settings icon
share icon
கேள்வி

கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் பொருள் என்ன?

பதில்


"கிறிஸ்துவின் இரத்தம்" என்ற சொற்றொடர் புதிய ஏற்பாட்டில் பல முறை பயன்படுத்தப்படுகிறது மற்றும் இது நம் சார்பாக மரித்த இயேசுவின் பலிமரணம் மற்றும் முழு பாவப் பிராயச்சித்த கிரியையின் வெளிப்பாடாகும். இரட்சகரின் இரத்தத்தைப் பற்றிய குறிப்புகளில், அவர் மெய்யாகவே சிலுவையில் இரத்தம் சிந்தினார் என்பது மறுக்க இயலாத உண்மையாகும், ஆனால் இன்னும் குறிப்பிடத்தக்க வகையில் அவர் பாவிகளுக்காக இரத்தஞ்சிந்தி மரித்தார் என்பது மிக முக்கியமானதாகும். எல்லா யுகங்களிலும் எண்ணற்ற மக்கள் செய்த எண்ணற்ற பாவங்களுக்கு பரிகாரம் செய்யும் வல்லமை கிறிஸ்துவின் இரத்தத்திற்கு உள்ளது, மேலும் அந்த இரத்தத்தின் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள்.

பாவபரிகாரத்தின் வழிமுறையாக கிறிஸ்துவின் இரத்தத்தின் யதார்த்தம் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் இருந்து தோன்றியது ஆகும். வருடத்திற்கு ஒருமுறை, ஜனங்களின் பாவங்களுக்காக தேவாலயத்தின் பலிபீடத்தின் மீது மிருகங்களின் இரத்தத்தை காணிக்கையாக்க வேண்டும். "நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது" (எபிரேயர் 9:22). ஆனால் இது ஒரு இரத்தப் பலி அதன் செயல்திறனில் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது, அதனால்தான் இது மீண்டும் மீண்டும் ஒவ்வொரு ஆண்டும் ஆசாரியனால் செலுத்தப்பட்டு வந்தது. இது இயேசுவால் சிலுவையில் செலுத்தப்பட்ட பலி மூலமாக அவர் "தம்மைத்தாமே பலியிட்டதினாலே ஒரேதரம் செய்து முடித்தார்" தியாகத்தின் முன்னறிவிப்பாகும் (எபிரெயர் 7:27). அந்த பலி செலுத்தப்பட்டதுடன், வெள்ளாட்டுக்கடாக்கள், இளங்காளைகள் இவைகளுடைய இரத்தம் தேவை இல்லை.

கிறிஸ்துவின் இரத்தம் புதிய உடன்படிக்கையின் அஸ்திபாரமாகும். சிலுவைக்குச் செல்வதற்கு முந்தைய இரவில், இயேசு தமது சீஷர்களுக்கு திராட்சைரசம் நிறைந்த பாத்திரத்தை எடுத்து கொடுத்து, "இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்" (லூக் 22:20). பாத்திரத்தில் உள்ள திராட்சைரசம் கிறிஸ்துவின் இரத்தத்தை குறிக்கிறது, அது அவரை விசுவாசிக்கும் அனைவருக்காகவும் சிந்தப்படுகிற இரத்தமாய் இருக்கிறது. அவர் சிலுவையில் தனது இரத்தத்தை சிந்தியபோது, மிருகங்களின் தொடர்ச்சியான பலிகளுக்கான பழைய உடன்படிக்கையின் தேவையை இயேசு நீக்கிவிட்டார். அவைகளின் இரத்தம் தற்காலிக அடிப்படையில் ஒரு பாவ நிவாரணத்தைக் கொண்டுவந்ததே அல்லாமல், மக்களின் பாவங்களை முற்றிலுமாய் கழுவி நீக்க போதுமானதாக இல்லை, ஏனென்றால் பரிசுத்தமான மற்றும் எல்லையற்ற தேவனுக்கு எதிராக செய்த பாவத்திற்கு பரிசுத்தமான மற்றும் எல்லையற்ற பலி தேவைப்படுகிறது. பாவங்களை “காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் நிவிர்த்திசெய்யமுடியாது" (எபிரெயர் 10:3). காளைகள் மற்றும் வெள்ளாட்டுக்கடாக்களின் இரத்தம் பாவத்தின் நினைவூட்டலாக "இருக்கும்போது," குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தம் (1 பேதுரு 1:19), நாம் தேவனுக்கு கடன்பட்டிருக்கும் பாபத்தின் சகல கடனையும் முழுமையாக செலுத்தித் தீர்த்தது, அதுமட்டுமின்றி பாவத்திற்காக நமக்கு மேலும் ஒரு பலி இனித் தேவையில்லை. இயேசு சிலுவையில் தொங்கி மரித்துக்கொண்டிருந்தபோது, "எல்லாம் முடிந்தது" என்று சொன்னார், மீட்பின் முழுப் பணியும் என்றென்றுமாய் நிறைவடைந்தது, இயேசு "தம்முடைய சொந்த இரத்தத்தினால் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்” (எபிரெயர் 9:12).

கிறிஸ்துவின் இரத்தம் விசுவாசிகளை பாவத்திலிருந்தும் நித்திய தண்டனையிலிருந்தும் மீட்பது மட்டுமல்லாமல், அவருடைய "இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு நம்முடைய மனச்சாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிக்கவும்" செய்தது (எபிரெயர் 9:14). இதன் பொருள் என்னவென்றால், நாம் இப்போது இரட்சிப்பைப் பெறுவதற்கு "பயனற்றவைகளாக" இருக்கின்ற புலிகளை செலுத்துவதில் இருந்து விடுபடுவது மட்டுமல்லாமல், தேவனைப் பிரியப்படுத்த தேவையற்ற மாம்சத்தின் பயனற்ற மற்றும் பலனற்ற செயல்களை சார்ந்திருப்பதில் இருந்தும் விடுபெற்று இருக்கிறோம். கிறிஸ்துவின் இரத்தம் நம்மை மீட்டுள்ளதால், நாம் இப்போது கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டிகளாக இருக்கிறோம் (2 கொரிந்தியர் 5:17), அவருடைய இரத்தத்தால் நாம் ஜீவனுள்ள தேவனுக்கு சேவை செய்யவும், அவரை மகிமைப்படுத்தவும், அவரில் என்றென்றும் மகிழ்ந்திருக்கவும் பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறோம்.

English



முகப்பு பக்கம்

கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் பொருள் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries