settings icon
share icon
கேள்வி

நான் எனது வாழ்க்கையை எப்படித் தேவனுக்காக வாழ்வது?

பதில்


நாம் எப்படி அவருக்காக வாழ வேண்டும் என்பது குறித்து தேவன் தம்முடைய வார்த்தையில் மிகத் தெளிவான சில வழிமுறைகளைக் கொடுத்துள்ளார். ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பதற்கான கட்டளை (யோவான் 13:34-35), நம்முடைய சொந்த ஆசைகளை வெறுத்து அவரைப் பின்பற்றுவதற்கான அழைப்பு (மத்தேயு 16:24), ஏழைகளையும் அநாதைகளையும் கவனித்துக்கொள்ளும் அறிவுரை (யாக்கோபு 1: 27), மற்றும் தேவனை அறியாதவர்களைப் போன்ற பாவ நடத்தைகளில் விழக்கூடாது என்கிற எச்சரிக்கை (1 தெசலோனிக்கேயர் 5:6-8). ஒரு நியாயப்பிரமாணத்தைப் போதிப்பவன் அவரிடம் மிக முக்கியமான கட்டளைகளைக் கேட்டபோது, தேவனுக்காக வாழ்ந்த வாழ்க்கையை இயேசு சுருக்கமாகக் கூறினார். அதற்கு இயேசு, “இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்” (மாற்கு 12:29-31).

இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாகச் செய்த ஜெபமும் நமது நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. விசுவாசிகளைக் குறிப்பிட்டு, அவர் ஜெபித்தார், “நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன். நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள். நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்” (யோவான் 17:22-26). நம்மோடு ஐக்கியங்கொள்ளவேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம்.

வெஸ்ட்மினிஸ்டர் குறுகிய விசுவாசக் கோட்பாடுகள் கூறுகிறது, "தேவனை மகிமைப்படுத்துவதும், அவரை என்றென்றும் அனுபவிப்பதுமே மனிதனின் முக்கிய முடிவு." தேவனுக்காக வாழும் வாழ்க்கை தேவனை மகிமைப்படுத்துகிறது. முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும் மற்றும் பலத்தோடும் - நாம் தேவனைப் பின்பற்றுகிறோம். நாம் கிறிஸ்துவில் நிலைத்திருக்கிறோம் (யோவான் 15:4, 8) எனவே மற்றவர்களை நேசிப்பதன் மூலம் அவரைப் போலவே செயல்படுகிறோம். அதைச் செய்வதன் மூலம், நாம் அவருடைய நாமத்துக்கு மகிமையைக் கொண்டுவருகிறோம், மேலும் நாம் முதலில் உருவாக்கப்பட்ட உறவையும் அனுபவிக்கிறோம்.

தேவனுக்காக வாழ விரும்புபவர்கள் அவருடைய வார்த்தையில் அவரைத் தேட வேண்டும். நம் வாழ்வில் வார்த்தையைப் பிரயோகிக்க நாம் பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலை நாட வேண்டும். கடவுளுக்காக வாழ்வது என்பது நம்மை விட்டுக்கொடுத்து எல்லாவற்றிற்கும் மேலாக தேவனுடைய சித்தத்தை விரும்புவதாகும். நாம் தேவனிடம் நெருங்கி வரும்போதும், அவரை அதிகம் தெரிந்துகொள்ளும்போதும், அவருடைய விருப்பங்கள் இயல்பாகவே நம்முடையதாக மாறும். நாம் முதிர்ச்சியடையும் போது, தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கான நமது விருப்பம் அவர்மீது நம் அன்பு அதிகரிக்கும்போது அதிகரிக்கிறது. இயேசு கூறியது போல், "நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்" (யோவான் 14:15).

English



முகப்பு பக்கம்

நான் எனது வாழ்க்கையை எப்படித் தேவனுக்காக வாழ்வது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries