settings icon
share icon
கேள்வி

உலகளாவிய வறுமை மற்றும் பசிக்கு கிறிஸ்தவர்கள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும்?

பதில்


சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, உலகளவில் 840 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீண்டகாலமாக ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளனர். ஒவ்வொரு நாளும் 26,000 சிறு குழந்தைகள் வறுமை, பசி மற்றும் தடுக்கக்கூடிய நோய்களால் இறக்கின்றனர். உலக மக்கள்தொகையில் பெரும்பாலானோர் இத்தகைய வருந்தத்தக்க நிலையில் இருப்பதால், இத்தகைய சூழலில் ஒரு கிறிஸ்தவர் என்ன செய்ய வேண்டும்? இதற்கு திருச்சபை எவ்வாறு பதிலளிக்க வேண்டும்?

உலகளாவிய வறுமை மற்றும் பசிக்கு கிறிஸ்தவர்கள் மனதுருக்கத்துடன் பதிலளிக்க வேண்டும். இயேசுவின் முன்மாதிரியைக்கொண்டு (மாற்கு 8:2) தேவைப்படுபவர்களுக்கு உண்மையான இரக்கம் காட்டுவது என்பது, தேவையை உணர்ந்து, சம்பந்தப்பட்டவர்களைக் கவனித்து, அவர்கள் சார்பாகச் செயல்படத் தயாராக இருக்கிறோம் என்பதாகும். தேவையுள்ள சகோதரன் மீது இரக்கம் காட்டுவது, நமக்குள் இருக்கும் தேவனுடைய அன்பின் சான்றாகும் (1 யோவான் 3:17). ஏழைகளிடம் தயவு காட்டும்போது தேவனைக் கனப்படுத்துகிறோம் (நீதிமொழிகள் 14:31).

உலகளாவிய வறுமை மற்றும் பசிக்கு கிறிஸ்தவர்கள் தக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் பதிலளிக்க வேண்டும். நிச்சயமாக, தேவைப்படுபவர்களுக்காக ஜெபம் செய்வது என்பது ஒவ்வொரு கிறிஸ்தவனும் செய்யக்கூடிய ஒன்று. அதற்கு அப்பால், உலகளாவிய வறுமை மற்றும் பசியால் ஏற்படும் துன்பங்களைப் போக்க கிறிஸ்தவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். இயேசு, “உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், ... உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்” (லூக்கா 12:33-34). தபீத்தாளைப் போல நாமும் "எப்பொழுதும் நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்து ஏழைகளுக்கு உதவ வேண்டும்" (அப்போஸ்தலர் 9:36).

தன்னலமின்றி தியாக மனதோடு ஏழைகளுக்குக் கொடுக்கும் விசுவாசி தேவனால் ஆசீர்வதிக்கப்படுவான். "ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்" (நீதிமொழிகள் 19:17). இந்த தெய்வீக ஆசீர்வாதங்கள் வெறுமனே உலகப்பிரகாரமான பொருட்கள் அல்ல, மாறாக ஆவிக்குரிய ஆசிர்வாதங்களாக இருக்கலாம், ஆனால் ஒரு வெகுமதி உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது—ஏழைகளுக்கு கொடுப்பது என்பது அது நித்தியத்திற்கான முதலீடு.

உலகளாவிய வறுமை மற்றும் பசியை எதிர்த்துப் போராடுவதற்கு மட்டுமல்லாமல், இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்கும் பல கிறிஸ்தவ நிவாரண அமைப்புகள் உள்ளன. காம்பாஷன் இன்டர்நேஷனல் (Compassion International) போன்ற குழுக்கள் மொத்த நபரின் சரீர மற்றும் ஆவிக்குரியத் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி செய்கின்றன.

உலகளாவிய வறுமை மற்றும் பசிக்கு கிறிஸ்தவர்கள் நம்பிக்கையுடன் பதிலளிக்க வேண்டும். விசுவாசிகள் உலகில் தேவனுடைய பணிக்கு மேலும் உதவுகிறார்கள் என்ற நம்பிக்கையுடன் ஏழைகளின் சார்பாக செயல்பட முடியும்: "சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பாரென்று அறிவேன்" (சங்கீதம் 140:12). விசுவாசிகள் இயேசு திரும்பி வருவார் என்ற நம்பிக்கையுடன் உழைக்கிறார்கள், மேலும் அவர் "நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்வார்" (ஏசாயா 11:4).

இறுதியான சமத்துவ நாள் வரை, "தரித்திரர் எப்போதும் உங்களிடத்திலிருக்கிறார்கள்" (மத்தேயு 26:11) என்று இயேசு கூறினார். அப்படியிருக்க, மற்றவர்களுக்குச் சேவை செய்வதன் மூலம் கர்த்தருக்குச் சேவை செய்ய நமக்கு வரம்பற்ற வாய்ப்புகளும், அவசரக் கடமையும் உள்ளது.

Englishமுகப்பு பக்கம்

உலகளாவிய வறுமை மற்றும் பசிக்கு கிறிஸ்தவர்கள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries