கேள்வி
ஒரு கிறிஸ்தவன் தட்பவெப்ப காலநிலை மாற்றத்தை எவ்வாறு பார்க்க வேண்டும்?
பதில்
"தட்பவெப்ப காலநிலை மாற்றம்" என்ற சொற்றொடர் "புவி வெப்பமயமாதல்" என்பதை சுற்றுச்சூழல்வாதத்தின் கவர்ந்திழுக்கும்-சொற்றொடராக எவ்வாறு மாற்றுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சில விஞ்ஞானிகள்/ தட்பவெப்ப காலநிலை ஆய்வாளர்கள், மனித செயல்பாடு, முதன்மையாக பசுமைக்குடில் வாயு வெளியேற்றம், சுற்றுச்சூழலை பாதிக்கிறது என்பதில் உறுதியாக உள்ளனர். அதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்பதில் அவர்களுக்கு உறுதியாக தெரியவில்லை. சில தசாப்தங்களுக்கு முன்பு, "உலகளாவிய குளிர்ச்சி" என்பது ஒரு புதிய பனி யுகம் பற்றிய எச்சரிக்கைகள் முதன்மையான பயமுறுத்தும் தந்திரமாக இருந்தது. பெரும்பாலான விஞ்ஞானிகள்/ தட்பவெப்ப காலநிலை ஆய்வாளர்கள் இன்று புவி வெப்பமடைதல் முதன்மையான ஆபத்து என்று நம்பும் அதே வேளையில், நிச்சயமற்ற தன்மை "காலநிலை மாற்றம்" குறைவான குறிப்பிட்ட எச்சரிக்கையாகப் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுத்தது. முக்கியமாக, காலநிலை மாற்ற செய்தி இதுதான்: பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் சுற்றுச்சூழலை சேதப்படுத்துகின்றன, மேலும் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்று நமக்குத் தெரியவில்லை என்றாலும், அது மோசமாக இருக்கும் என்பது நமக்குத் தெரியும்.
தட்பவெப்ப காலநிலை வல்லுநர்கள், சூழலியலாளர்கள், புவியியலாளர்கள் போன்றவர்கள், பூமி கடந்த காலத்தில் குறிப்பிடத்தக்க வெப்பநிலை/காலநிலை மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது என்பதை ஒருமனதாக அங்கீகரித்துள்ளனர். இந்த காலநிலை மாற்றங்கள் வெளிப்படையாக மனித நடவடிக்கைகளால் ஏற்படவில்லை என்ற உண்மை இருந்தபோதிலும், இதே விஞ்ஞானிகளில் பலர் இன்று காலநிலை மாற்றத்திற்கு மனித நடவடிக்கையே முதன்மையான காரணம் என்று நம்புகிறார்கள். ஏன்? மூன்று முதன்மையான உந்துதல்கள் இருப்பதாகத் தெரிகிறது.
முதலாவதாக, பசுமை இல்ல (கிரீன்ஹவுஸ்) வாயு வெளியேற்றம் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று சிலர் உண்மையாகவும் முழுமையாகவும் நம்புகிறார்கள். அவர்கள் தரவை நேர்மையாக ஆராய்ந்து, ஒரு முடிவுக்கு வருகிறார்கள். இரண்டாவதாக, சிலர் காலநிலை மாற்ற மனநிலையை கிட்டத்தட்ட மத ஆர்வத்துடன் வைத்திருக்கிறார்கள். சுற்றுச்சூழல் இயக்கத்தில் உள்ள பலர் "பூமித்தாயைப்" பாதுகாப்பதில் மிகவும் வெறித்தனமாக உள்ளனர், அந்த இலக்கை அடைய, அது எவ்வளவு சார்புடையதாக இருந்தாலும் சரி, சமநிலையற்றதாக இருந்தாலும் சரி அவர்கள் எந்த வாதத்தையும் பயன்படுத்துவார்கள். மூன்றாவதாக, சிலர் நிதி ஆதாயத்திற்காக காலநிலை மாற்ற மனநிலையை ஊக்குவிக்கின்றனர். "பசுமை" விதிகள் மற்றும் தொழில்நுட்பங்களால் மிகப் பெரிய நிதி ஆதாயத்தைப் பெற்றவர்கள் காலநிலை மாற்ற விதியின் வலிமையான ஆதரவாளர்களில் சிலர் ஆவர். காலநிலை மாற்ற மனநிலையை ஏற்றுக்கொள்வதற்கு முன், காலநிலை மாற்றத்தை ஊக்குவிக்கும் அனைவரும் தகவலறிந்த அடித்தளம் மற்றும் தூய நோக்கங்களில் இருந்து அவ்வாறு செய்வதில்லை என்பதை அங்கீகரிக்க வேண்டும்.
அப்படியானால், ஒரு கிறிஸ்தவர் காலநிலை மாற்றத்தை எவ்வாறு பார்க்க வேண்டும்? நாம் அதை சந்தேகமாகவும் விமர்சன ரீதியாகவும் பார்க்க வேண்டும், ஆனால் அதே நேரத்தில் நேர்மையாகவும் கண்ணியத்துடனும் பார்க்க வேண்டும். மிக முக்கியமாக, கிறிஸ்தவர்கள் காலநிலை மாற்றத்தை வேதாகமத்தின்படியாகப் பார்க்க வேண்டும். காலநிலை மாற்றம் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது? அதிகமாக எதுவும் கூறவில்லை. காலநிலை மாற்றம் என்று கருதப்படுவதற்கு மிக நெருக்கமான வேதாகம எடுத்துக்காட்டுகள் வெளிப்படுத்துதல் 6-18 வரையிலுள்ள அதிகாரங்களில் தீர்க்கதரிசனம் கூறப்பட்ட கடைசிக்கால பேரழிவுகளாக இருக்கலாம். ஆயினும்கூட, இந்த தீர்க்கதரிசனங்களுக்கும் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை, மாறாக தேவனுடைய கோபத்தின் விளைவு, பெருகிய முறையில் பொல்லாத உலகில் நியாயத்தை ஊற்றுகிறது. மேலும், தேவன் அனைத்தையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிறார் என்பதையும், இந்த உலகம் நமது வீடு அல்ல என்பதையும் ஒரு கிறிஸ்தவர் நினைவில் கொள்ள வேண்டும். தேவன் ஒரு நாள் இன்றிருக்கும் தற்போதைய பிரபஞ்சத்தை அழிப்பார் (2 பேதுரு 3:7-12) மற்றும் அதற்கு பதிலாக புதிய வானங்கள் மற்றும் புதிய பூமியை உருவாக்குவார் (வெளிப்படுத்துதல் 21-22). தேவன் இறுதியில் அழிக்கப் போகிற ஒரு கிரகத்தை "காப்பாற்ற" எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும்?
பசுமை நிறமாக மாறுவதில் ஏதேனும் தவறு இருக்கிறதா? இல்லை, நிச்சயமாக இல்லை. உங்கள் கார்பன் தடத்தை குறைக்க முயற்சிப்பது நல்ல விஷயமா? ஒருவேளை அப்படித்தான் என்று வைத்துக்கொள்ளலாம். சோலார் பேனல்கள், காற்றாலை ஆலைகள் மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பின்தொடர்வது மதிப்புள்ளதா? நிச்சயமாக. இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களின் முதன்மைக் கவனம் இவைகளில் ஏதேனும் உள்ளதா? முற்றிலும் இல்லை! கிறிஸ்தவர்களாகிய நமது கவனம், ஆத்துமாக்களைக் காப்பாற்றும் ஆற்றலுடைய செய்தியான நற்செய்தியின் சத்தியத்தை பிரசங்கிப்பதாக இருக்க வேண்டும். பூமியைக் காப்பாற்றுவது நமது அதிகாரத்திலோ அல்லது பொறுப்பிலோ இல்லை. காலநிலை மாற்றம் உண்மையானதாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம், மேலும் அது மனிதனால் ஏற்படலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். தேவன் நல்லவர், இறையாண்மை உள்ளவர் என்பதும், தேவன் விரும்பும் வரை பூமி நமது வாழ்விடம் என்பதும் குறித்த காரியங்களை நாம் உறுதியாக அறிந்து கொள்ள முடியும். சங்கீதம் 46:2-3, "ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம்."
English
ஒரு கிறிஸ்தவன் தட்பவெப்ப காலநிலை மாற்றத்தை எவ்வாறு பார்க்க வேண்டும்?