settings icon
share icon
கேள்வி

ஓய்ந்துபோகுதல் வேதாகமத்தின்படியானதா?

பதில்


ஓய்ந்துபோகுதல் என்பது அந்நியபாஷையில் பேசுதல் மற்றும் குணமாக்குதலின் "அற்புத வரங்கள்" ஓய்ந்துபோய்விட்டன என்பதாகும்—அதாவது அப்போஸ்தலர்களுடைய காலத்தின் முடிவில் அந்த காலத்தோடு தொடர்புடைய அற்புதங்களை செய்யும் வரங்கள் நின்றுபோய்விட்டன என்பதாகும். ஓய்ந்துபோகுதல் என்னும் கோட்பாட்டை விசுவாசிக்கிறவர்கள் பெரும்பாலானோர், தேவன் இன்றும் அற்புதங்களைச் செய்ய வல்லவராக இருக்கிறார், ஆனால் பரிசுத்த ஆவியானவர் இனி தனிநபர்களைக் கொண்டு அவர்கள் மூலமாக அற்புத அடையாளங்களை நிகழ்த்த மாட்டார் என்கிறார்கள்.

தேவனிடமிருந்து வருகிறதான ஒரு புதிய செய்தியை அங்கீகரிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒரு குறிப்பிட்ட காலங்களில் அற்புதங்கள் நிகழ்ந்ததாக வேதாகமப்பதிவு நமக்கு காண்பிக்கிறது. மோசே பார்வோனுக்கு முன்பாக தனது ஊழியத்தை அங்கீகரிக்க அற்புதங்களைச் செய்ய பெலப்படுத்தப்பட்டார் (யாத்திராகமம் 4:1-8). ஆகாபுக்கு முன் தனது ஊழியத்தை அங்கீகரிக்க எலியாவுக்கு அற்புதங்கள் செய்யும் வரங்கள் வழங்கப்பட்டன (1 இராஜாக்கள் 17:1; 18:24). அப்போஸ்தலர்கள் இஸ்ரவேலர்களுக்கு முன்பாக தாங்கள் செய்யும் ஊழியத்தை அங்கீகரிக்க அற்புதங்களை செய்யும் வரங்கள் வழங்கப்பட்டன (அப். 4:10, 16).

இயேசுவின் ஊழியமும் அற்புதங்களால் குறிக்கப்பட்டது, அவற்றை அப்போஸ்தலனாகிய யோவான் "அடையாளங்கள்" என்று அழைக்கிறார் (யோவான் 2:11). யோவானின் கருத்து என்னவென்றால், அற்புதங்கள் இயேசுவின் செய்தியின் நம்பகத்தன்மைக்கு சான்றுகள் ஆகும்.

இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, சபையானது நிறுவப்பட்டு புதிய ஏற்பாடு எழுதப்பட்டபோது, அப்போஸ்தலர்கள் அந்நியபாஷைகளில் பேசுதல் மற்றும் குணமாக்கும் வல்லமை போன்ற "அடையாளங்களை" வெளிப்படுத்தினர். "அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது" (1 கொரிந்தியர் 14:22, இந்த வசனம் வரமானது சபையின் பக்திவிருத்திக்கான நோக்கத்தில் கொடுக்கப்பட்டது அல்ல என்று தெளிவாகக் கூறுகிறது).

அப்போஸ்தலனாகிய பவுல், அந்நியபாஷைகளில் பேசும் வரம் ஓய்ந்துபோம் என்று முன்னறிவித்தார் (1 கொரிந்தியர் 13:8). இது ஏற்கனவே ஓய்ந்துவிட்டது என்பதற்கான ஆறு சான்றுகள் இங்கே:

1) அப்போஸ்தலர்கள் இருந்த காலத்தில், அவர்கள் மூலம் அந்நியபாஷைகளில் பேசுதல் வந்தன, சபை வரலாற்றில் இது ஒரு தனித்துவமானதாகும். அவர்களின் ஊழியம் முடிந்தவுடன், அவர்களுடைய செய்திகள் அங்கீகரிக்கப்படுவதற்காக வழங்கப்பட்ட அடையாள வரங்களின் அவசியம் இல்லாமற்ப்போனது.

2) அற்புத (அல்லது அடையாள) வரங்கள் 1 கொரிந்தியர் போன்ற ஆரம்பகாலத்தில் எழுதப்பட்ட புத்தகங்களில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. எபேசியருக்கு எழுதப்பட்ட நிருபம் மற்றும் ரோமாபுரியாருக்கு எழுதப்பட்ட நிருபம் போன்ற பிற்காலத்தில் எழுதப்பட்ட புத்தகங்களில் ஆவியின் வரங்கள் பற்றிய விரிவான வேதப்பகுதிகள் உள்ளன, ஆனால் அற்புத வரங்கள் குறித்துக் குறிப்பிடப்படவில்லை, ரோமாபுரியாருக்கு எழுதப்பட்ட நிருபம் தீர்க்கதரிசன வரத்தைக் குறித்துக் குறிப்பிடுகின்றபோதிலும், "தீர்க்கதரிசனம்" என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வார்த்தையின் அர்த்தம் "நடைபெறும் நிகழ்வுக்கு முன்னாக பேசுவது" என்பதாகும் மற்றும் அது எதிர்காலத்தில் சம்பவிக்கப்போகிறதை முன்னறிவிப்பதாக இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை.

3) தேவனுடைய இரட்சிப்பானது இப்போது மற்ற தேசங்களுக்கும் கிடைக்கும்படியாக இருக்கிறது என்னும் காரியம் அவிசுவாச இஸ்ரவேலர்கள் அறிந்துகொள்ளும் வண்ணமாக அந்நியப்பாஷைகளில் பேசும் வரம் ஒரு அடையாளமாக இருந்தது. 1 கொரிந்தியர் 14:21-22 மற்றும் ஏசாயா 28:11-12 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்.

4) அந்நியப்பாஷைகளில் பேசும் வரம் தீர்க்கதரிசன வரத்திற்கு (பிரசங்கம்) கீழான ஒரு வரமாகும். தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பது விசுவாசிகளை பக்திவிருத்தி அடையும்படிச் செய்கிறது, அதேசமயம் அந்நியப்பாஷைகளில் பேசுவது அவ்வாறு செய்யாது. விசுவாசிகள் அந்நியபாஷையில் பேசுவதைக்காட்டிலும் தீர்க்கதரிசனம் உரைக்கும்படி ஊக்குவிக்கப்படுகிறார்கள் (1 கொரிந்தியர் 14:1-3).

5) அந்நியப்பாஷைகளில் பேசுதல் நின்றுவிட்டதாக வரலாறு குறிப்பிடுகிறது. பிந்தைய அப்போஸ்தலிக்க பிதாக்களால் அந்நியப்பாஷைகளில் பேசுதலைக் குறித்து எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. ஜஸ்டின் மார்டியர், ஒரிகன், கிறிஸ்டோஸ்டம் மற்றும் அகஸ்டின் போன்ற பிற எழுத்தாளர்கள் அந்நியப்பாஷைகளில் பேசுதல் என்பது ஒரு பழமையானது அதாவது சபையின் ஆரம்ப நாட்களில் அப்போச்தார்கள் காலத்தில் மட்டுமே நிகழ்ந்ததாகக் கருதினர்.

6) அந்நியப்பாஷைகளில் பேசும் அற்புத வரம் நின்றுவிட்டதற்கான அடையாளங்கள். இன்றும் இந்த வரம் இருக்குமென்று சொன்னால், மிஷனரிகள் இன்று மொழிகளைக் கற்கும் பள்ளியில் சேர வேண்டிய அவசியம் இருக்காது. அப்போஸ்தலர்கள் அப். 2-ஆம் அதிகாரத்தில் பேச முடிந்ததைப் போலவே, மிஷனரிகள் எந்த நாட்டிற்கும் பயணிக்க முடியும் மற்றும் எந்த மொழியையும் சரளமாக பேச முடியும். குணமாக்கும் அற்புத வரமாக, குணப்படுத்துதல் இயேசு மற்றும் அப்போஸ்தலர்களின் ஊழியத்துடன் தொடர்புடையது என்று வேதத்தில் பார்க்கிறோம் (லூக்கா 9:1-2). அப்போஸ்தலர்களின் காலம் நெருங்க நெருங்க, அந்நியபாஷைகளில் பேசுவதைப் போல குணமாக்குவதும் குறைவாக அடிக்கடி நிகழ்வதை நாம் காண்கிறோம். ஐத்திகுவை உயிரோடு எழுப்பிய அப்போஸ்தலனாகிய பவுல் (அப். 20:9-12), எப்பாப்பிரோதீத்து (பிலிப்பியர் 2:25-27), துரோப்பீம் (2 தீமோத்தேயு 4:20), மற்றும் தீமோத்தேயு (1 தீமோத்தேயு 5:23) போன்றோர்களை குணப்படுத்தவில்லை, அதுமட்டுமல்ல அப்போஸ்தலனாகிய பவுல் தன்னையே கூட குணப்படுத்திக்கொள்ள முடியவில்லை (2 கொரிந்தியர் 12:7-9). பவுல் "குணமாக்குவதற்கு தவறியதற்கான" காரணங்கள் 1) வரமானது எல்லா கிறிஸ்தவர்களையும் குனமாக்கவேண்டும் என்கிற நோக்கத்தைக் கொண்டதல்ல, ஆனால் அப்போஸ்தல அதிகாரத்தை அங்கீகரிப்பதற்காக; மற்றும் 2) அப்போஸ்தலர்களின் அதிகாரம் போதுமான அளவு நிரூபிக்கப்பட்டபிறகு, மேலும் தொடர்ச்சியாக அற்புதங்களை செய்யும் வரங்கள் அவசியமற்றதாகி விட்டது.

மேலே கூறப்பட்ட காரணங்கள் இந்த வரங்கள் ஓய்ந்துபோனதற்கான சான்றாகும். 1 கொரிந்தியர் 13:13-14:1 இன் படி, "அன்பை நாடவேண்டும்", அதுவே எல்லாவற்றிலும் மிகப்பெரிய வரமாகும். நாம் வரங்களை விரும்புவோமானால், தேவனுடைய வார்த்தையைப் பேசுகிற அல்லது பிரசங்கிக்கிற வரத்தை நாம் விரும்ப வேண்டும், அதனால் யாவரும் பக்திவிருத்தி அடையலாம்.

English



முகப்பு பக்கம்

ஓய்ந்துபோகுதல் வேதாகமத்தின்படியானதா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries