settings icon
share icon
கேள்வி

கிறிஸ்தவ உறுதிப்படுத்துதல் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது?

பதில்


உறுதிப்படுத்துதல் என்பது ஒரு ஆவிக்குரிய முதிர்ச்சியைக் குறிக்கும் வழிமுறையாக சில மதங்களில் செய்யப்படும் ஒரு சடங்கு அல்லது ஆசரிப்பு. சில மரபுகளில், பொதுவாக கத்தோலிக்க மற்றும் ஆங்கிலிகன் சபைகளில், உறுதிப்படுத்தும் சடங்கு என்பது ஒரு வாலிப நபர் சபையின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக மாறும் சடங்காகும். இது சில நேரங்களில் "உறுதிப்படுத்துதல் பெயர்", பொதுவாக ஒரு புனிதரின் பெயரை வழங்குவதை உள்ளடக்கியது, இது பெரும்பாலும் இரண்டாவது நடுப்பெயராக பயன்படுத்தப்படுகிறது. திருமுழுக்கு பெற்றவர்கள் முழு சபை உறுப்பினராகவும், விசுவாசத்தின் தனிப்பட்ட, முதிர்ந்த ஏற்றுக்கொள்ளலுக்காகவும் இது சமிக்ஞை செய்வதாக உறுதிப்படுத்துகிறவர்கள் நம்புகிறார்கள். கத்தோலிக்கர்களும் ஆங்கிலிக்க சபையினரும் உறுதிப்படுத்துதலை ஏழு சடங்குகளில் ஒன்றாக அங்கீகரிக்கின்றனர்.

இருப்பினும், வேதாகமம் அத்தகைய சடங்கு விஷயத்தில் மௌனமாக இருக்கிறது. உண்மையில், ஒரு நபர் விசுவாசத்தில் இருப்பதை இன்னொருவர் "உறுதிப்படுத்த" முடியும் என்கிற கருத்தானது வேதத்தில் மறுக்கப்படுகிறது. ஒவ்வொரு நபரும் தனது சொந்த ஆத்துமாவின் நிலையை பல அளவுகோல்களின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும். முதலில், நம் இருதயத்தில் வாழும் பரிசுத்த ஆவியால் நம் இரட்சிப்பு உறுதி செய்யப்படுகிறது. "நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்" (ரோமர் 8:16). நாம் கிறிஸ்துவை கர்த்தராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ளும்போது, பரிசுத்த ஆவியானவர் நம் இருதயங்களில் வந்து வாசஞ்செய்து, அவர் இருக்கிறார் என்பதையும், நாம் அவருக்குச் சொந்தமானவர் என்பதையும் உறுதிப்படுத்துகிறார், மேலும் அவர் நமக்கு ஆவிக்குரிய காரியங்களையும் கற்பிக்கிறார் மற்றும் விளக்குகிறார் (1 கொரிந்தியர் 2:13-14), இதன் மூலம் நாம் கிறிஸ்துவின் புதிய சிருஷ்டிகள் என்பதை உறுதிப்படுத்துகிறோம் (2 கொரிந்தியர் 5:17).

நம் இரட்சிப்பின் சான்றுகளால் நாமும் விசுவாசத்தில் உறுதியாக இருக்கிறோம். 1 யோவான் 1:5-10 நம்முடைய இரட்சிப்பின் ஆதாரம் நம் வாழ்வில் வெளிப்படுகிறது என்று சொல்கிறது: நாம் ஒளியில் நடக்கிறோம், பொய் சொல்வதில்லை, நம் பாவத்தை ஒப்புக்கொள்கிறோம். யாக்கோபு 2 விசுவாசத்தின் ஆதாரம் நாம் செய்யும் கிரியைகள் என்பதை தெளிவுபடுத்துகிறது. நம் கிரியைகள் மூலம் நாம் இரட்சிக்கப்படவில்லை, ஆனால் நம்முடைய கிரியைகள் தேவன்மீதுள்ள நமது நம்பிக்கையின் இரட்சிப்புக்கான சான்றாகும். இயேசு கூறினார், "அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்" (மத்தேயு 7:20). பரிசுத்த ஆவியால் நம்மில் உற்பத்தி செய்யப்பட்ட ஆவியின் கனி (கலாத்தியர் 5:22) அவர் நமக்குள் வாழ்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது.

நாம் “நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்” (2 கொரிந்தியர் 13:5). கூடுதலாக, "உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளை செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும்பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்" என்கிறார் பேதுரு (2 பேதுரு 1:10-11).

நமது இரட்சிப்பின் கடைசி "உறுதிப்படுத்துதல்" நிச்சயமாக, எதிர்காலத்தில் உள்ளதாகும். உண்மையான கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் இறுதிவரை விடாமுயற்சியுடன் இருப்பார்கள், "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்" (1 கொரிந்தியர் 1:7-8). வாக்குத்தத்தத்தின் பரிசுத்த ஆவியால் நாங்கள் முத்திரைப் போடப்பட்டுள்ளோம், “நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்” (எபேசியர் 1:13-14). இது, உறுதிப்படுத்துதலின் உண்மையான அர்த்தமாகும்—இரட்சிப்பு கிறிஸ்துவின் இரத்தத்தால் வாங்கப்பட்டது, அதில் நாம் நம்பிக்கை வைத்திருக்கிறோம், அது அவருடனான நம் நடையால் நிரூபிக்கப்படுகிறது, மேலும் அது நமக்குள் உள்ள பரிசுத்த ஆவியால் உறுதிப்படுத்தப்படுகிறது.

English



முகப்பு பக்கம்

கிறிஸ்தவ உறுதிப்படுத்துதல் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries