தேவன் நம்மை ஆசிர்வதிக்கும் திறன் நம்முடைய விசுவாச அறிக்கையை சார்ந்தே இருக்கிறது. யாக்கோபு 4:13-16ல் தெளிவாக இதற்கு மாறுபட்ட கருத்து சொல்லப்பட்டிருக்கிறது: “நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம் பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிய பின்பு தோன்றாமற்போகிற புகையைப் போலிருக்கிறதே.” நாளைக்கு என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியாது அல்லது நாம் உயிரோடிருப்போமா என்பதே நமக்கு தெரியாது அப்படியிருக்க எதிர்காலத்தில் நடக்க இருப்பவைகளுக்காக இப்பொழுது பேசுவது எப்படி.

செழிப்புக்கு முக்கியதுவம் கொடுப்பதற்கு பதிலாக வேதாகமம் அதை நாடுவதற்கு எதிராக எச்சரிக்கிறது. விசுவாசிகள் குறிப்பாக திருச்சபையின் தலைவர்கள் (1 தீமோத்தேயு 3:3) பணத்தாசையில் இருந்து விலகியிருக்கவேண்டும் (எபிரெயர் 13:5). பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது (1 தீமோத்தேயு 6:10). “பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல” என்று இயேசு எச்சரிக்கிறார் (லூக்கா 12:15). பணம் சம்பாதித்தல் மற்றும் இந்த வாழ்க்கையில் பொருள்களை சேர்த்தல் ஆகிய விசுவாச வார்த்தையாளர்களின் உபதேசத்திற்கு மாறுபட்ட நிலையில் அதற்கு எதிராக இயேசு “பூமியில் உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம், இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும், இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்” என்று சொன்னார். மத்தேயு 6:24-ல் செழிப்பின் உபதேசத்திற்கும் நம்முடைய சுவிசேஷத்திற்கும் இடையேயுள்ள சமரசமான முரண்பாட்டை இயேசு மிக அருமையாக சுருக்கி கூறுகிறார், “தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது”.

English



முகப்பு பக்கம்

செழிப்பின் சுவிசேஷத்தை குறித்து வேதாகமம் என்ன சொல்கிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries