settings icon
share icon
கேள்வி

பொதுவான வெளிப்பாடு மற்றும் சிறப்பு வெளிப்பாடு என்றால் என்ன?

பதில்


பொதுவான வெளிப்பாடு மற்றும் சிறப்பு வெளிப்பாடு ஆகியவை மனுகுலத்திற்கு தன்னை வெளிப்படுத்த தேவன் தேர்ந்தெடுத்த இரண்டு வழிகள் ஆகும். பொதுவான வெளிப்பாடு என்பது இயற்கையின் மூலம் தேவனைப் பற்றி அறியக்கூடிய பொதுவான உண்மைகளைக் குறிக்கிறது. சிறப்பு வெளிப்பாடு என்பது இயற்கைக்கு அப்பாற்பட்ட நிலையின் மூலம் தேவனைப் பற்றி அறியக்கூடிய மிகவும் குறிப்பிட்ட சத்தியங்களைக் குறிக்கிறது.

பொதுவான வெளிப்பாட்டைப் பொறுத்தவரை, சங்கீதம் 19:1-4 வரையிலுள்ள வசனங்கள் இப்படியாக அறிவிக்கிறது, “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்.” இந்த வேதப்பகுதியின்படி, தேவனின் இருக்கும் ஜீவிக்கிற நிலை மற்றும் வல்லமையை பிரபஞ்சத்தை கவனிப்பதன் மூலம் தெளிவாகக் காணலாம் என்பதை அறிந்து கொள்ளுகிறோம். படைப்பின் ஒழுங்கு, சிக்கலான தன்மை மற்றும் அதிசயம் ஒரு சக்திவாய்ந்த மற்றும் மகிமைப்போருந்திய சிருஷ்டிகர் இருக்கவேண்டும் என்பதைக் குறித்துப் பேசுகிறது.

ரோமர் 1:20-ல் பொதுவான வெளிப்பாடு இவ்வாறாக கற்பிக்கப்படுகிறது, “எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.” சங்கீதம் 19-ஐப் போலவே, தேவனின் நித்திய சக்தியும் தெய்வீக இயல்பும் உருவாக்கப்பட்டுள்ளவற்றிலிருந்து “தெளிவாகக் காணப்படுகின்றன” மற்றும் “புரிந்து கொள்ளப்படுகின்றன” என்றும், இந்த உண்மைகளை மறுப்பதற்கு எந்தவிதமான காரணமும் அல்லது சாக்குப்போக்கும் இல்லை என்றும் ரோமர் 1:20 நமக்கு கற்பிக்கிறது. இந்த வேதவசனங்களை மனதில் கொண்டு, பொதுவான வெளிப்பாட்டின் ஒரு செயல்பாட்டு வரையறை “எல்லா ஜனங்களுக்கும், எல்லா நேரங்களிலும், தேவன் ஜீவிக்கிறார் என்பதையும், அவர் ஞானமுள்ளவர், வல்லமையுள்ளவர், அடுத்து சேரக்கூடாத இடத்திலிருக்கிறவர் என்பதையும் நிரூபிக்கும் எல்லா இடங்களிலும் உள்ள தேவனின் வெளிப்பாடு ஆகும்.”

அதிசயமான வழிமுறைகளின் மூலம் தன்னை வெளிப்படுத்த தேவன் எவ்வாறு தேர்ந்தெடுத்தார் என்பதுதான் சிறப்பு வெளிப்பாடு. சிறப்பு வெளிப்பாட்டில் தேவனின் சரீரத்தில் தோன்றி காட்சி அளித்த தோற்றங்கள், சொப்பனங்கள், தரிசனங்கள், தேவனின் எழுதப்பட்ட வார்த்தை மற்றும் மிக முக்கியமாக இயேசு கிறிஸ்து ஆகியவை இதில் அடங்கும். தேவன் பல முறை சரீரத்தில் தோன்றியதை வேதாகமம் பதிவு செய்கிறது (ஆதியாகமம் 3:8, 18:1; யாத்திராகமம் 3:1-4, 34:5-7), தேவன் சொப்பனங்கள் மூலம் ஜனங்களிடம் பேசுவதை வேதாகமம் பதிவு செய்கிறது (ஆதியாகமம் 28:12, 37: 5; 1 இராஜாக்கள் 3:5; தானியேல் 2) மற்றும் தரிசனங்கள் மூலம் அவர் வெளிப்படுத்தினதையும் வாசிக்கிறோம் (ஆதியாகமம் 15: 1; எசேக்கியேல் 8: 3-4; தானியேல் 7; 2 கொரிந்தியர் 12:1-7).

தேவனை வெளிப்படுத்துவதில் முதன்மையான முக்கியத்துவம் வாய்ந்தது அவருடைய வார்த்தையான வேதாகமம் ஆகும், இது ஒரு சிறப்பு வெளிப்பாட்டின் வடிவமாகும். தம்முடைய செய்தியை மனிதகுலத்திற்கு சரியாக பதிவு செய்ய தேவன் வேதாகமத்தின் எழுத்தாளர்களை அற்புதமாக வழிநடத்தினார், அதே நேரத்தில் அவர்களின் சொந்த பாணிகளையும் ஆளுமைகளையும் பயன்படுத்துகிறார். தேவனுடைய வார்த்தை ஜீவனும் வல்லமையும் உள்ளதாகவும் இருக்கிறது (எபிரெயர் 4:12). தேவனுடைய வார்த்தை தேவனால் அருளப்பட்டு பிரயோஜனமுள்ளதாயும், போதுமானதுமாக இருக்கிறது (2 தீமோத்தேயு 3:16-17). வாய்வழி மரபின் தவறான தன்மை மற்றும் நம்பகத்தன்மையை தேவன் நன்கு அறிந்திருந்ததால், அவரைப் பற்றிய உண்மையை எழுத்து வடிவத்தில் பதிவு செய்ய அவர் தீர்மானித்தார். மனிதன் சொப்பனங்களையும் தரிசனங்களையும் தவறாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதையும் அவர் புரிந்துகொண்டார். ஆகவே மனிதகுலம் அவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை, அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை, மற்றும் நமக்காக அவர் என்ன செய்தார் என்பதையும் தேவன் வேதாகமத்தில் வெளிப்படுத்த முடிவு செய்தார்.

சிறப்பு வெளிப்பாட்டின் இறுதி வடிவம் இயேசு கிறிஸ்து என்னும் நபரில் ஆகும். தேவன் ஒரு மனிதரானார் (யோவான் 1:1, 14). எபிரெயர் 1:1-3 இதை மிகச் சுருக்கமாகக் கூறுகிறது, “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.” தேவன் ஒரு மனிதனாக ஆனார், இயேசு கிறிஸ்துவின் நபரில், நம்முடன் அடையாளம் காணவும், நமக்கு ஒரு முன்மாதிரியை வைக்கவும், நமக்குக் கற்பிக்கவும், நமக்கு தன்னை வெளிப்படுத்தவும், மிக முக்கியமாக, மரணத்தில் தன்னைத் தாழ்த்துவதன் மூலம் நமக்கு இரட்சிப்பை வழங்கவும் சிலுவையில் பலியானார் (பிலிப்பியர் 2:6-8). இயேசு கிறிஸ்து தேவனிடமிருந்து வந்த இறுதி “சிறப்பு வெளிப்பாடு” ஆகும்.

English



முகப்பு பக்கம்

பொதுவான வெளிப்பாடு மற்றும் சிறப்பு வெளிப்பாடு என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries