settings icon
share icon
கேள்வி

உபத்திரவ காலத்தின் நடுவில் சபை எடுத்துக்கொள்ளப்படும் (மிட்டிரிபுலேஷனிசம்) என்னும் கருத்துப்பாங்கின் பலம் மற்றும் பலவீனங்கள் என்ன?

பதில்


எதிர்கால சாஸ்திரத்தின் ரீதியாக, கிட்டத்தட்ட எல்லா கிறிஸ்தவர்களும் மூன்று விஷயங்களை ஒப்புக்கொள்கிறார்கள் என்பதை நினைவில் கொள்வது மிகவும் அவசியம்: 1) உலகம் இதுவரைக் கண்டிராத உபத்திரவத்தின் காலம் இனி வரும், 2) இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, மற்றும் 3) சாவுக்கேதுவாகிய நிலையில் இருந்து சாவாமையைத் தரித்துக்கொள்ளும் ஒரு மறுரூபமடைதல், இது பொதுவாக சபை எடுத்துக்கொள்ளப்படுதல் என்று அழைக்கப்படுகிறது (யோவான் 14:1-3; 1 கொரிந்தியர் 15:51-52; 1 தெசலோனிக்கேயர் 4:16-17). உபத்திரவம் மற்றும் இரண்டாம் வருகை தொடர்பாக சபை எடுத்துக்கொள்ளப்படுதல் எப்போது நிகழ்கிறது? என்பதுதான் ஒரு கேள்வியாக இருக்கிறது. சபை எடுத்துக்கொள்ளப்படுதலின் நேரத்தைப் பற்றிய மூன்று முக்கிய கோட்பாடுகள் முன்கூட்டியே (அதாவது உபத்திரவம் தொடங்குவதற்கு முன்பே சபை எடுத்துக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை), நடுவில் (அதாவது உபத்திரவத்தின் நடுவில் சபை எடுத்துக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை), மற்றும் பின்பாக (அதாவது உபத்திரவத்தின் முடிவில் சபை எடுத்துக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை). இந்த கட்டுரை குறிப்பாக நடுவில் சபை எடுத்துக்கொள்ளப்படும் என்ற பார்வையைப் பற்றியது.

உபத்திரவத்தின் மத்தியப் பாகத்தில் சபை எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழ்கிறது என்பதை மிட்ரிபுலேஷனிசம் போதிக்கிறது. அந்த நேரத்தில், ஏழாவது எக்காளம் ஊதப்படுகிறது (வெளிப்படுத்துதல் 11:15), சபை கிறிஸ்துவை மத்திய வானில் சந்திக்கும், பின்னர் கோப கலசங்களின் நியாயத்தீர்ப்புகள் பூமியில் ஊற்றப்படுகின்றன (வெளிப்பாடு 15-16) இந்த நேரம் மகா உபத்திரவக்காலம் என்று அழைக்கப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சபை எடுத்துக்கொள்ளப்படுதல் மற்றும் கிறிஸ்துவின் இரண்டாவது வருகை (அவருடைய ராஜ்யத்தை ஸ்தாபிக்க) மூன்றரை வருட காலத்தால் பிரிக்கப்படுகிறது. இந்த பார்வையின் படி, சபை உபத்திரவ காலத்தின் முதல் பாதியைக் கடந்து செல்கிறது, ஆனால் கடைசி மூன்றரை ஆண்டுகளில் நிகழும் உபத்திரவத்தின் மிக மோசமான நிலையில் இருந்து எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பதாகும். சபையானது நடுவில் எடுத்துக்கொள்ளப்படும் என்னும் வாதத்திற்கு மிக நெருக்கமான வேறொரு வாதம் "கோபத்திற்கு-முன்பு" சபை எடுத்துக்கொள்ளப்படும் என்னும் நம்பிக்கையாகும், அதாவது, சபையானது தேவனுடைய "கோபாக்கினையின் மகா நாளுக்கு” முன்பாக பரலோகம் எடுத்துக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை யாகும் (வெளிப்படுத்துதல் 6:17).

அவர்களின் பார்வைக்கு ஆதரவாக, அதை ஆதரிப்பவர்கள் 2 தெசலோனிக்கேயர் 2:1-3 இல் கொடுக்கப்பட்ட காலவரிசையை சுட்டிக்காட்டுகின்றனர். நிகழ்வுகளின் வரிசை பின்வருமாறு: 1) விசுவாசத்துரோகம், 2) அந்திக்கிறிஸ்துவின் வெளிப்பாடு, மற்றும் 3) கிறிஸ்துவின் நாள். உபத்திரவத்தின் நடுப்பகுதியில் சபை எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறுபவர்கள், "பாழாக்கும் அருவருப்பானது" நடந்தேறும்வரை (மத்தேயு 24:15) அந்திக்கிறிஸ்து தன்னை தீர்க்கமாக வெளிப்படுத்த மாட்டான் என்று கற்பிக்கிறார்கள், இது தானியேல் 9:27 இல் கூறப்பட்டுள்ளபடி, உபத்திரவத்தின் மத்திய பாகத்தில் நிகழும். மேலும், இவர்கள் "கிறிஸ்துவின் நாள்" என்பது சபை எடுத்துக்கொள்ளப்படும் நாள் என்று விளக்குகின்றனர்; எனவே, அந்திக்கிறிஸ்து வெளிப்படும் வரை சபை பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது.

மிட்ரிபுலேஷனிசத்தின் மற்றொரு அடிப்படை போதனை, 1 கொரிந்தியர் 15:52 இல் வருகிற எக்காளம் வெளிப்படுத்துதல் 11:15 இல் குறிப்பிடப்பட்டுள்ள அதே எக்காளம் என்பதாகும். வெளிப்படுத்துதல் 11 இன் எக்காளம் தொடர்ச்சியான எக்காளங்களின் கடைசி எக்காளமாகும்; எனவே, இது 1 கொரிந்தியர் 15 இல் வருகிற கடைசி எக்காளம் என்பதோடு சரியாக அர்த்தப்படுகிறது. அதாவது கடைசி எக்காளம் தொனிக்கும் பொது சபை எடுத்துக்கொள்ளப்படும், "தேவ எக்காளத்தோடும்" (1 தெசலோனிக்கேயர் 4:16), ஆனால் வெளிப்படுத்துதல் 11 இல் வருகிற கடைசி எக்காளம் நியாயத்தீர்ப்பின் முன்னறிவிப்பாகும். ஒரு எக்காளம் தேவனுடைய தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கிருபையின் அழைப்பு; மற்ற துன்மார்க்கர்களுக்கு அழிவு பற்றிய ஒரு அறிவிப்பு. மேலும், வெளிப்படுத்தலில் ஏழாவது எக்காளம் காலவரிசைப்படி "கடைசி" எக்காளம் அல்ல—மத்தேயு 24:31 கிறிஸ்துவின் ராஜ்யத்தின் தொடக்கத்தில் ஒலிக்கும் பிற்கால எக்காளத்தைப் பற்றி பேசுகிறது.

1 தெசலோனிக்கேயர் 5:9 சபையானது "கோபாக்கினைக்கென்று நியமிக்கப்படாமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் இரட்சிப்படைவதற்கென்று" நியமிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது. இது விசுவாசிகள் உபத்திரவத்தை அனுபவிக்க மாட்டார்கள் என்பதைக் குறிக்கிறது. இருப்பினும், மிட்ரிபுலேஷனிசம் "கோபம்" என்பது உபத்திரவத்தின் இரண்டாம் பாதியை மட்டுமே குறிக்கிறது என்கிறார்கள்—அதாவது குறிப்பாக, கோபகலச நியாயத்தீர்ப்புகள். இருப்பினும் வார்த்தையை இவ்வாறு கட்டுப்படுத்தி வரையறுப்பது தேவையற்றதாகத் தோன்றுகிறது. நிச்சயமாக ஏழு முத்திரைகள் மற்றும் ஏழு எக்காளங்களில் உள்ள பயங்கரமான தீர்ப்புகள்—பஞ்சம், ஆறுகள் விஷமாகுதல், சந்திரன் இருண்டுபோகுதல், இரத்தம் சிந்துதல், பூமியதிர்ச்சி மற்றும் வேதனை ஆகியவையும் தேவனுடைய கோபமாகக் கருதப்படலாம்.

"மகா உபத்திரவம்" தொடங்குவதற்கு முன்பாக, வெளிப்படுத்துதல் 11 இல் மிட்ரிபுலேஷனிசம் சபை எடுத்துக்கொள்ளப்படுதலை வைக்கிறது. வெளிப்படுத்தலின் காலவரிசையில் இந்த இடத்தில் சபை எடுத்துக்கொள்ளப்படுதலை கொண்டுவருவதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. முதலாவதாக, வெளிப்படுத்துதல் புத்தகத்தில் "மகா உபத்திரவம்" என்ற வார்த்தையின் ஒரே நிகழ்வு 7:14 இல் வருகிறது. இரண்டாவதாக, "கோபாக்கினையின் மகா நாள்" பற்றிய ஒரே குறிப்பு வெளிப்படுத்தல் 6:17 இல் வருகிறது. இந்த இரண்டு வேதக்குறிப்புகளும் மிட்ரிபுலேஷனிசம் போதிப்பதன் காலக்கட்டத்திற்கு முன்பதாகவே வருகின்றன.

மிட்ரிபுலேஷனிச பார்வையின் இறுதி பலவீனமானது மற்ற இரண்டு கோட்பாடுகளால் பகிரப்படுகிறது: அதாவது, எதிர்கால நிகழ்வுகள் குறித்து ஒரு தெளிவான காலவரிசையை வேதாகமம் கொடுக்கவில்லை. வேதம் ஒரு பார்வையை மற்றொன்றுக்கு வெளிப்படையாகக் கற்பிக்கவில்லை, அதனால்தான் கடைசிக் காலங்கள் மற்றும் தொடர்புடைய தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு ஒத்திசைவாக்கப்பட வேண்டும் என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

English



முகப்பு பக்கம்

உபத்திரவ காலத்தின் நடுவில் சபை எடுத்துக்கொள்ளப்படும் (மிட்டிரிபுலேஷனிசம்) என்னும் கருத்துப்பாங்கின் பலம் மற்றும் பலவீனங்கள் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries