கேள்வி
நான் காதலில் இருக்கிறேன் என்பதை எப்படி அறிந்துகொள்வது?
பதில்
காதல் என்பது மிகவும் சக்திவாய்ந்த ஒரு உணர்வாகும். இது நம் வாழ்கையில் எல்லா பாகத்தையும் அதிகமாக ஊக்குவிக்கிறது. இந்த உணர்ச்சியின் அடிப்படையில் நாம் அநேக தீர்மானங்களை எடுக்கிறோம் மற்றும் காதலிக்கிறோம் என்று அறிந்து விவாகமும் செய்துகொள்கிறோம். இதனால் தான் கிட்டத்தட்ட பாதி விவாகங்கள் விவாகரத்தில் போய் முடிகிறது. உண்மையான அன்பு என்பது வருவதும் போவதுமான ஒரு உணர்ச்சி அல்ல மாறாக அது ஒரு தீர்மானம் என்று வேதாகமம் போதிக்கிறது. நம்மை நேசிப்பவர்களை மட்டும் நாம் நேசிக்க கூடாது; அன்பு செலுத்த தகுதியற்றவர்களையும்கூட இயேசு நேசிப்பதுபோல (லூக்கா 6:35) நாமும் நம்மை பகைக்கிற சத்துருக்களைச் சிநேகிக்கவேண்டும். “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்” (1 கொரிந்தியர் 13:4-7).
ஒரு நபரை காதலிப்பது அல்லது காதலில் விழுவது மிகவும் சுலபமானது ஆகும், ஆனால் நம் உள்ளத்தில் இருக்கும் அந்த உணர்ச்சி உண்மையான அன்புதானா என்று தீர்மானிக்க சில கேள்விகளை நாம் கேட்க வேண்டும். முதலாவதாக, இந்த நபர் ஒரு கிறிஸ்தவரா, அதாவது அவர் கிறிஸ்துவுக்கு தன் வாழ்கையை ஒப்புக்கொடுத்திருக்கிறாரா? அவன்/அவள் தனது இரட்சிப்பிற்காக கிறிஸ்துவில் மட்டுமே நம்பிக்கை வைத்திருக்கின்றாரா? மேலும், நீங்கள் உங்களுடைய இருதயத்தையும் உணர்ச்சிகளையும் ஒரு நபருக்கு கொடுக்கவேண்டும் என்று எண்ணுகிறபோது, உங்களுக்கு நீங்களே இந்த கேள்வியை கேட்கவேண்டும்: நான் விரும்பும் இந்த நபரை மற்ற எல்லா நபரையும் விட முக்கியமாக கருதி மற்றும் தேவனோடு உள்ள உறவிற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் உள்ள உறவாக இந்த விவாக உறவை கருதுவேனா? இரண்டு நபர்கள் விவாகம் செய்யும்போது அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாகிறார்கள் என்று வேதம் சொல்லுகிறது (ஆதியாகமம்-2:24; மத்தேயு-19:5).
அடுத்தபடியாக கவனிக்கவேண்டிய ஒரு காரியம் என்னவென்றால், நாம் விரும்புகிற இந்த நபர் எனக்கு சரியான வாழ்க்கை துணையாக இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதே. தேவனுக்கு தனது வாழ்கையில் முதல் இடம் அவன்/அவள் கொடுத்திருக்கிறாரா? வாழ்நாள் முழுவதும் இந்த திருமண உறவை கட்டி காப்பாற்ற தனது நேரத்தையும் பெலனையும் அளிக்கும் ஒரு நபராக இவர் இருப்பானா / இருப்பாளா? நாம் ஒரு நபரை உண்மையாக காதலிக்கிறோமா அல்லது உண்மையான அன்பு வைத்திருக்கிறோமா என்று அறிந்துகொள்ள எந்த அளவுகோலும் இல்லை, ஆனால் நாம் நம் உணர்ச்சிகளை பின்பற்றுகிறோமா அல்லது தேவ சித்தத்தைப் பின்பற்றுகிறோமா என்று பகுத்தறிவது மிக முக்கியமான ஒன்றாகும். உண்மையான அன்பு என்பது ஒரு தீர்மானம், வெறும் உணர்ச்சியல்ல. வேதத்திற்குட்பட்ட உண்மையான அன்பு என்பது ஒரு நபரை நாம் அன்பு செலுத்தவேண்டும் என்று தோன்றுகிறபோது மட்டுமல்ல, மாறாக எல்லா நேரத்திலும் நேசிப்பதாகும்.
English
நான் காதலில் இருக்கிறேன் என்பதை எப்படி அறிந்துகொள்வது?