settings icon
share icon
கேள்வி

வீழ்ச்சி மனிதகுலத்தை எவ்வாறு பாதித்தது?

பதில்


"ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று" (ரோமர் 5:12). வீழ்ச்சியின் விளைவுகள் எண்ணற்றவை மற்றும் வெகு தொலைவில் உள்ளன. பாவம் நம் இருப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதித்துள்ளது. இது பூமியில் நமது வாழ்க்கையையும் நமது நித்திய வாழ்வின் விதியையும் பாதித்துள்ளது.

வீழ்ச்சியின் உடனடி விளைவுகளில் ஒன்று, மனிதகுலம் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டது. ஏதேன் தோட்டத்தில், ஆதாமும் ஏவாளும் தேவனுடன் பரிபூரண ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் கொண்டிருந்தனர். அவர்கள் அவருக்கு எதிராகக் கலகம் செய்தபோது, அந்த ஐக்கியம் முறிந்தது. அவர்கள் தங்கள் பாவத்தை உணர்ந்து, அவருக்கு முன்பாக வெட்கப்பட்டார்கள். அவர்கள் அவரிடமிருந்து தங்களை மறைத்துக்கொண்டார்கள் (ஆதியாகமம் 3:8-10), அன்றிலிருந்து மனிதன் தேவனிடமிருந்து மறைந்துகொண்டு இருக்கிறான். கிறிஸ்துவின் மூலம் மட்டுமே அந்த ஐக்கியத்தை மீட்டெடுக்க முடியும், ஏனென்றால் ஆதாமும் ஏவாளும் பாவம் செய்வதற்கு முன்பு தேவனுடைய பார்வையில் நாம் நீதிமான்களாகவும் பாவமற்றவர்களாகவும் ஆக்கப்பட்டோம். "நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்" (2 கொரிந்தியர் 5:21).

வீழ்ச்சியின் காரணமாக, மரணம் ஒரு யதார்த்தமாக மாறியது, மேலும் அனைத்து சிருஷ்டிப்புகளும் அந்த பாதிப்புக்கு உட்பட்டன. எல்லா மனிதர்களும் மரிக்கிறார்கள், அனைத்து விலங்குகளும் மரிக்கின்றன, அனைத்து தாவர உயிர்களும் மரிக்கின்றன. "சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது" (ரோமர் 8:22), கிறிஸ்து மரணத்தின் விளைவுகளிலிருந்து விடுவிப்பதற்காகத் திரும்பி வரும் நேரத்திற்காகக் காத்திருக்கிறது. பாவத்தின் காரணமாக, மரணம் என்பது தவிர்க்க முடியாத ஒரு நிஜம், யாரும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் அல்ல. "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்" (ரோமர் 6:23). இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், நாம் மரிப்பது மட்டுமல்ல, கிறிஸ்து இல்லாமல் மரிப்போமானால், நாம் நித்திய மரணத்தை அனுபவிப்போம்.

வீழ்ச்சியின் மற்றொரு விளைவு என்னவென்றால், மனிதர்கள் தாங்கள் சிருஷ்டிக்கப்பட்ட நோக்கத்தின் பார்வையை இழந்துவிட்டனர். தேவனை மகிமைப்படுத்துவதும், அவரை என்றென்றும் அனுபவிப்பதே மனிதனின் தலையாய முடிவும் வாழ்க்கையின் உயர்ந்த நோக்கமும் ஆகும் (ரோமர் 11:36; 1 கொரிந்தியர் 6:20; 1 கொரிந்தியர் 10:31; சங்கீதம் 86:9). எனவே, தேவன் மீதான அன்பே அனைத்து ஒழுக்கம் மற்றும் நன்மையின் அடிப்படை. அதற்கு நேர்மாறானது, தன்னையே உச்சமாகத் தேர்ந்தெடுப்பது. சுயநலமே வீழ்ச்சியின் சாராம்சம், மேலும் பின்வருபவை அனைத்தும் தேவனுக்கு எதிரான மற்ற குற்றங்கள் ஆகும். எல்லா வழிகளிலும் பாவம் என்பது தன்னைத்தானே மாற்றிக்கொள்வது, நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறது. நமக்கும் நமது நல்ல குணங்கள் மற்றும் சாதனைகளுக்கும் நாம் கவனம் செலுத்துகிறோம். நமது குறைகளை குறைத்துக் கொள்கிறோம். வேறு யாருக்கும் இல்லாத ஒரு கூடுதல் சாதகத்தை விரும்புகிறோம், வாழ்க்கையில் சிறப்பு உதவிகளையும் வாய்ப்புகளையும் தேடுகிறோம். மற்றவர்களின் விருப்பங்களை நாம் புறக்கணிக்கும் அதே வேளையில், நம்முடைய சொந்த விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் நாம் விழிப்புணர்வைக் காட்டுகிறோம். சுருக்கமாக, தேவனுடைய பங்கை அபகரித்து, நம் வாழ்வின் சிங்காசனத்தில் நம்மை வைக்கிறோம்.

ஆதாம் தனது சிருஷ்டிருக்கு எதிராக கலகம் செய்யத் தேர்ந்தெடுத்தபோது, அவன் தனது குற்றமற்ற தன்மையை இழந்தான், சரீர மற்றும் ஆவிக்குரிய மரணத்தின் தண்டனையை அனுபவித்தான், மேலும் அவனது மனம் பாவத்தால் இருளடைந்தது, அவனுடைய வாரிசுகளின் மனதும் அதுபோலவே ஆயிற்று. அப்போஸ்தலனாகிய பவுல் புறமதத்தினரைப் பற்றி கூறினார், "தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்" (ரோமர் 1:28). அவர் கொரிந்தியர்களிடம் கூறினார், "தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்" (2 கொரிந்தியர் 4:4). “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்” (யோவான் 12:46) என்று இயேசு கூறினார். பவுல் எபேசியர்களுக்கு நினைவூட்டினார், "முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்" (எபேசியர் 5:8). இரட்சிப்பின் நோக்கம் "அவர்கள் [அவிசுவாசிகள்] இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு" (அப்போஸ்தலர் 26:18).

வீழ்ச்சி மனிதர்களில் சீரழிவை உருவாக்கியது. "மனச்சாட்சியில் சூடுண்ட" (1 தீமோத்தேயு 4:2) மற்றும் சத்தியத்தை நிராகரித்ததன் விளைவாக ஆவிக்குரிய ரீதியில் இருளடைந்தவர்களைப் பற்றி பவுல் கூறினார் (ரோமர் 1:21). இந்த நிலையில், தெய்வீக கிருபையைத் தவிர, தேவன் ஏற்றுக்கொள்ளக்கூடியதைச் செய்யவோ அல்லது தேர்ந்தெடுக்கவோ மனிதனால் முற்றிலும் இயலாது. "மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது” (ரோமர் 8:7).

பரிசுத்த ஆவியின் இயற்கைக்கு அப்பாற்பட்ட மீளுருவாக்கம் இல்லாமல், எல்லா மனிதர்களும் தங்கள் வீழ்ச்சியடைந்த நிலையிலேயே இருப்பார்கள். ஆனால் அவருடைய கிருபை, இரக்கம் மற்றும் தயவில், தேவன் தமது குமாரனை சிலுவையில் மரிக்கும்படிச் செய்து, நம் பாவத்தின் தண்டனையை எடுத்துக்கொண்டு, தேவனிடம் நம்மை ஒப்புரவாக்கி, அவருடன் வாழும் நித்திய வாழ்வை சாத்தியமாக்கினார். பாவத்தினால் வீழ்ச்சி அடைந்து இழந்தது சிலுவையில் மீண்டுமாய் மீட்டெடுக்கப்பட்டது.

Englishமுகப்பு பக்கம்

வீழ்ச்சி மனிதகுலத்தை எவ்வாறு பாதித்தது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries