நான்கு ஆவிக்குரிய சட்டங்கள் யாவை?


கேள்வி: நான்கு ஆவிக்குரிய சட்டங்கள் யாவை?

பதில்:
இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைத்து அதன் பலனாக அடைகிற இரட்சிப்பைக் குறித்தான நற்செய்தியை பகிர்ந்துகொள்வதற்கான ஒரு வழிதான் இந்த நான்கு ஆவிக்குரிய சட்டங்கள்.

நான்கு ஆவிக்குரிய சட்டங்களில் முதலாவது சட்டம் யாதெனில், "தேவன் உங்களை நேசிக்கிறார், உங்கள் வாழ்விற்கு ஒரு அற்புதமான திட்டம் வைத்திருக்கிறார்." யோவான் 3:16 நமக்கு சொல்கிறது, "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”. இயேசு எதற்காக வந்தார் என்பதற்கான காரணத்தை யோவான் 10:10 கூறுகிறது: “நான் அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்”. தேவனுடைய அன்பிலிருந்து நம்மைத் தடுப்பது என்ன? மட்டற்ற ஒரு வாழ்வைப்பெற நம்மைத் தடுப்பது அல்லது தடையாக இருப்பது என்ன?

நான்கு ஆவிக்குரிய சட்டங்களில் இரண்டாவது சட்டம், " மனுகுலம் பாவத்தினால் கறைபட்டுள்ளது, எனவே தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விளைவாக, நமது வாழ்வில் தேவன் வைத்திருக்கிற அருமையான திட்டத்தை நாம் அறிய முடியாமல் போகிறது. "எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களானார்கள்" என்று ரோமர் 3:23 இந்த தகவலை உறுதிப்படுத்துகிறது. “பாவத்தின் சம்பளம் மரணம்” என்று ரோமர் 6:23 பாவத்தினுடைய விளைவை எடுத்துரைக்கிறது. தேவன் நாம் அவருடன் உறவு வைத்துக்கொள்ளவே நம்மை சிருஷ்டித்திருக்கிறார். ஆனபோதிலும், மனுகுலம் உலகத்திற்கு பாவத்தை கொண்டு வந்தது, எனவே தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறது. தேவன் நம்மோடு வைத்துக்கொள்ள விரும்பின அந்த மகத்தான உறவை நாம் இழந்துவிட்டோம். இதற்கு தீர்வு என்ன?

நான்கு ஆவிக்குரிய சட்டங்களில் மூன்றாவது சட்டம், "நம்முடைய பாவத்திற்காக தேவன் ஏற்படுத்தியிருக்கிற ஒரே ஏற்பாடு இயேசு கிறிஸ்துவே. இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாம் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு தேவனுடன் நமக்குள்ள சரியான உறவை மீண்டும் பெற முடியும். " நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” என்று ரோமர் 5: 8 நமக்கு சொல்லுகிறது. “கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்” என்று 1 கொரிந்தியர் 15: 3-4 வரையிலுள்ள வசனங்கள் நாம் விசுவாசித்து இரட்சிக்கப்படுவதற்கு என்ன செய்யவேண்டும் என்று தெரிவிக்கிறது. அதுமட்டுமன்றி இரட்சிப்பின் வழி இயேசு ஒருவரே என்று யோவான் 14: 6 ல் இயேசுவே தெரிவிக்கிறார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்”. இந்த அற்புதமான இரட்சிப்பின் பரிசை நான் எவ்வாறு பெற்றுக்கொள்வது?

நான்கு ஆவிக்குரிய சட்டங்களில் இறுதியாக நான்காவது சட்டம் யாதெனில், “இரட்சிப்பின் பரிசை பெற்றுக்கொள்ளவும் நம்மைக்குறித்த தேவனுடைய அற்புதமான திட்டத்தை அறிந்துகொள்ளவும் இயேசு கிறிஸ்துவே இரட்சகர் என நாம் அவரில் விசுவாசம் வைக்க வேண்டும். “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” என்று யோவான் 1:12 நமக்கு இதை விவரிக்கிறது. “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” என்று அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:31 மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது. கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இயேசு கிறிஸ்து ஒருவர் மூலம் மட்டுமே நாம் இரட்சிக்கப்பட முடியும் (எபேசியர் 2: 8-9).

நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்பினால், பின்வருகிற சொற்களை தேவனோடு தேவனிடத்தில் கூறுங்கள். தேவன்மேல் உங்களுக்கு இருக்கிற நம்பிக்கை மற்றும் அவரால் நீங்கள் பெற்றிருக்கிற இரட்சிப்புக்கு நன்றி செலுத்துகிற ஒரு செயல் தான் இந்த ஜெபம். "ஆண்டவரே, நான் உமக்கு விரோதமாக பாவம் செய்திருக்கிறேன் என்றும் அதினிமித்தம் பாவத்திற்கான தண்டனையை அடைவதற்கு பாத்திரமாய் இருக்கிறேன் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து அவரில் நான் மன்னிப்பை பெறத்தக்கதாக நான் அடையவேண்டிய தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டார் எனவும் அறிந்திருக்கிறேன். இரட்சிப்பிற்காக உம்மில் எனது பரிபூரண நமிக்கையை வைக்கிறேன். ஈவாகிய நித்திய ஜீவனுக்காக நீர் காண்பித்திருக்கிற உமது அற்புதமான கிருபைக்காகவும் மன்னிப்பிற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன்! ஆமென்!"

நீங்கள் இங்கே வாசித்த காரியங்கள் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், கீழேயுள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிற பொத்தானை அழுத்தவும்.

English
முகப்பு பக்கம்
நான்கு ஆவிக்குரிய சட்டங்கள் யாவை?