settings icon
share icon
கேள்வி

என் இருதயத்தின் ஆசைகள் தேவனிடமிருந்து வந்ததா என்பதை நான் எப்படி அறிந்து கொள்வது?

பதில்


இந்த கேள்விக்கு இயேசு நமக்காக பதிலளிக்கிறார்: "எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்" (மத்தேயு 15:19). பின்னர்: “மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்” (மாற்கு 7:20-23).

இந்தப் பகுதிகளில், நம்முடைய தேவைகளின் மூலத்தை இயேசு வெளிப்படுத்துகிறார்: நமது மாம்ச இச்சைகள்/ஆசைகள் நம் உள்ளத்தில் இருந்து வருகின்றன. பாவம் என்பது வெளிப்புற சக்திகளின் விளைவாக மட்டும் வருவதில்லை. மனமும் இருதயமும் மட்டுமே கற்பனை செய்யக்கூடிய இரகசிய ஆசைகளிலிருந்து நமது எண்ணங்கள் மற்றும் நோக்கங்களின் மறைக்கப்பட்ட இடங்களில் இது பிறக்கிறது. இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், நமது பாவத்தில் வீழ்ச்சியடைந்த நிலையில், நம் இருதயத்தின் ஆசைகள் தேவனிடமிருந்து வருவதில்லை. மனிதனின் இருதயத்தின் தன்மையை எரேமியா மேலும் உறுதிப்படுத்துகிறார்: “எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?" (எரேமியா 17:9)

எல்லா மனிதர்களும் அடிப்படையில் நல்லவர்கள் மற்றும் ஒழுக்கமானவர்கள் என்பதும், வறுமை அல்லது மோசமான வளர்ப்பு போன்ற வாழ்க்கைச் சூழ்நிலைகள்தான் நம்மை கொலைகாரர்களாகவும் திருடர்களாகவும் மாற்றும் என்பது பலரின் கருத்து. ஆனால் எல்லா மனிதர்களும் ஒரு பொதுவான பலவீனத்தால்—அதாவது பாவத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்று வேதாகமம் கற்பிக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் அதை நம்முடைய பாவ இயல்பு என்று அழைக்கிறார். “அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது" (ரோமர் 7:18-20). நமது பொல்லாங்கான இருதயங்கள் நம்மை பாவத்திற்கு இட்டுச் செல்கின்றன.

மேலும், இருதயம் மிகவும் கெட்டுப்போய், வஞ்சகமானது, நம் உள்நோக்கம் நமக்கே கூடத் தெரியவில்லை. பாவமுள்ள உயிரினங்களாகிய நாம் நம் இருதயத்தின் ஆணவம் மற்றும் தன்னிறைவு ஆகியவற்றில் பொல்லாங்கானதை உருவாக்குகிறோம் (நீதிமொழிகள் 16:30; சங்கீதம் 35:20; மீகா 2:1; ரோமர் 1:30). உண்மை என்னவென்றால், தேவனால் மட்டுமே நமது ஆழ்ந்த உள்நோக்கங்களையும் உள்ளான ஆசைகளையும் ஆராய முடியும், மேலும் அவருடைய வல்லமையால் மட்டுமே நம் இருதயங்களுக்குள் கட்டப்பட்டிருக்கும் நிச்சயமற்ற தன்மையையும் சீரழிவையும் அவிழ்க்க முடியும் என்று நம்புகிறோம். அவர் ஒருவரே எல்லோரையும் ஆராய்ந்து நம்மை நெருக்கமாய் அறிந்திருக்கிறார் (எபிரெயர் 4:11-13).

அதிர்ஷ்டவசமாக, புண்படுத்தும் ஆசைகள் மற்றும் பாவப் போக்குகள் ஆகியவற்றுடன் நம்முடைய போராட்டங்களில் தேவன் நம்மைக் கைவிடுவதில்லை. மாறாக, பாவம் நம் இருதயத்தின் வாசலில் குனிந்து கிடக்கும்போது, அதை எதிர்த்து நின்று ஜெயிக்கத் தேவையான கிருபையையும் பலத்தையும் அவர் நமக்குத் தருகிறார். சங்கீதக்காரன் நமக்குச் சொல்கிறார், “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்” (சங்கீதம் 37:4-6).

தேவனையல்லாத, மனிதனுடைய மிகவும் பொல்லாத மற்றும் வஞ்சகமுள்ள இதயத்தில் தேவன் தனது சொந்த ஆசைகளை உண்மையில் விதைக்க முடியும். அவர் தீமையை நன்மையாக மாற்றுகிறார், மேலும் நம் இருதயங்களை அவரை நோக்கிய பாதையில் அமைக்கிறார், நம்முடைய சொந்த ஆசைகளை நீக்கி, அவற்றை அவருடைய விருப்பத்துடன் மாற்றுகிறார். நாம் மனந்திரும்பி அவரிடம் வந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் இரட்சிப்பின் வரத்தை ஏற்றுக்கொள்ளும்போது மட்டுமே இது நிகழ்கிறது. அந்த நேரத்தில், அவர் நம்முடைய கல்லான இருதயங்களை அகற்றி, அவற்றை மாம்ச இருதயங்களாக மாற்றுகிறார் (எசேக்கியேல் 11:19). இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆவியை நம் இதயங்களில் பதிய வைப்பதன் மூலம் அவர் இதை நிறைவேற்றுகிறார். பின்னர் நமது ஆசைகள் அவருடைய விருப்பங்களாக மாறும், நமது விருப்பங்கள் அவருடைய சித்தத்தைச் செய்ய முயல்கின்றன, மேலும் நமது கலகம் மகிழ்ச்சியான கீழ்ப்படிதலாக மாறும்.

Englishமுகப்பு பக்கம்

என் இருதயத்தின் ஆசைகள் தேவனிடமிருந்து வந்ததா என்பதை நான் எப்படி அறிந்து கொள்வது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries