settings icon
share icon
கேள்வி

சபை எடுத்துக்கொள்ளப்படுதல் மற்றும் இரண்டாம் வருகைக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன?

பதில்


சபை எடுத்துக்கொள்ளப்படுதல் மற்றும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை ஆகிய இந்த இரண்டும் அநேகருக்கு மத்தியில் பெருமளவில் அடிக்கடி குழப்பம் அடைகின்றன. சில நேரங்களில் ஒரு வசனம் சபை எடுத்துக்கொள்ளப்படுதல் குறித்து கூறுகிறதா அல்லது இரண்டாவது வருகையைக் குறிப்பிடுகிறதா என்பதை தீர்மானிக்க கடினமாக உள்ளது. ஆகவேதான், இறுதி நாட்களில் என்ன சம்பவிக்கப்போகிறது என்று வேதாகமம் கூறுவதையும் தீர்க்கதரிசனங்களைப் படிப்பதும், இந்த இரண்டிற்கும் இடையேயான வேறுபாட்டை புரிந்து கொள்வதற்கு மிகவும் முக்கியம் ஆகும்.

சபை எடுத்துக்கொள்ளப்படுதல் என்பது இயேசு கிறிஸ்துவின் திருச்சபை (கிறிஸ்துவை விசுவாசிக்கும் புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் அனைவரும்) பூமியில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டு அவரோடு பரலோகம் செல்வதாக இருக்கிறது. இந்த நிகழ்வு 1 தெசலோனிக்கேயர் 4:13-18 மற்றும் 1 கொரிந்தியர் 15:50-54 இல் விவரிக்கப்பட்டுள்ளது. மரித்த விசுவாசிகள் சரீரங்கள் உயிர்த்தெழப்பட்டு, இன்னும் உயிரோடிருக்கிற விசுவாசிகளுடன் சேர்ந்து, வானத்தில் இயேசுவை சந்திப்பார்கள். இது ஒரு சம்பவம் கண்ணிமைக்கும் ஒரு கணப்பொழுதில் நடந்தேறுகிறதாய் இருக்கும். இரண்டாம் வருகையானது இயேசு எதிர்க்கிரிச்துவை தோற்கடிக்க திரும்பும் போது, தீயவைகளை அழிக்க, மற்றும் அவரது ஆயிரம் ஆண்டு ராஜ்யத்தை நிறுவ வருகிறபொழுது நிகழ்வதாகும். இரண்டாம் வருகை வெளி. 19:11-16-ல் விவரிக்கப்பட்டுள்ளது.

சபை எடுத்துக்கொள்ளப்படுதலுக்கும் இயேசுவின் இரண்டாவது வருகைக்கும் இடையிலான முக்கியமான வேறுபாடுகள் பின்வருமாறு:

1) சபை எடுத்துக்கொள்ளப்படுதலின் போது, விசுவாசிகள் வான மேகத்தில் இயேசுவை சந்திப்பார்கள் (1 தெசலோனிக்கேயர் 4:17). இரண்டாம் வருகையில், விசுவாசிகள் அவருடன் பூமிக்குத் திரும்புவார்கள் (வெளி. 19:14).

2) இயேசுவின் இரண்டாவது வருகையானது பெரிதும் பயங்கரமுமான உபத்திரவ காலம் முடிவுற்ற பிறகு ஏற்படுகிறது (வெளி. 6-19 அதிகாரங்கள்). இந்த உபத்திரவத்திற்கு முன்பாக சபை எடுத்துக்கொள்ளப்படுதல் ஏற்படுகிறது (1 தெசலோனிக்கேயர் 5:9, வெளிப்படுத்துதல் 3:10).

3) சபை எடுத்துக்கொள்ளப்படுதலின் போது விசுவாசிகள் எடுத்துக்கொள்ளப்படுவதன் மூலம் மீட்பை அடைவார்கள் (1 தெசலோனிக்கேயர் 4:13-17; 5:9). இரண்டாம் வருகையில் அவிசுவாசிகளானவர்களை நியாயத்தீர்ப்புக்காக அகற்றப்படும் ஒரு செயல் ஆகும் (மத்தேயு 24:40-41).

4) சபை எடுத்துக்கொள்ளப்படுதலின் போது அது இரகசியமாகவும் உடனடியாகவும் இருக்கும் (1 கொரிந்தியர் 15:50-54). ஆனால் இரண்டாம் வருகையானது அனைவருக்கும் தெரியும் வண்ணமாக பகிரங்கமாக மற்றும் வெளிப்படையாக இருக்கும் (வெளி. 1:7; மத்தேயு 24:29-30).

5) கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வேறு சில இறுதி நேர நிகழ்வுகள் நடைபெறும் வரை நடக்காது (2 தெசலோனிக்கேயர் 2:4; மத்தேயு 24:15-30; வெளி. 6-18 அதிகாரங்கள்). சபை எடுத்துக்கொள்ளப்படுதல் ஒரு தவிர்க்க முடியாத மற்றும் அது எந்த நேரத்திலும் நடந்தேறும் ஒரு நிகழ்வாகும் (தீத்து 2:13; 1 தெசலோனிக்கேயர் 4:13-18; 1 கொரிந்தியர் 15:50-54).

சபை எடுத்துக்கொள்ளப்படுதல் மற்றும் இயேசுவின் இரண்டாம் வருகையை முற்றிலும் வேறுபட்ட நிகழ்வுகளாக வைத்திருப்பது ஏன் முக்கியம்?

1) சபை எடுத்துக்கொள்ளப்படுதல் மற்றும் இயேசுவின் இரண்டாம் வருகை ஒரே நிகழ்வாக இருந்தால், விசுவாசிகளும் உபத்திரவத்திற்குள் செல்ல வேண்டும் என்றாகிவிடும் (1 தெசலோனிக்கேயர் 5:9; வெளி. 3:10).

2) சபை எடுத்துக்கொள்ளப்படுதல் மற்றும் இயேசுவின் இரண்டாம் வருகை ஒரே நிகழ்வாக இருந்தால், சபை எடுத்துக்கொள்ளப்படுதற்கு வரும் கிறிஸ்துவின் வருகை ஒரு தவிர்க்க முடியாத எந்நேரம் வேண்டுமானாலும் நிகழ்வாகவும் இருக்க முடியாது - அவர் திரும்பி வருவதற்கு முன்பதாக பல விஷயங்கள் நடந்தேற உள்ளன (மத்தேயு 24:4-30).

3) உபத்திரவ காலத்தை விவரிப்பதில், வெளி. 6-19 வரையிலுள்ள அதிகாரங்களில் எங்கும் திருச்சபையைப் பற்றி குறிப்பிடுவதில்லை. உபத்திரவ காலத்தின்போது அதாவது "யாக்கோபிற்கு இக்கட்டுகாலம்" வரும்போது (எரேமியா 30:7) – தேவன் மீண்டும் தனது பிரதானமான கவனத்தை இஸ்ரேலுக்கு நேராக திருப்புவார் (ரோமர் 11:17-31).

சபை எடுத்துக்கொள்ளப்படுதல் மற்றும் இயேசுவின் இரண்டாவது வருகை ஒத்தது ஆனால் தனித்தனி நிகழ்வுகள் ஆகும். இரண்டுமே இயேசு மீண்டுமாக திரும்பி வருகிற காரியத்தையே குறிப்பிடுகின்றன. இரண்டுமே இறுதிகால நிகழ்வுகளாகும். இருப்பினும், நாம் வேறுபாடுகளை உணர்ந்து கொள்வது முக்கியமானதாகும். சுருக்கமாக, சபை எடுத்துக்கொள்ளப்படுதல், தேவனுடைய கோபத்தின் காலத்திற்கு முன்பே பூமியிலிருந்து எல்லா விசுவாசிகளையும் எடுத்துக்கொள்வதற்கு மேகங்களில் வரும் கிறிஸ்துவின் வருகை ஆகும். அவரது இரண்டாம் வருகை என்பது, இந்த உபத்திரவத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்காகவும், எதிர்க்கிறிஸ்து மற்றும் அவனது தீய உலக சாம்ராஜ்யத்தை தோற்கடிப்பதற்காகவும் பூமிக்கு திரும்புவதாகும்.

English



முகப்பு பக்கம்

சபை எடுத்துக்கொள்ளப்படுதல் மற்றும் இரண்டாம் வருகைக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries