settings icon
share icon
கேள்வி

கர்மாவைப் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்


கர்மா என்பது புத்தமதம் மற்றும் இந்து மதங்களில் காணப்படும் ஒரு இறையியல் கருத்தாகும். உங்கள் வாழ்க்கையை நீங்கள் எவ்வாறு வாழ்கிறீர்கள் என்பது மறுபிறவிக்குப் பிறகு நீங்கள் பெறும் வாழ்க்கைத் தரத்தை தீர்மானிக்கும் என்ற எண்ணம். இந்த வாழ்நாளில் நீங்கள் தன்னலமற்ற, கனிவான, பரிசுத்தமானவராக இருந்தால், நீங்கள் மறுபிறவியில் (புதிய பூமிக்குரிய சரீர பிறப்பு) ஒரு இனிமையான வாழ்க்கையில் வெகுமதி பெறுவீர்கள். ஒருவேளை நீங்கள் சுயநலம் மற்றும் தீமை நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தால், நீங்கள் இனிமையான வாழ்க்கை முறைக்கு சற்று குறைந்த மறுபிறவி பெறுவீர்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் எதை விதைத்தீர்களோ அடுத்த வாழ்க்கையில் அதையே அறுவடை செய்கிறீர்கள். கர்மா என்பது மறுபிறவி இறையியல் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. மறுபிறவி பற்றிய கருத்தை வேதாகமம் முற்றிலுமாய் நிராகரிக்கிறது; எனவே, இது கர்மா என்ற கருத்தை ஆதரிக்கவில்லை.

எபிரெயர் 9:27 கூறுகிறது, “அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே” இந்த பைபிள் வசனம் இரண்டு முக்கியமான விஷயங்களை தெளிவுபடுத்துகிறது, இது கிறிஸ்தவர்களுக்கு மறுபிறவி மற்றும் கர்மாவின் சாத்தியத்தை மறுக்கிறது. முதலாவதாக, நாம் “ஒரு முறை மரிக்க விதிக்கப்பட்டுள்ளோம்” என்று கூறுகிறது, அதாவது மனிதர்கள் ஒரு முறை மட்டுமே பிறக்கிறார்கள், அதுபோலவே ஒரு முறை மட்டுமே இறக்கிறார்கள். மறுபிறவி கோட்பாட்டில் உள்ளார்ந்த ஒரு யோசனை, வாழ்க்கை, இறப்பு மற்றும் மறுபிறப்பு ஆகியவற்றின் முடிவற்ற சுழற்சி இல்லை. இரண்டாவதாக, மரணத்திற்குப் பிறகு நாம் நியாயத்தீர்ப்பை எதிர்கொள்கிறோம், அதாவது மறுபிறவி மற்றும் கர்மாவில் இருப்பதைப் போல, சிறந்த வாழ்க்கை வாழ இரண்டாவது வாய்ப்பு இல்லை. நீங்கள் வாழ்க்கையில் ஒரு காட்சியைப் பெறுகிறீர்கள், தேவனுடைய திட்டத்தின்படி அதை வாழ்கிறீர்கள், அதுதான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அறுவடை மற்றும் விதைப்பு பற்றி வேதாகமம் நிறைய பேசுகிறது. யோபு 4:8 கூறுகிறது, “நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்.” சங்கீதம் 126:5 கூறுகிறது, “கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.” லூக்கா 12:24 , “காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.” இந்த ஒவ்வொரு நிகழ்வுகளிலும், அறுவடை மற்றும் விதைப்பு பற்றிய மற்ற எல்லா குறிப்புகளிலும், உங்கள் செயல்களின் வெகுமதிகளைப் பெறும் செயல் இந்த வாழ்க்கையில் தானே நடைபெறுகிறது, மாறாக இனி வரவிருக்கிற சில எதிர்கால வாழ்க்கையில் அல்ல. இது ஒரு இன்றைய செயலாகும், மேலும் நீங்கள் அறுவடை செய்யும் கனி நீங்கள் செய்த செயல்களுடன் தொடர்புடையதாக இருக்கும் என்பதையும் குறிப்புகள் தெளிவுபடுத்துகின்றன. கூடுதலாக, இந்த வாழ்க்கையில் நீங்கள் செய்யும் விதைப்பு மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் உங்கள் வெகுமதியை அல்லது தண்டனையை பாதிக்கும்.

இந்த மறு வாழ்வு என்பது பூமியில் உள்ள மற்றொரு உடலில் பிறக்கிற மறுபிறப்பு அல்லது மறுபிறவி அல்ல. அது நரகத்தில் நித்தியகாலமாக அடையப்போகும் துன்பம் (மத்தேயு 25:46) அல்லது இயேசுவோடு பரலோகத்தில் இருக்கப்போகிற நித்திய ஜீவன், நாம் அவருடன் நித்தியமாக வாழ்வதற்காக இந்த பூமியில் இறக்கிறோம். இதுதான் நம்முடைய இந்த பூமியிலுள்ள வாழ்வின் மையமாக இருக்க வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியர் 6:8-9-ல் எழுதினார், “தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான். நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.”

இறுதியாக, சிலுவையில் இயேசு மரித்ததன் விளைவாக நமக்கு இந்த நித்திய ஜீவனை அறுவடை செய்யும்படி ஆனது, அது நாம் இயஐச்வின் மீது வைத்த விசுவாசத்தின் பலனாக நமக்கு கொடுக்கப்பட்டதாகும் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். எபேசியர் 2:8-9 நமக்குச் சொல்கிறது, “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல.” ஆகையால், மறுபிறவி மற்றும் கர்மா என்ற கருத்து வாழ்க்கை, இறப்பு மற்றும் நித்திய ஜீவனை விதைத்தல் மற்றும் அறுவடை செய்வது பற்றி வேதாகமம் கற்பிக்கும் விஷயங்களுடன் பொருந்தாது என்பதைக் காண்கிறோம்.

Englishமுகப்பு பக்கம்

கர்மாவைப் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries