விவாகரத்தையும் மறுதிருமணத்தையும் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?


கேள்வி: விவாகரத்தையும் மறுதிருமணத்தையும் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்:
விவாகரத்தைப் பற்றி ஒருவர் எந்த கண்ணோட்டத்தை எடுத்துக்கொண்டாலும், மல்கியா 2:16 “தள்ளிவிடுதலை (விவாகரத்தை) நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்” என்பதை முதலாவது நினைவிற்கொள்ள வேண்டும். வேதாகமத்தின்படி, திருமணம் என்பது வாழ்நாள் முழுவதுமுள்ள ஒரு ஒப்பந்தம் ஆகும். இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார். (மத்தேயு 19:6). ஆனாலும், திருமணம் என்பது பாவத்தில் இருக்கிற இரு மனிதர்களைப் பற்றியது என்பதால் விவாகரத்துக்கள் நடக்கும் என்பதையும் கர்த்தர் உணர்ந்திருக்கிறார். பழைய ஏற்பாட்டிலேயே, விவாகரத்து செய்தவர்களின், குறிப்பாக பெண்களின், உரிமைகளைப் பாதுகாப்பதெற்கென, அவர் சில கட்டளைகளை விதித்திருந்தார் (உபாகமம் 24:1-4). இது கர்த்தர் விரும்பினதால் அல்ல, மக்களுடைய கடின இருதயத்தினால் இந்த கட்டளைகள் கொடுக்கப்பட்டன என்பதை இயேசு சுட்டிக்காட்டினார் (மத்தேயு 19:8).

மத்தேயு 5:32 மற்றும் 19:9ல் கொடுக்கப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளை ஆதாரமாக வைத்தே வேதாகமத்தில் விவாகரத்துச் செய்யவும், மறுமணம் செய்துகொள்ளவும் அனுமதி இருக்கிறதா என்கிறதான சர்ச்சை எழுகிறது. வேதாகமத்தில் இருக்கும் “வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி” என்ற சொல் ஒன்று மாத்திரமே விவாகரத்துக்கும் மறுமணம் செய்துகொள்வதற்கும் கர்த்தருடைய அனுமதியை வழங்குகிறது. அநேக வேத வியாக்கியான அறிஞர்கள் இந்த “திருமண உறவில் உண்மையில்லாமை” (வேசித்தனம்) குறித்த “விலக்கு விதி” “நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் வரை” உள்ள காலத்தை குறிப்பதாகப் புரிந்துகொள்கிறார்கள். யூதகுல மரபுப்படி, “நிச்சயதார்த்தம்” செய்துகொண்டாலே ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொண்டதாகப் பொருள். இந்தக் கண்ணோட்டத்தின்படி, விவாகரத்து செய்வதற்கு ஒரே சரியான காரணம், “நிச்சயதார்த்தம்” நடந்திருக்கும் காலத்திலே செய்யப்படும் வேசித்தனம் என்றாகிறது.

ஆனாலும், “வேசித்தனம்” (திருமண உறவில் உண்மையில்லாமை) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்கச் சொல், எல்லாவிதமான வேசித்தனப் பாவத்தையும் குறிக்கும் சொல்லாகும். அதாவது விபச்சாரம், வேசித்தனம் போன்றவற்றை அது குறிக்கலாம். வேசித்தனம் செய்யப்பட்டால் விவாகரத்தை அனுமதிக்கலாம் என்று இயேசு சொல்கிறதுபோல் தெரிகிறது. பாலியல் உறவு திருமண ஒப்பந்தத்தின் ஒரு பகுதி: “இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்” (ஆதியாகமம் 2:24; மத்தேயு 19:5; எபேசியர் 5:31). எனவே, திருமணத்திற்கு வெளியே வைத்துக்கொள்ளப்படும் எந்த பாலியல் உறவும் விவாகரத்து செய்வதற்கான ஒரு காரணமாக அனுமதிக்கப்படலாம். இப்படியிருக்குமெனில், இந்தப் பகுதியில் மறுமணத்தையும் மனதில் வைத்துக்கொண்டுதான் இயேசு பேசுகிறார். “வேறொருத்தியை விவாகஞ்செய்கிறவன்” (மத்தேயு 19:9) என்ற சொற்றொடர், விலக்கு விதியை எப்படி வேண்டுமானலும் புரிந்துகொண்டாலும் அது பயன்படுத்தப்படும்போது விவாகரத்து மற்றும் மறுதிருமணம் இரண்டும் அனுமதிக்கப்படவேண்டும் என்பதைக் காட்டுகிறது. இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் இருவரில் பாவம் செய்யாதவரே மறுதிருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படுகிறார். இங்கு எழுதப்படவில்லையெனினும், விவாகரத்துக்குப்பின் மறுமணம் செய்துகொள்ள அனுமதி என்பது யாருக்கு எதிராக பாவம் செய்யப்பட்டதோ அவருக்கு கிடைக்கும் கர்த்தருடைய இரக்கமாகும், பாவம் செய்தவருக்கு அல்ல. “பாவம் செய்தவரை” மறுமணம் செய்துகொள்ள அனுமதித்த செயல் எங்காவது நடந்திருக்கலாம், ஆனால் இங்கு வேதாகமத்தில் எழுதியிருப்பதில் அப்படிப் போதிக்கப்படவில்லை.

அவிசுவாசியான கணவனோ மனைவியோ விசுவாசியான தன்னுடைய துணையை விவாகரத்து செய்யும்போது மறுமணத்திற்கு அனுமதியை 1 கொரிந்தியர் 7:15ல் சொல்லப்பட்டுள்ள “விலக்கு” மூலம் அளிக்கப்படுவதாகச் சிலர் புரிந்துகொள்கிறார்கள். ஆனால் அங்கு அது கொடுக்கப்பட்டிருக்கும் சூழல் அல்லது பின்னணி, ஒரு அவிசுவாசி விசுவாசியான தன்னுடைய கணவரையோ மனைவியையோ விட்டுப்பிரிந்துபோக நினைத்தால் அந்த விசுவாசி திருமணத்தில் கட்டுப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றுதான் கூறூகிறதே தவிர மறுதிருமணத்தைப் பற்றி குறிப்பிடவில்லை. சிலர் கொடுமைக்குள்ளாவதை (கணவனோ, மனைவியோ அல்லது குழந்தையோ) விவாகரத்துச் செய்வதற்கு தகுந்த காரணமாகக் கூறுகின்றனர். ஆனாலும் வேதாகமத்தில் இது ஒரு காரணமாகக் கூறப்படவில்லை. எது எப்படியிருந்தாலும், கர்த்தருடைய வசனத்திலும் அப்படித்தான் கூறப்பட்டிருக்கும் என்று ஒரு ஊகத்தில் சொல்லுதல் சரியானதல்ல.

வேசித்தனத்தின் பொருள் என்னவாக இருந்தாலும் அது விவாகரத்தை அனுமதிக்க மட்டுமே செய்கிறது, விவாகரத்து கட்டாயம் என்றாக்குவதில்லை என்பது விலக்கு விதியைப் பற்றிய விவாதங்களில் சில வேளைகளில் விடுபட்டுப் போகின்றன. விபச்சாரம் நடந்திருந்தாலும் கூட, கர்த்தருடைய கிருபையினால் ஒரு தம்பதியினர் மன்னிக்க கற்றுக்கொண்டு தங்களுடைய திருமணத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். கட்டாயமாக அவருடைய மாதிரியைப் பின்பற்றி விபச்சார பாவத்தைக் கூட மன்னிக்க முடியும் (எபேசியர் 4:32). ஆனாலும், பல வேளைகளில், அந்த கணவனோ அல்லது மனைவியோ மனந்திரும்பாமல் வேசித்தனத்தைத் தொடர்கிறார்கள். அது போன்ற இடங்களில்தான் மத்தேயு 19:9ஐ பயன்படுத்த தேவை எழுகிறது. விவாகரத்து ஆனவுடன் மறுமணம் செய்துகொள்ள பலர் அவசரப்படுகிறார்கள். ஆனால் கர்த்தரோ அவர்கள் தனியாய் இருக்கவேண்டும் என்பதை விரும்பலாம். சிலருடைய கவனம் சிதறாமல் இருக்க (1 கொரிந்தியர் 7:32-35) அவர்கள் தனிமையாயிருக்க கர்த்தரால் அழைக்கப்படுகிறார்கள். சில சூழல்களில் விவாகரத்துக்கு பின் மறுமணம் செய்யலாம், ஆனால் மறுமணத்தை கட்டாயம் தெரிவு செய்துகொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை.

அவிசுவாச உலகத்திலிருக்கும் அளவிற்கு நிகராக விவாகரத்தின் எண்ணிக்கை விசுவாசிக்கிற கிறிஸ்தவர்கள் மத்தியிலும் அதிகமாக இருப்பதுதான் மிகவும் வேதனையளிக்கிறது. கர்த்தர் விவாகரத்தை வெறுக்கிறார் என்பதையும் (மல்கியா 2:16) மன்னித்தலே ஒரு விசுவாசியின் வாழ்வின் அடையாளமாக இருக்கவேண்டும் (லூக்கா 11:4; எபேசியர் 4:32) என்பதையும் வேதாகமம் மிகத்தெளிவாகக் காண்பிக்கிறது. ஆனாலும், தன்னுடைய பிள்ளைகள் மத்தியிலும் விவாகரத்து நடைபெறும் என்பதைக் கர்த்தர் ஏற்றுக்கொள்கிறார். ஒரு விவாகரத்து அல்லது மறுதிருமணம் மத்தேயு 19:9ல் கூறப்பட்ட விலக்கு விதியின் படியானது இல்லையென்றாலும், கர்த்தர் தம்மை குறைவாக அன்பு செய்கிறார் என விவாகரத்து செய்துகொண்ட அல்லது மறுதிருமணமும் செய்துகொண்ட விசுவாசி நினைக்க கூடாது. பலவேளைகளில் கிறிஸ்தவர்களின் பாவத்தினால் ஏற்பட்ட கீழ்படியாமையை பல மேன்மையான நன்மைகளை அடைய கர்த்தர் பயன்படுத்துகிறார்.

English
முகப்பு பக்கம்
விவாகரத்தையும் மறுதிருமணத்தையும் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?

எப்படி கண்டுபிடிக்க ...

கடவுளோடு நித்தியத்தை செலவிடுங்கள்கடவுளிடமிருந்து மன்னிப்பைப் பெறுங்கள்