இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுவது என்பது எதைக் குறிக்கிறது?


கேள்வி: இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுவது என்பது எதைக் குறிக்கிறது?

பதில்:
இயேசு கிறிஸ்துவை நீங்கள் உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா? இந்தக் கேள்வியை சரியாக புரிந்துகொள்ளவேண்டுமெனில், நீங்கள் முதலாவதாக "இயேசுகிறிஸ்து," "சொந்தமான," மற்றும் "இரட்சகர்" ஆகிய பதங்களைப் புரிந்து கொள்ளவேண்டும்.

இயேசு கிறிஸ்து யார்? இயேசு கிறிஸ்து ஒரு நல்ல மனிதர், மிகப்பெரிய போதகர், அல்லது தேவனுடைய தீர்க்கதரிசி என்று கூட பலர் ஒப்புக்கொள்வர். இயேசுவைக் குறித்த இந்தக் காரியங்கள் நிச்சயமாகவே உண்மையானவை, ஆனால் அவர் உண்மையில் யாராக இருக்கிறார் என்பதை இவை முழுமையாக குறிப்பிடுவதில்லை. இயேசு மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன், மனித உருவில் வந்த இறைவன் என வேதாகமம் நமக்கு கூறுகிறது (யோவான் 1:1,14) நமக்கு போதிக்க, நம்மை சுகமாக்க, நம்மை சரிப்படுத்த, நம்மை மன்னிக்க மற்றும் நமக்காக மரிக்க தேவன் உலகிற்கு வந்தார். இயேசு கிறிஸ்து தேவன், சிருஸ்டிகர் மற்றும் மாட்சிமையுள்ள ஆண்டவர் ஆவார். இந்த இயேசுவை நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா?

இரட்சகர் என்றால் என்ன? நமக்கு ஏன் ஒரு இரட்சகர் தேவை? நாம் எல்லாரும் பாவம் செய்தோம் என்றும் நாம் எல்லோரும் தீய செயல்களை செய்திருக்கிறோம் என்றும் வேதாகமம் நமக்கு கூறுகிறது (ரோமர் 3:10,18) நம் பாவத்தின் விளைவாக நாம் தேவகோபத்துக்கும் நியாத் தீர்ப்புக்கும் உரியவர்களானோம். முடிவிலாத அனாதி தேவனுக்கு எதிராக நாம் செய்த பாவங்களுக்கான நீதியான தண்டனை நித்திய தண்டனையே (ரோமர் 6:23); வெளிப்படுத்தல் 20:11-15). ஆகவே தான் நமக்கு ஒரு இரட்சகர் தேவை.

இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்து நமக்கு பதிலாக நம்முடைய இடத்தில் அவர் மரித்தார். இயேசுவின் மரணம் நம்முடைய பாவத்திற்கான விலைமதிப்பற்ற கிரயம் ஆகும் (2கொரிந்தியர் 5:21) நமது பாவங்களுக்கான தண்டனையை இயேசு தீர்த்தார் (ரோமர் 5:8). நாம் செலுத்தாமலிருப்பதற்காக இயேசு அதை செலுத்தி தீர்த்தார். இயேசுவின் மரணம் நம்முடைய பாவத்திலிருந்து நம்மை விடுவிக்க போதுமானதாயிருந்தது என்று அவருடைய உயிர்த்தெழுதல் நமக்கு நிருபிக்கிறது ஆகவேதான் இயேசு ஒருவர் மாத்திரமே இரட்சகர் ஆக இருக்கிறார் (யோவான். 14:6, அப்போஸ்தலர். 4:12) உங்கள் இரட்சகர் இயேசுவை நம்புகிறீர்களா?

இயேசு உங்கள் "சொந்த" இரட்சகரா? ஆலயத்திற்கு செல்வது, சில சடங்காச்சாரங்களை செய்வது, சில பாவங்களை தவிர்ப்பது ஆகியவைதான் கிறிஸ்தவம் என அனேகர் கருதுகின்றனர். அது அல்ல கிறிஸதவம். உண்மையான கிறிஸ்தவம் என்பது இயேசுவுடனான தனிப்பட்ட உறவு ஆகும். உங்கள் சொந்த இரட்சகராக இயேசுவை ஏற்றுக் கொள்ளுதல் என்பது அவரில் உங்கள் விசுவாசம் மற்றும் நம்பிக்கையை வைப்பதைக் குறிக்கிறது. வேறொருவருடைய விசுவாசத்தினால் எவரும் இரட்சிக்கபடுவதில்லை.இரசிக்கப்படுகிறதற்கான ஒரே வழி இயேசுவை தனிப்பட்ட முறையில் உங்கள் இரட்சகராகவும், உங்கள் பாவங்களுக்கான விலைக்கிரயமாக அவரின் மரணத்தையும் அவருடைய உயிர்த்தெழுதலை நித்திய ஜீவனுக்கான உத்திரவாதமாகவும் ஏற்றுக் கொள்ளுவதே! (யோவான்3:16) இயேசு உங்கள் சொந்த இரட்சகரா?

நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புவீர்களானால், பின்வரும் வார்த்தைகளை தேவனிடம் கூறுங்கள்.. இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவிலும், சிலுவையில் அவர் செய்து முடித்த கிரியையிலும் வைக்கும் விசுவாசமும் மாத்திரமே பாவத்திலிருந்து உங்களை இரட்சிக்க முடியும். இந்த ஜெபமானது அவரில் உள்ள உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி, உங்கள் இரட்சிப்புக்காக அவர் அருளினவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்வதற்கான ஒரு வழி மாத்திரமே. "தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!"

நீங்கள் இங்கு உள்ளவற்றை வாசித்ததினால் கிறிஸ்துவுக்காக வாழும்படி ஒரு தீர்மானம் எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுவது என்பது எதைக் குறிக்கிறது?