settings icon
share icon
கேள்வி

சூதாடுவது பாவமா? சூதாட்டத்தைக் குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது?

பதில்


சூதாடுவது, பந்தயம் கட்டுவது மற்றும் லாட்டரி ஆகியவற்றை குறிப்பாக வேதாகமம் கண்டிப்பதில்லை. ஆனாலும் பண ஆசையிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்று வேதாகமம் நம்மை எச்சரிக்கிறது (1 தீமோத்தேயு 6:10; எபிரேயர் 13:5). “துரிதமாக ஐசுவரியவனாக” விரும்பி குறுக்குவழிகளை முயற்சிப்பதிலிருந்து விலகியிருப்பதையும் வேதம் ஊக்குவிக்கிறது (நீதிமொழிகள் 13:11; 23:5; பிரசங்கி 5:10). சூதாட்டம் மெய்யாகவே பண ஆசையில் கவனத்தை ஈர்த்துச் செல்கிறது, மேலும், மக்களை துரிதமாக சுலபமான வழிகளில் ஐசுவரியங்களை அடையும் வாக்குறுதிகளினால் சோதிக்கவும் செய்கிறது என்பதையும் மறுக்கமுடியாது.

சூதாடினால் என்ன தப்பு? சூதாட்டம் என்பது விவாதிப்பதற்கு மிகவும் கடினமான ஒரு விஷயம் ஏனென்றால் அது மிதமாகவும், குறிப்பிட்ட வேளைகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டால் அது வெறும் பணத்தின் விரயம் மட்டுமே, நிச்சயமாக அதை தீமை என்றும் சொல்லிவிட முடியாது. பலவித நடவடிக்கைகளில் மக்கள் பணத்தை விரயம் செய்கிறார்கள். சினிமா பார்ப்பதைவிடவோ (பல வேளைகளில்), தேவையில்லாத அதிக விலையான உணவை உண்ணுவதோ அல்லது ஒன்றும் பெறாத பொருட்களை வாங்குவதோ என்பதைவிட சூதாடுவது அதிகமான அல்லது குறைவான பண விரயம் இல்லை. ஆனால் அதேவேளையில், வேறு வழிகளிலும் பணம் விரயமாகிறது என்பதற்காக சூதாட்டத்தை நியாயப்படுத்திவிடவும் முடியாது. பணம் வீணடிக்கப்படக்கூடாது. பணம் அதிகமாக இருந்தால் அது எதிர்கால தேவைகளுக்காக சேமிக்கப்பட வேண்டும் அல்லது கர்த்தருடைய வேலைக்கு கொடுக்கப்பட வேண்டும், வெறுமனே சூதாடி முடித்துவிடக் கூடாது.

சூதாட்டம் குறித்து வேதாகமம் எதையும் வெளிப்படையாகச் சொல்லவில்லையென்றாலும், “அதிர்ஷ்டம்” அல்லது “வாய்ப்பு” போன்றவைகளைக் குறித்து அது நிச்சயமாக கூறுகிறது. எடுத்துக்காட்டாக, லேவியராகமத்தில் பலியாடையும் போக்காட்டையும் தெரிந்தெடுப்பதற்கு சீட்டுப் போடப்பட்டது. பல்வேறு கோத்திரங்களுக்கு தேசத்தைப் பகிர்ந்துகொடுப்பதற்கு யோசுவா சீட்டுப்போட்டார். யூதாஸுக்கு பதிலாக அவனுடைய ஸ்தானத்தில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கு அப்போஸ்தலர்கள் சீட்டுப் போட்டார்கள். நீதிமொழிகள் 16:33 “சீட்டு மடியிலே போடப்படும், காரியசித்தியோ கர்த்தரால் வரும்” என்கிறது.

சூதாட்ட விடுதிகளையும் லாட்டரி நிலையங்களையும் குறித்து வேதாகமம் என்ன சொல்லக்கூடும்? சூதாட்ட விடுதிகள், பலவிதமான விளம்பர தந்திரங்களினால் எல்லாப் பணத்தையும் இழந்துவிடக்கூடிய அபாயத்திற்கு சூதாட்டம் ஆடுபவர்களை வசீகரித்து விடுகின்றன. அவைகள் குறைந்த விலையில் அல்லது இலவசமான மதுவையும் கூடப் பல வேளைகளில் வழங்குகின்றன. இதனால் போதைப்பழக்கம் ஏற்படுகிறது, அதன் விளைவாக அறிவார்ந்த தீர்மானங்களை எடுக்கும் திறமையும் குறைகிறது. பணத்தை கட்டுக்கட்டாக எடுத்துச் சென்று கொடுத்துவிட்டு ஒன்றும் கிடைக்காமல் வெறுமையான இன்பத்தோடு திரும்புவதற்கு மிகவும் பொருத்தமான முறையில் சூதாட்ட விடுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆம், சீக்கிரமாக அவர்களை விட்டுப்போகிற, வெற்றின்பங்கள் மட்டுமே மிஞ்சுகிறது. லாட்டரிக்கள் கல்வி மற்றும் சமூகத்திட்டங்களுக்கு உதவுகிற ஒன்றாகத் தங்களை காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றன. ஆனாலும், லாட்டரிப் போட்டிகளில் கலந்துகொள்கிறவர்கள் லாட்டரிச்சீட்டுகளை பணம்கொடுத்து வாங்கவே சிரமப்படும் ஆசாமிகள்தான் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எப்படியாவது கிடைத்தால் நல்லது என எண்ணும் இவர்களுக்கு “துரிதமாக ஐசுவரியம் கிடைக்கும் வழியின்” வசீகரம் தடுக்கமுடியாத ஆசை காட்டுகிறது. இதில் ஜெயிக்கிற வாய்ப்பு மிக மிகக் குறைவு என்பதால் பலருடைய வாழ்க்கையை இது நாசம் செய்து கொண்டிருக்கிறது.

லாட்டரி அல்லது குலுக்குச்சீட்டு பரிசுமுறையில் பரிசுச்சீட்டுகளிலிருந்து கிடைக்கும் பணம் தேவனைப் பிரியப்படுத்துமா? சபைக்குக் கொடுப்பதற்கு அல்லது வேறு நல்ல விஷயங்களுக்கு பணம் கொடுக்கத்தான் லாட்டரி சீட்டு வாங்குகிறோம் அல்லது சூதாட்டம் விளையாடுகிறோம் என பலர் கூறிக்கொள்கிறார்கள். இது ஒரு நல்ல நோக்கமாக இருந்தாலும் உண்மை என்னவென்றால் பரிசு வெல்பவர்களில் தேவனுக்காக அவர் தொடர்பான நோக்கங்களுக்கு செலவு செய்பவர்கள் யாருமே இல்லை. ஜாக்பாட் அடித்தபின் சில ஆண்டுகளில் முதலில் இருந்ததைவிட மோசமான நிலைமைக்குதான் லாட்டரி சீட்டில் பரிசு விழுந்தவர்களில் பெரும்பாலோர் வந்துவிடுகின்றனர் என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நல்ல காரியத்திற்காக உண்மையாகப் பணம் கொடுப்பவர்கள் இல்லை என்றே சொல்லலாம். மேலும், இந்த பூமியில் தன்னுடைய ஊழியத்தை நடத்துவதற்கு நம்முடைய பணம் கர்த்தருக்குத் தேவையில்லை. “வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோம்; கைப்பாடாய்ச் சேர்க்கிறவனோ விருத்தியடைவான்” என்கிறது நீதிமொழிகள் 13:11. தேவன் இறையாண்மையுள்ளவர் நேர்மையான வழிகளில் தன்னுடைய சபையின் தேவைகளைச் சந்திப்பார். வங்கியிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தாலோ, போதைப்பொருள் பணத்தை நன்கொடை பெறுவதாலோ தேவன் கனம் பண்ணப்படுவாரோ? நிச்சயமாக இல்லை. பணத்தாசையினால் ஏழைகளிடமிருந்து “திருடப்பட்ட” பணம் கர்த்தருக்குத் தேவையுமில்லை, அவர் அதை விரும்புகிறதுமில்லை.

ஒன்று தீமோத்தேயு 6:10 இப்படியாகச் சொல்கிறது, “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.” எபிரேயர் 13:5 “நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.” என்று கூறுகிறது. மத்தேயு 6:24 கூட இப்படியே அறிவிக்கிறது. “இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது”.

Englishமுகப்பு பக்கம்

சூதாடுவது பாவமா? சூதாட்டத்தைக் குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries