பூகம்பங்கள், சூறாவளிகள் மற்றும் சுனாமிகள் போன்ற இயற்கை பேரழிவுகளை தேவன் ஏன் அனுமதிக்கிறார்?


கேள்வி: பூகம்பங்கள், சூறாவளிகள் மற்றும் சுனாமிகள் போன்ற இயற்கை பேரழிவுகளை தேவன் ஏன் அனுமதிக்கிறார்?

பதில்:
பூமியதிர்ச்சிகள், சூறாவளிகள், சுழற்காற்றுகள், சுனாமிகள், புயற்காற்றுகள், நிலச்சரிவுகள் மற்றும் பிற இயற்கை பேரழிவுகளை தேவன் ஏன் அனுமதிக்கிறார்? ஆசியாவில் 2004 ஆம் ஆண்டின் பிந்தைய காலத்தில் சுனாமியின் துயர சம்பவம், 2005 ஆம் ஆண்டில் தென்கிழக்கு அமெரிக்காவில் கத்ரீனா சூறாவளி, மற்றும் மியான்மரில் 2008 ஆம் ஆண்டின் சூறாவளி எண்ணற்ற ஜனம் தேவனுடைய நற்குணத்தை கேள்விக்குள்ளாக்கியது. இயற்கையின் பேரழிவுகள் பெரும்பாலும் "தேவனுடைய செயல்கள்" எனவும், பல ஆண்டுகள், பல தசாப்தங்கள் அல்லது பல நூற்றாண்டுகளாக சமாதானமான அமைதியான காலநிலையுடன் இந்த உலகம் சென்றதற்காக தேவனுக்கு அதேகேற்ற "நன்மதிப்பு" அளிக்கப்படவில்லை என்பது மெய்யாகவே வேதனையளிக்கிறது. தேவன் இந்த முழு பிரபஞ்சத்தையும் இயற்கையின் சட்டங்களையும் படைத்தார் (ஆதியாகமம் 1: 1). பெரும்பாலான இயற்கைப் பேரழிவுகள் இந்தச் சட்டங்களின் விளைவாகும். சூறாவளி, புயற்காற்று, மற்றும் சுழற்காற்று ஆகியவை காலநிலை மோதல் மாறுபாடுகளின் விளைவுகள் ஆகும். பூமிக்குரிய தட்டு கட்டமைப்பு மாறுவதன் விளைவாக பூகம்பங்கள் ஏற்படுகின்றன. சுனாமி நீருக்கடியில் உண்டாகும் பூகம்பத்தால் ஏற்படுகிறது.

இயற்கையின் இயல்புகள் எல்லாமும் இயேசு கிறிஸ்துவுக்குள் நிலைநிற்கிறது என்று வேதாகமம் கூறுகிறது (கொலோசெயர் 1:16-17). இயற்கை பேரழிவுகளை தேவன் தடுக்க முடியுமா? நிச்சயமாக! தேவன் சில நேரங்களில் வானிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறாரா? உபாகமம் 11:17 மற்றும் யாக்கோபு 5:17 ஆகியவற்றில் நாம் பார்க்கிறபடி, ஆம். தேவன் சில சமயங்களில் பாவத்திற்கு எதிரான தீர்ப்பாக இயற்கை பேரழிவுகள் உண்டாகும்படி செய்கிறார் என எண்ணாகமம் 16:30-34 வரையிலுள்ள வசனங்கள் காண்பிக்கிறது. இயற்கை நிகழ்வுகள் என விவரிக்கப்படும் பல நிகழ்வுகளை வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் விவரிக்கிறது (வெளிப்படுத்துதல் 6, 8, மற்றும் 16). ஒவ்வொரு இயற்கை பேரழிவும் தேவனிடமிருந்து வரும் தண்டனையா? நிச்சயமாக இல்லை.

தீய ஜனங்கள் தீய செயல்களைச் செய்ய தேவன் அனுமதிக்கிறதுபோலவே பாவத்தின் நிமித்தம் சபிக்கப்பட்ட பூமியும் அதன் விளைவாக உள்ள பேரழிவுகளை ஏற்படும்படி பூமியை அவர் அனுமதிக்கிறார். ரோமர் 8:19-21 வரையிலுள்ள வசனங்கள் நமக்கு சொல்லுகிறது, “மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.” பாவத்தில் வீழ்ந்துபோன மனிதகுலத்தின் வீழ்ச்சி நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த உலகம் உட்பட எல்லாவற்றையும் பாதிக்கின்றது. சிருஷ்டிப்பில் எல்லாமே "ஏமாற்றம்" மற்றும் "சிதைவு" ஆகியவற்றுக்கு உட்பட்டுள்ளன. பாவம் தான் இந்த இயற்கை பேரழிவுகளுக்கு இறுதி காரணமாக இருக்கிறது, மரணம், நோய், மற்றும் துன்பம் ஆகியவற்றிற்கு பாவம்தான் காரணமாக இருக்கிறது.

இயற்கை பேரழிவுகள் ஏன் ஏற்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். நாம் புரிந்துகொள்ள இயலாதது தேவன் ஏன் அவைகளை அனுமதிக்கிறார் என்பதே. சுனாமி ஆசியாவில் 225,000 ஜனங்களைக் கொல்லும்படியாக தேவன் ஏன் அனுமதித்தார்? கத்ரீனா சூறாவளி ஆயிரக்கணக்கான ஜனங்களின் வீடுகளை நாசமாக்கும்படி தேவன் ஏன் அனுமதித்தார்? ஒன்று, இத்தகைய சம்பவங்கள் இந்த வாழ்க்கையில் உள்ள நம் நம்பிக்கையை குலைத்து, நித்தியத்தைப் பற்றி சிந்திக்கும்படி நம்மை கட்டாயப்படுத்துகின்றன. வழக்கமாக பேரழிவுகளுக்குப் பிறகு திருச்சபைகளில் ஜனங்கள் நிரம்பியுள்ளனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வளவு மோசமாக இருக்கிறது மற்றும் சீக்கிரமாக கடந்துபோகிறது என்பதை உணர்கிறார்கள். நாம் அறிந்திருப்பது இதுதான்: தேவன் நல்லவர்! இயற்கை பேரழிவுகளின் போது பல அதிசயமான அற்புதங்கள் நிகழ்ந்தன. சில இயற்கை பேரழிவுகளின்போது மரணங்கள் அதிகம் நேரிடாதபடி தடுக்கப்பட்டுள்ளது. மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையில் தங்கள் முன்னுரிமைகளை மறுபரிசீலனை செய்யும்படிக்கு மாற்றியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் உதவி அனுப்பப்படுகிறது. கிறிஸ்தவ ஊழியங்களுக்கு உதவி செய்ய, சேவிக்க, ஆலோசனை அளிக்க, ஜெபிக்க, மற்றும் கிறிஸ்துவில் இரட்சிக்கப்படும் நம்பிக்கைக்குள் நடத்த வாய்ப்புகளை பெற்றிருக்கின்றன! தேவனால் பயங்கரமான துயர சம்பவங்களிலிருந்து மாபெரும் நல்ல காரியங்களைக் கொண்டுவர முடியும், கொண்டு வருவார் (ரோமர் 8:28).

English


முகப்பு பக்கம்
பூகம்பங்கள், சூறாவளிகள் மற்றும் சுனாமிகள் போன்ற இயற்கை பேரழிவுகளை தேவன் ஏன் அனுமதிக்கிறார்?