settings icon
share icon
கேள்வி

ஜீவசுவாசம் என்றால் என்ன?

பதில்


தேவனுடைய சிருஷ்டிப்பு வேலையின் உச்சக்கட்டம் மனிதனை சிருஷ்டித்த அசாதாரண சிருஷ்டிப்பாகும். "தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்" (ஆதியாகமம் 2:7). வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த உன்னதமான சிருஷ்டிகர் மனிதனை சிருஷ்டித்தபோது இரண்டு காரியங்களைச் செய்தார். முதலாவதாக, அவர் பூமியின் மண்ணிலிருந்து அவனை உருவாக்கினார், இரண்டாவதாக, அவர் ஆதாமின் நாசியில் தனது சொந்த சுவாசத்தை ஊதினார். இது மனிதனை தேவனுடைய மற்ற எல்லா உயிரினங்களிலிருந்தும் வேறுபடுத்தியது.

இந்த ஒரு வேதப்பகுதியில் மனிதனின் சிருஷ்டிப்புக் குறித்த மூன்று குறிப்பிடத்தக்க உண்மைகள் உள்ளன. முதலாவது, தேவனே தேவன் மட்டுமே மனிதனை சிருஷ்டித்தார். மனிதன் மற்ற உயிரினங்களிலிருந்து உருவாகவில்லை. ஆள்தன்மையில்லாத சக்திகள் மனிதனை உருவாக்கவில்லை. அனைத்து செல்கள், டி.என்.ஏ, அணுக்கள், மூலக்கூறுகள், ஹைட்ரஜன், புரோட்டான்கள், நியூட்ரான்கள் அல்லது எலக்ட்ரான்கள் மனிதனை உருவாக்கவில்லை. இவை யாவும் சரீரப்பிரகாரமான மனிதனின் உடலை உருவாக்கும் பொருட்கள் மட்டுமே. கர்த்தராகிய தேவன் மனிதனை சிருஷ்டித்தார். கர்த்தராகிய தேவன் பொருட்களை சிருஷ்டித்தார், பின்னர் அந்த பொருட்களைப் பயன்படுத்தி மனிதனை சிருஷ்டித்தார்.

உருவாக்கப்பட்ட என்கிற வார்த்தை எபிரேய மொழுயில் யட்சார் என்பதன் மொழிபெயர்ப்பாகும், இதன் பொருள் “அச்சு, வடிவம் அல்லது உருவம்” என்பதாகும். புத்திசாலித்தனம் மற்றும் தனது படைப்பை உருவாக்கும் ஆற்றலைக் கொண்ட ஒரு குயவனின் உருவத்தை இது கற்பனையாகக் கொண்டிருக்கிறது. மனிதனின் உருவத்தை மனதிற்குள் வைத்திருந்த, அந்த உருவத்தை உயிர்ப்பிக்கும் ஆற்றலையும் புத்திசாலித்தனத்தையும் கொண்ட பிரதான குயவன் தேவன் ஆவார். தேவன் தாம் விரும்பியதைச் செய்வதற்கு சர்வ ஞானம் (சகலவிதமான முழுமையான அறிவு) மற்றும் சர்வ வல்லமை (எல்லாவற்றையும் செய்ய வல்ல திறன்) இரண்டையும் கொண்டிருந்தார்.

இரண்டாவதாக, தேவன் தமது சொந்த ஜீவசுவாசத்தை மனிதனுக்குள் ஊதினார். மனிதன் வெறுமனே "மண்" அல்லது உடல் பொருளை என்பதைவிட அதிகம். மனிதனுக்கு ஆவி உண்டு. நாம் இதை இவ்வாறு சித்தரிக்கலாம்: ஆதாமின் உடல் பூமியின் மண்ணிலிருந்து தேவனால் உருவாக்கப்பட்டது — உயிரற்ற மனித உடல் தரையில் கிடக்கிறது. பிறகு தேவன் அதனிடமாய் சாய்ந்து, மனிதனின் நாசிக்குள் தனது சொந்த "சுவாசத்தை" ஊதினார்; தேவன் ஜீவனின் ஆதாரம், அவர் நேரடியாக மனிதனுக்குள் ஜீவனை வைத்தார். யோவான் 20:22ல் இயேசு தம்முடைய சீடர்களுக்குப் புதிய ஜீவனைக் கொடுக்கும்போது, இந்த ஜீவன் கொடுக்கும் சுவாசம் மீண்டும் காணப்படுகிறது.

மூன்றாவதாக, ஆதியாகமம் 2:7, மனுஷன் ஜீவாத்துமாவானான் (KJV) என்று கூறுகிறது. எபிரேய மொழியில் உள்ள ஆத்துமா என்பது நெபேஷ், அதாவது " உயிரூட்டப்பட்ட, சுவாசிக்கிற, தன் நினைவுள்ள மற்றும் ஜீவிக்கிற உயிரினம்" என்கிற அர்த்தமாகும். தேவன் ஜீவனை ஊதும் வரை மனிதன் ஜீவனுள்ள ஆத்துமாவாக மாறவில்லை. உடல், உயிருள்ள, பகுத்தறிவு மற்றும் ஆவிக்குரிய உயிரினமாக, மனிதன் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களிலும் தனித்துவமானவன் ஆனான்.

எனவே, தேவனுடைய ஜீவசுவாசம் என்றால் என்ன? இது தேவனுடைய ஜீவன் மற்றும் வல்லமை, மனிதனை உயிர்ப்பிக்க அவனுக்கு வழங்கப்பட்டது. ஆவிக்கான எபிரேய வார்த்தை ரூவா, அதாவது "காற்று, சுவாசம், ஆவி." தேவனுடைய ஜீவன் தொடர்ந்து வாழ்கிறது; மனிதனின் முக்கியமற்ற பகுதி நித்தியமாக வாழ வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் எங்கு வாழ்வோம் என்பதுதான் ஒரே கேள்வி?

English



முகப்பு பக்கம்

ஜீவசுவாசம் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries