மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாக இருப்பது என்பது எதைக் குறீக்கிறது?


கேள்வி: மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாக இருப்பது என்பது எதைக் குறீக்கிறது?

பதில்:
மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாக இருப்பது என்பது எதைக் குறிக்கிறது? இந்த கேள்விக்கு பதிலளிக்கும் வேதாகமத்தின் சிறந்த பகுதி யோவான் 3:1-21 ஆகும். ஆலோசனை சங்கத்தில் ஒரு உறுப்பினராகவும்(யூதர்களை ஆளுகை செய்பவர்களில் ஒருவன்), பிரபலமான பரிசேயராகவும் இருந்த நிக்கோதேமுவிடம் இயேசு கிறிஸ்து பேசிக் கொண்டிருந்தார். நிக்கோதேமு இராத்திரி வேளையிலே இயேசுவிடம் வந்தான். இயேசுவிடத்தில் கேட்கும்படி நிக்கோதேமுவிடம் கேள்விகள் இருந்தன.

இயேசு கிறிஸ்து நிக்கோதேமுவிடம் பேசும்பொழுது, “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், தேவனுடைய இராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்கு சொல்கிறேன்” என்று சொன்னார். “அதற்கு நிக்கோதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படி பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாம் தரம் பிரவேசித்து, பிறக்கக்கூடுமோ? என்றான். இயேசு பிரதியுத்தரமாக, ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால், தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டானென்று மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன். மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டுமென்று நான் உனக்கு சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்” என்றார். (யோவான் 3:3-7)

‘மறுபடியும் பிறத்தல்’ என்கிற பதம் எழுத்தின்படி ‘மேலிருந்து பிறத்தல்" என்பதைக் குறிக்கிறது. நிக்கோதேமுவுக்கு ஒரு உண்மையான தேவையிருந்தது. ஆவிக்குரிய மாற்றம் எனப்படும் இருதய மாற்றம் அவனுக்கு தேவையாயிருந்தது. புதுப்பிறப்பு, மறுபடியும் பிறந்தவர்களாக இருத்தல் என்பது விசுவாசிக்கிற ஒரு நபரிடம் நித்திய வாழ்வு உட்செலுத்தபடும் தேவனுடைய ஒரு செயல் ஆகும் (2கொரிந்தியர் 5:17, தீத்து. 3:5, 2பேதுரு 1:3, 1யோவான் 2:29; 3:9; 4:7; 5:1-4,18). இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உள்ள விசுவாசத்தின் மூலமாக “தேவனுடைய பிள்ளைகள் ஆகுதல்” என்கிற கருத்தையும் "மறுபடிப் பிறத்தல்" என்பது குறிப்பதாக யோவான் 1:12,13 கூறுகிறது.

"ஒருவன் ஏன் மறுபடியும் பிறப்பது அவசியமானதாக இருக்கிறது?" என்ற கேள்வி எல்லாருக்குள்ளும் இயற்கையாகவே வரும். “அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்த்தார்” என்று எபேசியர் 2:1ல் அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். ரோமருக்கு எழுதும்போது, ரோமர் 3:23ல் அப்போஸ்தலன் எழுதியதாவது, “எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களானார்கள்.” ஆகவே தங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்படிக்கும், தேவனோடு ஒரு உறவைப் கொள்ளும்படிக்கும், மறுபடியும் பிறத்தல் ஒரு நபருக்கு அவசியமாகிறது.

இது எப்படி நடக்கும்? “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல. இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல” என்று எபேசியர் 2:8,9 ஆகிய வசனங்கள் குறிப்பிடுகிறது.. ஒருவன் "இரட்சிக்கப்படும்பொழுது", அவன் அல்லது அவள் மறுபடியும் பிறக்கின்றனர், ஆவியில் புதுப்பிக்கப்படுகின்றனர். மேலும் புது பிறப்பின் உரிமையினால், இப்போது தேவனுடைய ஒரு பிள்ளையாக இருக்கின்றனர். சிலுவையில் தாம் மரித்தபோது பாவத்திற்கான விலைக்கிரயத்தை செலுத்தி தீர்த்த ஒருவரகிய, இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைப்பது, என்பது ஆவிக்குரியப் பிரகாரமாக "மறுபடியும் பிறத்தல்" ஐக் குறிக்கிறது. “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால், புது சிருஷ்டியாயிருக்கிறான்” (2கொரிந்தியர் 5:17).

இதுவரை இயேசு கிறிஸ்துவை இரட்சகராக விசுவாசியாமல் இருந்திருந்தால், ஆவியானவர் உங்கள் இருதயங்களில், இப்பொழுது ஏவினால் அதற்கு நீங்கள் ஒப்புக் கொடுப்பீர்களா? நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது. மனந்திரும்புதலுக்கான ஜெபத்தைச் செய்து, கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாக இன்று மாறுவீர்ககளா? "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும், தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். அவர்கள் இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது, புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்" (யோவான் 1:12, 13).

இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டு, மறுபடியும் பிறக்க விரும்பினால், உங்களுக்காக ஒரு மாதிரி ஜெபம் இங்கு தரப்பட்டிருக்கிறது. இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கை மாத்திரமே, பாவத்திலிருந்து உங்களை இரட்சிக்க முடியும். இந்த ஜெபமானது அவரில் உள்ள உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி, உங்கள் இரட்சிப்புக்காக அவர் அருளினவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்வதற்கான ஒரு வழி மாத்திரமே. "தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். நான் மன்னிக்கப்பட முடியும். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!"

நீங்கள் இங்கு உள்ளவற்றை வாசித்ததினால் கிறிஸ்துவுக்காக வாழும்படி ஒரு தீர்மானம் எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாக இருப்பது என்பது எதைக் குறீக்கிறது?