settings icon
share icon
கேள்வி

தெய்வீக ஏற்பாடு என்றால் என்ன?

பதில்


இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் தேவன் நிர்வகிக்கும் வழிமுறையாக இந்த தெய்வீக ஏற்பாடு உள்ளது. எல்லாவற்றையும் தேவன் முழுமையாகக் கட்டுப்படுத்துகிறார் என்று தெய்வீக ஏற்பாட்டின் கோட்பாடு வலியுறுத்துகிறது. இது பிரபஞ்சம் முழுவதையும் (சங்கீதம் 103:19), சரீரப்பிரகாரமான உலகம் (மத்தேயு 5:45), தேசங்களின் விவகாரங்கள் (சங்கீதம் 66:7), மனித பிறப்பு மற்றும் விதி (கலாத்தியர் 1:15), மனித வெற்றிகள் மற்றும் தோல்விகள் (லூக்கா 1:52), மற்றும் அவருடைய ஜனங்களின் பாதுகாப்பு (சங்கீதம் 4:8) ஆகியவை உள்ளடக்கியது. இந்த கோட்பாடு பிரபஞ்சம் தற்செயலாக அல்லது விதியால் நிர்வகிக்கப்படுகிறது என்கிற கருத்துக்கு நேரடி எதிர்மாறாக நிற்கிறது.

தெய்வீக ஏற்பாட்டின் நோக்கம் அல்லது குறிக்கோள் தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாகும். அவருடைய நோக்கங்கள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக, தேவன் மனிதர்களின் விவகாரங்களை நிர்வகிக்கிறார், மேலும் இயற்கையான விஷயங்களின் மூலம் செயல்படுகிறார். இயற்கையின் விதிகள் பிரபஞ்சத்தில் பணிபுரியும் தேவனின் சித்தரிப்பே தவிர வேறில்லை. இயற்கையின் விதிகளுக்கு உள்ளார்ந்த சக்தி இல்லை, அவை சுதந்திரமாக செயல்படுவதுமில்லை. இயற்கையின் நியதிகளும் சட்டங்களும் நிர்வகிக்க தேவன் வகுத்துள்ள விதிகள் மற்றும் பிரமாணங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை காண்பிக்கிறது.

மனித விருப்பத்திற்கும் இதுவே பொருந்தும். ஒரு மெய்யான அர்த்தத்தில், தேவனின் விருப்பத்தைத் தவிர்த்து தேர்வு செய்யவோ அல்லது செயல்படவோ நமக்கு சுதந்திரமில்லை. நாம் செய்யும் அனைத்தும், நாம் தேர்ந்தெடுக்கும் அனைத்தும் தேவனின் விருப்பத்திற்கு ஏற்பவே இருக்கின்றன நம்முடைய பாவமான தேர்வுகள் கூட அப்படியே இருக்கின்றன (ஆதியாகமம் 50:20). இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், தேவன் நம்முடைய தேர்வுகளையும் செயல்களையும் கட்டுப்படுத்துகிறார் (ஆதியாகமம் 45: 5; உபாகமம் 8:18; நீதிமொழிகள் 21: 1), ஆனாலும் அவர் தார்மீக முகவர்கள் என்ற நமது பொறுப்பை மீறாத வகையில் அவ்வாறு செய்கிறார், மேலும் இது நமது விருப்பத்தின் யதார்த்தத்தை மறுக்கவும் இல்லை.

தெய்வீக ஏற்பாட்டின் கோட்பாட்டை சுருக்கமாக இந்த வழியில் கூறலாம்: "தேவன் நித்திய காலங்களில், தனது சொந்த விருப்பத்தின் பேரில், நடக்கவிருக்கும் அனைத்தையும் நியமித்தார்; இருப்பினும் எந்த விதத்திலும் தேவன் பாவத்தை உருவாக்கியவர் அல்ல; தேவன் தனது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான முதன்மை வழிமுறையானது இரண்டாம் நிலை காரணங்கள் (எ.கா., இயற்கையின் விதிகள், மனித தேர்வு). வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் தனது சித்தத்தை நிறைவேற்ற இந்த இரண்டாம் காரணங்களால் மறைமுகமாக செயல்படுகிறார்.

தேவன் சில சமயங்களில் அவருடைய சித்தத்தை நிறைவேற்ற நேரடியாக வேலை செய்கிறார். இந்த செயல்பாடுகளைத்தான் நாம் அற்புதங்கள் என்று அழைக்கிறோம் (அதாவது இயற்கைக்கு மாறாக இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள்). ஒரு அதிசயம் என்பது தேவனின் விருப்பத்தையும் நோக்கத்தையும் நிறைவேற்றுவதற்காக இயற்கையான ஒழுங்கின் குறுகிய காலத்திற்கு அந்த விதிகளைத் தவிர்ப்பது ஆகும். அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்திலிருந்து இரண்டு எடுத்துக்காட்டுகள் தேவனின் விருப்பத்தை நிறைவேற்ற நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்படுவதை முன்னிலைப்படுத்த உதவும். அப்போஸ்தலர் 9 ல், தர்சு பட்டணத்து சவுலின் மாற்றத்தைக் காண்கிறோம். ஒளிரும் ஒளியில், சவுல் அல்லது பவுல் மட்டுமே கேட்ட குரலில், தேவன் அவருடைய வாழ்க்கையை என்றென்றும் மாற்றினார். பவுலைக்கொண்டு தனது சித்தத்தை மேலும் நிறைவேற்றுவது தேவனின் விருப்பமாக இருந்தது, மேலும் பவுலை மாற்ற தேவன் நேரடி வழிகளைப் பயன்படுத்தினார். கிறிஸ்தவத்திற்கு மாறிய எவருடனும் பேசுங்கள், இதுபோன்ற ஒரு கதையை நீங்கள் ஒருபோதும் கேட்க மாட்டீர்கள். ஒரு பிரசங்கம் பிரசங்கிப்பதன் மூலமாகவோ அல்லது ஒரு புத்தகத்தைப் படிப்பதன் மூலமாகவோ அல்லது ஒரு நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரின் தொடர்ச்சியான சாட்சியாகவோ நம்மில் பெரும்பாலானோர் கிறிஸ்துவிடம் வருகிறோம். அதோடு, வழக்கமாக வாழ்க்கை சூழ்நிலைகள் உள்ளன-வேலை இழப்பு, குடும்ப உறுப்பினரின் இழப்பு, தோல்வியுற்ற திருமணம், ரசாயன போதை போன்றவைகள் மாற்றத்திற்குள்ளாக கொண்டு வருகின்றன. பவுலின் மாற்றம் நேரடி மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட மாற்றமாகும்.

அப்போஸ்தலர் 16:6-10-ல், கடவுள் தம்முடைய சித்தத்தை மறைமுகமாக நிறைவேற்றுவதைக் காண்கிறோம். இது பவுலின் இரண்டாவது மிஷனரி பயணத்தின் போது நடைபெறுகிறது. பவுலும் அவருடைய சக ஊழியர்களும் துரோவாபட்டணத்துக்கு செல்ல வேண்டும் என்று தேவன் விரும்பினார், ஆனால் பவுல் பிசீதியாவின் அந்தியோக்கியாவை விட்டு வெளியேறியபோது, கிழக்கு நோக்கி ஆசியாவிற்கு செல்ல விரும்பினார். பரிசுத்த ஆவியானவர் ஆசியாவில் இந்த வார்த்தையை பேச தடை விதித்ததாக வேதாகமம் கூறுகிறது. பின்னர் அவர்கள் மேற்கில் பித்தினியாவிற்கு செல்ல விரும்பினர், ஆனால் கிறிஸ்துவின் ஆவி அவர்களைத் தடுத்தார், எனவே அவர்கள் துரோவாபட்டணத்துக்குச் சென்றார்கள். இது பின்னோக்கி எழுதப்பட்டிருந்தது, ஆனால் அந்த நேரத்தில் அவர்கள் ஏன் அந்த இரண்டு பகுதிகளுக்குள் செல்ல முடியவில்லை என்பதற்கு சில தர்க்கரீதியான விளக்கங்கள் இருந்தன. இருப்பினும், உண்மையைப் பிறகு அவர்கள் உணர்ந்துகொண்டார்கள், அதாவது அவர்கள் எங்கு செல்ல வேண்டுமென்று அவர் விரும்புகிறாரோ அங்கேதான் தேவன் அவர்களை வழிநடத்துகிறார் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். நீதிமொழிகள் 16:9 இதைப் பற்றி பேசுகிறது: “மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்.”

மறுபுறம், எல்லாவற்றையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ திட்டமிடும் தேவனின் கருத்து சுதந்திரமான விருப்பத்தின் எந்தவொரு சாத்தியத்தையும் அழிக்கிறது என்று கூறுபவர்களும் உள்ளனர். தேவனுடைய முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தால், நாம் எடுக்கும் முடிவுகளில் நாம் எவ்வாறு உண்மையிலேயே சுதந்திரமாக இருக்க முடியும்? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சுயமான விருப்பம் அர்த்தமுள்ளதாக இருக்க, தேவனின் இறையாண்மை கட்டுப்பாட்டிற்கு வெளியே இருக்கும் சில விஷயங்கள் இருக்க வேண்டும் - எ.கா., மனித தேர்வின் தற்செயல். இது உண்மை என்று ஒரு வாதத்திற்காக எடுத்துக்கொள்வோம். பிறகு என்ன? எல்லா தற்செயல்களையும் தேவன் முழுமையாகக் கட்டுப்படுத்தவில்லை என்றால், நம்முடைய இரட்சிப்பை அவர் எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்? பவுல் பிலிப்பியர் 1:5-ல் “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று” கூறுகிறார். தேவன் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தவில்லை என்றால், இந்த வாக்குறுதியும் மற்ற எல்லா வேதாகம வாக்குறுதிகளும், தவறானவைகள் என்றாகிவிடும். நம்மில் ஆரம்பிக்கப்பட்ட இரட்சிப்பின் நல்ல வேலையானது முடிவடையும் என்கிற முழுமையான நம்பிக்கை நமக்கு இருந்திருக்க முடியாது.

மேலும், தேவன் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தவில்லை என்றால், அவர் இறையாண்மை கொண்டவர் அல்ல, அவர் இறையாண்மை இல்லாதவர் என்றால், அவர் தேவனும் அல்ல. எனவே, தேவனின் கட்டுப்பாட்டுக்கு வெளியே தற்செயல்களைப் பராமரிப்பதன் விளைவுகள் தேவனாக இல்லாத ஒரு தேவனை விளைவிக்கிறது. நம்முடைய “சுய” விருப்பம் தெய்வீக ஏற்பாட்டை மீற முடியும் என்றால், முடிவான நிலையில் தேவன் யார்? நாம் தான். அது வெளிப்படையாக, ஒரு கிறிஸ்தவ மற்றும் வேதாகம உலகக் கண்ணோட்டம் கொண்ட எவருக்கும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். தெய்வீக ஏற்பாடு நம் சுதந்திரத்தை அழிக்காது. மாறாக, தெய்வீக ஏற்பாடே அந்த சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்த நமக்கு உதவுகிறது.

English



முகப்பு பக்கம்

தெய்வீக ஏற்பாடு என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries