settings icon
share icon
கேள்வி

உபத்திரவ காலத்திற்கு முன்பாகவே சபை எடுத்துக்கொள்ளப்படும் என்கிற கருத்துப்பாங்கின் பலம் மற்றும் பலவீனங்கள் என்ன (பிரிடிரிபுலேஷனிசம்)?

பதில்


எதிர்கால சாஸ்திரத்தோடு சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியையும் (கடைசிக்காலத்தைக் குறித்த ஆய்வு) கருத்தில் கொள்ளும்போது, கிட்டத்தட்ட அனைத்து கிறிஸ்தவர்களும் இந்த மூன்று காரியங்களை ஒப்புக்கொள்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்: 1) உலகம் இதுவரைக் கண்டிராத உபத்திரவத்தின் காலம் இனி வரும், 2) உபத்திரவத்திற்குப் பிறகு, கிறிஸ்து பூமியில் தமது ராஜ்யத்தை நிலைநாட்ட திரும்பி வருவார், 3) யோவான் 14:1-3, 1 கொரிந்தியர் 15:51-52, மற்றும் 1 தெசலோனிக்கேயர் 4:16-17 இல் விவரிக்கப்பட்டுள்ளபடி, சாவுக்கேதுவாகிய நிலையில் இருந்து சாவாமையைத் தரித்துக்கொள்ளும் ஒரு மறுரூபமடைதல் விசுவாசிகளுக்கு இருக்கும். சபை எடுத்துக்கொள்ளப்படுதலின் காலத்தைப் பற்றிய ஒரே கேள்வி: உபத்திரவம் மற்றும் இரண்டாவது வருகை தொடர்பாக அது எப்போது சம்பவிக்கும்?

பல வருடங்களாக சபை எடுத்துக்கொள்ளப்படுதலின் நேரத்தைப் பற்றிய மூன்று முக்கிய கோட்பாடுகள் உள்ளன: பிரிடிரிபுலேஷனிசம் (அதாவது உபத்திரவம் தொடங்குவதற்கு முன்பாகவே சபை எடுத்துக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை), மிட்டிரிபுலேஷனிசம் (அதாவது உபத்திரவத்தின் நடுவில் சபை எடுத்துக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை), மற்றும் போஸ்ட்டிரிபுலேஷனிசம் (அதாவது உபத்திரவத்தின் முடிவில் சபை எடுத்துக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை). இந்த கட்டுரை குறிப்பாக உபத்திரவம் தொடங்குவதற்கு முன்பாகவே சபை எடுத்துக்கொள்ளப்படும் என்கிற பார்வையைப் பற்றியது.

உபத்திரவக்காலம் தொடங்குவதற்கு முன்பே சபை எடுத்துக்கொள்ளப்படும் என்று பிரிடிரிபுலேஷனிசம் கற்பிக்கிறது. அந்த நேரத்தில், சபையானது கிறிஸ்துவை மத்திய வானத்தில் சந்திக்கும், பின்னர் சிறிது காலம் கழித்து அந்திக்கிறிஸ்து வெளிப்பட்டு உபத்திரவக்காலம் தொடங்குகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சபை எடுத்துக்கொள்ளப்படுதல் மற்றும் கிறிஸ்துவின் இரண்டாவது வருகை (அவருடைய ராஜ்யத்தை அமைக்க) குறைந்தது ஏழு வருடங்கள் இடையில் வருகின்றன. இந்த பார்வையின் படி, சபையானது எந்த உபத்திரவத்தையும் அனுபவிப்பதில்லை.

வேதப்பூர்வமாக, பிரிடிரிபுலேஷனிசப் பார்வையைப் பாராட்ட நிறைய உள்ளது. உதாரணமாக, சபையானது கோபத்திற்கு நியமிக்கப்படவில்லை (1 தெசலோனிக்கேயர் 1:9-10, 5:9), மற்றும் விசுவாசிகள் கர்த்தருடைய நாளில் முந்திக்கொள்ள மாட்டார்கள் (1 தெசலோனிக்கேயர் 5:1-9). பிலதெல்பியா சபை "பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலத்திற்குத்" தப்புவிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது (வெளிப்படுத்துதல் 3:10). வாக்குறுதியானது சோதனைக்காலத்தின் வழியாக பாதுகாக்கப்படுவார்கள் என்பதில்லை, ஆனால் சோதனைக்காலத்திலிருந்து, அதாவது சோதனையின் காலத்தில் செல்லாதபடிக்கு அதற்கு முன்பாகவே விடுவிக்கப்படுவார்கள் என்பதை நினைவில் கொள்க.

வேதாகமத்தில் காணப்படாதவற்றிலும் பிரிடிரிபுலேஷனிசம் ஆதரவைப் பெறுகிறது. வெளிப்படுத்தல் புஸ்தகத்தின் முதல் மூன்று அதிகாரங்களில் "சபை" என்ற வார்த்தை பத்தொன்பது முறை வருகிறது, ஆனால், குறிப்பிடத்தக்க வகையில், பிறகு இந்த வார்த்தை 22 ஆம் அதிகாரம் வரை மீண்டும் பயன்படுத்தப்படுவதில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வெளிப்படுத்தலில் உள்ள உபத்திரவத்தின் முழு விளக்கத்தில், சபை என்ற வார்த்தை இல்லை. உண்மையில், உபத்திரவம் தொடர்பான வேதப்பகுதியில் வேதாகமம் "சபை" என்ற வார்த்தையை ஒருபோதும் பயன்படுத்துவதில்லை.

பிரிடிரிபுலேஷனிசம் என்னும் கோட்பாடு ஒன்றுதான் இஸ்ரவேலுக்கும் சபைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை மிகத்தெளிவாக பராமரிக்கும் ஒரே கோட்பாடு மற்றும் ஒவ்வொன்றிற்கும் தேவனுக்கு இருக்கும் தனித்தனி திட்டங்களையும் அங்கீகரிக்கிறது. தானியேல் 9:24 இன் எழுபது "ஏழு" தானியேலின் ஜனம் (யூதர்கள்) மற்றும் தானியேலின் பரிசுத்த நகரம் (எருசலேம்) மீது வரும் என்று விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்க்கதரிசனம் கடைசி எழுபதாம் வாரம் (உபத்திரவக்காலம்) சபைக்கு அல்ல, மாறாக இஸ்ரேல் மற்றும் எருசலேமுக்கு சுத்திகரிப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான காலம் என்பதை தெளிவுபடுத்துகிறது.

மேலும், பிரிடிரிபுலேஷனிசம் வரலாற்று ரீதியாகவும் ஆதரவைக் கொண்டுள்ளது. யோவான் 21:22-23 வரை, ஆரம்பகால சபை கிறிஸ்துவின் வருகையை அன்றே உடனடியாக சம்பவிக்கும் நிகழுவுபோல் தோன்றியது தெளிவாகிறது, அதாவது இயேசு எந்த நேரத்திலும் திரும்ப வருவார் என்று எதிர்பார்த்தார்கள். இல்லையெனில், யோவானின் வாழ்நாளில் இயேசு திரும்பி வருவார் என்ற வதந்தி வெறுமனே நீடித்திருக்காது. மற்ற இரண்டு சபை எடுத்துக்கொள்ளப்படும் கோட்பாடுகளுடன் ஒத்துப்போகாத உடனடித்தனம், பிரிடிரிபுலேஷனிசத்தின் ஒரு முக்கிய கோட்பாடாகும்.

தேவனுடைய குணாதிசயத்திற்கும், உலகின் நியாயத்தீர்ப்பிலிருந்து நீதிமான்களை விடுவிப்பதற்கான அவருடைய விருப்பத்திற்கும் ஏற்ப பிரிடிரிபுலேஷனிசப் பார்வை இருப்பதாக தெளிவாக தெரிகிறது. தேவனுடைய இரட்சிப்பின் வேதாகம எடுத்துக்காட்டுகளில் உலகளாவிய ஜலப்பிரளயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட நோவா; சோதோமிலிருந்து விடுவிக்கப்பட்ட லோத்து; மற்றும் எரிகோவிலிருந்து விடுவிக்கப்பட்ட ராகப் இவற்றில் உட்படும் (2 பேதுரு 2:6-9).

பிரிடிரிபுலேஷனிசத்தின் ஒரு பலவீனமாக உணரப்படுவது 1800-களின் முற்பகுதி வரை விரிவாக வடிவமைக்கப்படாத ஒரு தேவாலயக் கோட்பாடாக அதன் ஒப்பீட்டளவில் சமீபத்திய வளர்ச்சியாக இது இருப்பதாகும். மற்றொரு பலவீனம் என்னவென்றால், பிரிடிரிபுலேஷனிசம் இயேசு கிறிஸ்துவின் மீண்டும் திரும்புதலை இரண்டு "கட்டங்களாக"—சபை எடுத்துக்கொள்ளப்படுதல் மற்றும் இரண்டாம் வருகையை—பிளவுபடுத்துகிறது ஆனால் அதேசமயம் வேதாகமம் அத்தகைய எந்த கட்டங்களையும் தெளிவாக வரையறுக்கவில்லை.

பிரிடிரிபுலேஷனிசப் பார்வை எதிர்கொள்ளும் மற்றொரு சிரமம் என்னவென்றால், உபத்திரவக் காலத்தில் பரிசுத்தவான்கள் பூமியிலே இருப்பார்கள் (வெளிப்படுத்துதல் 13:7, 20:9). பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்கள் மற்றும் உபத்திரவக் காலத்தின் பரிசுத்தவான்களை புதிய ஏற்பாட்டின் சபையிலிருந்து வேறுபடுத்துவதன் மூலம் பிரிடிரிபுலேஷனிச கோட்பாட்டாளர்கள் இதற்கு பதிலளிக்கின்றனர். சபை எடுத்துக்கொள்ளப்படுதலில் உயிரோடுள்ள விசுவாசிகள் உபத்திரவத்திற்கு முன்பாக அகற்றப்படுவார்கள், ஆனால் உபத்திரவத்தின் போது கிறிஸ்துவிடம் வருபவர்களும் இருப்பார்கள்.

பிரிடிரிபுலேஷனிச பார்வையின் இறுதி பலவீனம் மற்ற இரண்டு கோட்பாடுகளால் பகிரப்பட்டுள்ளது: அதாவது, எதிர்கால நிகழ்வுகள் குறித்து ஒரு தெளிவான காலவரிசையை வேதாகமம் கொடுக்கவில்லை. வேதம் ஒரு பார்வையை மற்றொன்றுக்கு வெளிப்படையாகக் கற்பிக்கவில்லை, அதனால்தான் கடைசிக்காலங்கள் மற்றும் தொடர்புடைய தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு ஒருமித்து ஒத்திசைவாக்கப்பட வேண்டும் என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

English



முகப்பு பக்கம்

உபத்திரவ காலத்திற்கு முன்பாகவே சபை எடுத்துக்கொள்ளப்படும் என்கிற கருத்துப்பாங்கின் பலம் மற்றும் பலவீனங்கள் என்ன (பிரிடிரிபுலேஷனிசம்)?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries