settings icon
share icon
கேள்வி

கிறிஸ்தவர்கள் மருத்துவர்களிடம் செல்லவேண்டுமா?

பதில்


மருத்துவரின் உதவியை நாடுவது தேவனிடத்திலுள்ள விசுவாசத்தின் குறைவை வெளிப்படுத்துகிறது என்று சில கிறிஸ்தவர்கள் விசுவாசிக்கிறார்கள். வார்த்தை-விசுவாசம் இயக்கத்தின்படி மருத்துவரை நாடுவது விசுவாசக் குறைச்சலாகவும் அது தேவன் உங்களை சுகப்படுத்துவதிலிருந்து தடுக்கும் என்றும் கருதுகின்றனர். கிறிஸ்தவ அறிவியல் அமைப்பை போன்றவர்கள் மருத்துவரின் உதவியை நாடுவது சில நேரங்களில் தேவன் நமக்கு நம்மை சுகப்படுத்தும்படியாக கொடுத்திருக்கும் ஆவிக்குரிய ஆற்றலை பயன்படுத்துவதற்கு தடையாகவே கருதப்படுகிறது என்கிறார்கள். இந்த கோணத்தில் தர்க்கம் மிகவும் குறைவாக உள்ளது. உங்கள் கார் பழுதடைந்து விட்டால் நீங்கள் அதை பொறித்துறை வினைஞரிடம் கொண்டு செல்வீர்களா அல்லது தேவன் அந்த காரை சரி செய்யும்படியாக காத்திருப்பீர்களா? வீட்டில் தண்ணீர் குழாய் உடைந்து விட்டால் நாம் தேவன் தண்ணீர் ஒழுகுவதை சரிசெய்வதற்காக காத்திருப்போமா அல்லது குழாய் செப்பனிடுபவரை அழைப்போமா? நம்முடைய சரீரத்தை சரிசெய்வது போலவே தேவனும் கார் மற்றும் குழாயை சரிசெய்ய போதுமானவர். தேவனால் அற்புதத்தை செய்ய முடியும் ஆனால் நமக்கு உதவிசெய்ய கூடிய அறிவும் திறமையுமுள்ள தனிநபர்களை நாடுவதற்கு பதிலாக எப்பொழுதும் அற்புதத்தை எதிர்பார்க்க கூடாது.

வேதாகமத்திலே மருத்துவர்களை பற்றி பன்னிரண்டு முறைக்கும் மேலாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2 நாளாகமம் 16:12 மட்டுமே மருத்துவர்களிடம் போகக்கூடாது என்பதற்கு அதனை அதனுடைய சந்தர்ப்பம் மற்றும் பின்னணியை விட்டுவிட்டு பயன்படுத்தப்பட்ட வசனம் ஆகும். “ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருஷத்திலே தன் கால்களில் வியாதிகண்டு, அவன் நோவு மிகவும் உக்கிரமாயிருந்தது; அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான்.” இங்கு ஆசா மருத்துவரை நாடினது அல்லது பரிகாரிகளைத் தேடியது பிரச்சனையல்ல ஆனால் அவன் தேவனுடைய உதவியை நாடவில்லை என்பதே பிரச்சனையாகும். மருத்துவரை நாடினாலும் கூட நம்முடைய முடிவான நம்பிக்கை மருத்துவர் மீது அல்ல தேவனிடத்திலேயே இருக்க வேண்டும்.

அநேக வசனங்கள் மருத்துவ சிகிச்சையை பயன்படுத்தியதற்கு அடையாளமாக உள்ளன. குறிப்பாக கட்டுபோடுதல் (ஏசாயா1:6), எண்ணெய் (யாக்கோபு 5:14), எண்ணெயும் திராட்சரசமும் (லூக்கா 10:34), இலைகள் (எசேக்கியேல் 47:12), திராட்சரசம் (1 திமோத்தேயு 5:23), மற்றும் கீலேயாத்தின் பிசின் தைலம் (எரேமியா 8:22). மேலும் லூக்காவின் சுவிசேஷம் மற்றும் அப்போஸ்தலருடைய நடபடிகளை எழுதிய லூக்காவை பவுல் “பிரியமான வைத்தியனாகிய லூக்கா” என்று குறிப்பிடுகிறார் (கொலோசெயர் 4:14).

மாற்கு 5:25-30-ல் பெரும்பாடுள்ள ஸ்திரி அவளுடைய தெடர்ச்சியான இரத்த போக்கை ஒரு மருத்துவராலும் சுகமாக்க முடியாததாக இருப்பினும் அவள் அநேக வைத்தியர்களிடம் சென்று தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தாள் என்று வாசிக்கிறோம். அவள் இயேசுகிறிஸ்துவிடம் வந்து அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவாள் என்று நினைத்து வஸ்திரத்தை தொட்டு சுகமடைந்தாள். இயேசு ஏன் பாவிகளோடு நேரம் செலவிடுகிறார் என்று பரிசேயர்கள் கேட்ட போது அவர் “பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை என்றார்” (மத்தேயு 9:12). இந்த வசனங்களினின்று ஒருவர் கீழ்கண்ட கொள்கைகளை வகுக்க முடியும்:

1) மருத்துவர்கள் தேவன் அல்ல மற்றும் அவர்களை தேவனாக பார்க்கவும் கூடாது. சில நேரங்களில் அவர்கள் உதவலாம் ஆனால் அநேக நேரங்களில் பணத்தை பிடுங்குவதே அவர்களின் முடிவாக இருக்கிறது.

2) மருத்துவர்களை பயன்படுத்துவது மற்றும் “உலகபிரகாரமான” சுகத்தை பெறுவது வேதவாக்கியங்களில் கண்டனமாக கண்டிக்கப்படவில்லை. உண்மையில் மருத்துவ சிகிச்சை நல்லதாகவே பார்க்கப்படுகிறது.

3) எந்த ஒரு சரீர பலவீனமாக இருந்தாலும் தேவனுடைய இடைபடுதலையே எதிர்பார்க்க வேண்டும் (யாக்கோபு 4:2; 5:13). தேவன் நாம் எதிர்பார்க்கும் அதே வழியில் பதிலளிபார் என்று அவர் ஒரு போதும் நமக்கு வாக்குகொடுக்கவில்லை (ஏசாயா 55:8-9), ஆனால் தேவன் எல்லாவற்றையும் அன்பின் மூலம் மற்றும் நம்முடைய நலனுக்காகவே செய்கிறார் என்ற நிச்சயம் நமக்கு இருக்கிறது (சங்கீதம் 145:8-9).

எனவே, கிறிஸ்தவர்கள் மருத்துவர்களிடம் செல்லலாமா? தேவன் நம்மை ஞானமுள்ளவர்களாகவும் மருந்துக்களை தயாரிப்பதற்கு வேண்டிய திறமையையும் எப்படி நம்முடைய சரீரதிற்கு சிகிச்சை கொடுக்க வேண்டும் என்பதற்கான ஆற்றலையும் தந்திருக்கிறார். இந்த ஞானத்தையும் ஆற்றலையும் சரீர சுகத்திற்காக பயன்படுத்துவது தவறல்ல. தேவன் நோயிலிருந்து சுகத்தையும் மீட்பையும் மருத்துவர்கள் மூலம் கொடுப்பதால் அவர்களை தேவனுடைய ஈவாக கருதலாம். அதேவேளையில், நம்முடைய முடிவான நம்பிக்கை மற்றும் விசுவாசம் தேவனாகத்தான் இருக்க வேண்டுமே தவிர மருத்துவரோ அல்லது மருந்தோ அல்ல. கேட்கிற யாவருக்கும் ஞானத்தை சம்பூரணமாய் கொடுப்பேன் என்று வாக்குபண்ணின தேவனிடத்தில் இப்படிப்பட்ட கடினமான தீர்மானங்களை எடுக்க நாம் தேட வேண்டும் (யாக்கோபு 1:5).

English



முகப்பு பக்கம்

கிறிஸ்தவர்கள் மருத்துவர்களிடம் செல்லவேண்டுமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries