settings icon
share icon
கேள்வி

கெனோசிஸ் என்றால் என்ன?

பதில்


கெனோசிஸ் என்ற சொல் கிறிஸ்து மாம்சத்தில் வந்த அவதாரத்தில் "சுய-வெறுமையாக்கல்" என்ற கோட்பாட்டைக் குறிக்கிறது. இந்த வார்த்தை பிலிப்பியர் 2:7 இன் கிரேக்க மொழியில் இருந்து வருகிறது, இது இயேசு "தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்" என்று வருகிறது. "வெறுமையாக்கி" என்று மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தை கெனோவின் ஒரு வடிவமாகும், இதிலிருந்து நாம் கெனோசிஸ் என்ற வார்த்தையைப் பெறுகிறோம்.

பிலிப்பியர் 2:7 தேவனுடைய குமாரன் தன்னை "வெறுமையாக்கி" என்பதில் அவர் எதை வெறுமையாக்கினார் என்று குறிப்பிடவில்லை என்பதைக் கவனியுங்கள். மேலும் வேதம் சொல்வதற்கு அப்புறமாய் சென்று எதையும் சிந்திக்காமல் இங்கே நாம் கவனமாக இருக்க வேண்டும். இயேசு தனது தெய்வீக பண்புகளிலிருந்து தன்னை வெறுமையாக்கவில்லை - வசனத்தில் அத்தகைய பண்புகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை, மேலும் இயேசு தேவனுடைய வல்லமையையும் ஞானத்தையும் கொண்டிருந்தார் என்பது நற்செய்திகளில் மிகத்தெளிவாகத் தெரிகிறது. புயலை அமைதிப்படுத்துவது இயேசுவின் தெய்வீக வல்லமையின் ஒரு காட்சி மட்டுமே (மாற்கு 4:39). பூமிக்கு வரும்போது, தேவனுடைய குமாரன் தேவனாக இருப்பதை நிறுத்தவில்லை, மேலும் அவர் "குறைந்தளவு தேவனாக" மாறவில்லை. "வெறுமையாக்கல்" எதுவாக இருந்தாலும், இயேசு முழுமையாக தேவனாக இருந்தார்: "தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிற" (கொலோசெயர் 2:9).

கிறிஸ்து தன்னை "வெறுமையாக்கிய" காரியம் பரலோகத்தில் அவருக்கு இருந்த சகல சலுகைகளை மற்றும் மகிமையை ஒதுக்கி வைப்பது போல் நினைப்பது நல்லது. பரலோகத்தில் அவருடைய சிங்காசனத்தில் இருப்பதற்குப் பதிலாக, இயேசு தன்னை "வெறுமையாக்கினார்" (பிலிப்பியர் 2:7 ஐ NIV இவ்வாறு மொழிபெயர்க்கிறது). அவர் பூமிக்கு வந்தபோது, "அவர் தனது தெய்வீக சலுகைகளை விட்டுவிட்டார்" (NLT). அவர் தனது மகிமையை மூடிமறைத்தார், மேலும் அவர் ஒரு அடிமையின் பதவியை வகிக்கத் தேர்ந்தெடுத்தார்.

கெனோசிஸ் ஒரு சுய-துறவு, தெய்வீகத்தை வெறுமையாக்குவது அல்ல. அது மனித குலத்திற்கான தெய்வீகத்தின் பரிமாற்றம் அல்ல. இயேசு தனது பூமிக்குரிய ஊழியத்தின் எந்தப் பகுதியிலும் மற்றும் எந்த நேரத்திலும் தேவனாக இருப்பதை நிறுத்தவில்லை. அவர் தனது பரலோக மகிமையை ஒதுக்கி வைத்தார். அவர் தனது வழியை எளிதாக்க தனது தெய்வீகத்தை பயன்படுத்துவதை தானாக முன்வந்து தவிர்த்தார். அவரது பூமிக்குரிய ஊழியத்தின் போது, கிறிஸ்து தன்னை பிதாவின் விருப்பத்திற்கு முழுமையாக ஒப்புக்கொடுத்தார் (யோவான் 5:19).

கெனோசிஸின் ஒரு பகுதியாக, இயேசு சில சமயங்களில் தமது மனிதத்தன்மையின் வரம்புகளுக்கு உட்பட்டு செயல்பட்டார். தேவன் சோர்வடையவில்லை அல்லது தாகமடையவில்லை, ஆனால் இயேசுவுக்கு சோர்வும் தாகமும் இருந்தது (யோவான் 4:6; 19:28). தேவனுக்கு சகல காரியங்களும் தெரியும், ஆனால் ஒரே ஒரு முறை மட்டும், இயேசு தனது சர்வ ஞானத்தின் பயன்பாட்டை தானாக முன்வந்து பயன்படுத்தாமல் துறந்தார் என்று தோன்றுகிறது (மத்தேயு 24:36). மற்ற நேரங்களில், இயேசுவின் சர்வஞானம் முழுமையாகக் காட்சிப்படுத்தப்பட்டது (லூக்கா 6:8; யோவான் 13:11; 18:4).

இயேசு பூமிக்கு வந்தபோது அவருடைய தெய்வீகத் தன்மையை முழுவதுமாக அல்லது சிலவற்றை விட்டுவிட்டதாகக் கூறி, சில தவறான வேத பண்டிதர்கள் கெனோசிஸின் கருத்தை மிக தூரம் எடுத்துச் செல்கின்றனர். இந்த சமயக்கொள்கை சில நேரங்களில் கெனோசிஸ் கோட்பாடு என்று குறிப்பிடப்படுகிறது, ஆனால் கெனோசிஸ் பற்றிய வேதாகமப் புரிதலில் இருந்து வேறுபடுவதற்கு ஒரு சிறந்த சொல் கெனோடிசிசம் அல்லது கெனோடிக் இறையியல் ஆகும்.

கெனோசிஸ் என்று வரும்போது, இயேசு வெறுமையாக்கி விட்டு விட்டதற்கு நாம் அடிக்கடி அதிக கவனம் செலுத்துகிறோம். கெனோசிஸ் கிறிஸ்து எதை எடுத்துக் கொண்டார் என்பதையும் கையாள்கிறது. இயேசு தம்முடைய தெய்வீக சுபாவத்தில் ஒரு மனித சுபாவத்தையும் சேர்த்து நமக்காகத் தம்மைத்தாமே தாழ்த்தினார். இயேசு பரலோகத்தில் மகிமையின் மகிமையிலிருந்து சிலுவையில் கொல்லப்படுவதற்கு ஒரு மனிதனாக மாறினார். பிலிப்பியர் 2:7–8 அறிவிக்கிறது, “தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.” தாழ்மையின் இறுதிச் செயலில், பிரபஞ்சத்தின் தேவன் ஒரு மனிதனாக மாறி, அவருடைய சிருஷ்டிப்புக்காக மரித்தார்.

கெனோசிஸ் என்பது எந்த பாவமும் இல்லாமல், அனைத்து வரம்புகளுடனும் ஒரு மனிதத்தன்மையை எடுத்துக் கொள்ளும் கிறிஸ்துவின் செயல் ஆகும். ஒரு வேதாகம அறிஞர் எழுதியது போல், "அவருடைய மானுட அவதாரத்தில் அவர் 'தேவனுடைய சாயலில்' இருந்தார், எனவே அவர் எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டவராகவும் ஆளுகிறவராகவும் இருந்தார், ஆனால் அவர் ஒரு அடிமையின் சுபாவத்தை மனிதனுடைய தன்மையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டார்" (ஜே.ஜே முல்லர், அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியர் மற்றும் பிலேமோனுக்கு எழுதிய நிருபங்கள், பக்கம் 82).

English



முகப்பு பக்கம்

கெனோசிஸ் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries