settings icon
share icon
கேள்வி

கருப்பின விடுதலை இறையியல் என்றால் என்ன?

பதில்


கருப்பின விடுதலை இறையியல் என்பது தென் அமெரிக்க விடுதலை இறையியலின் ஒரு பகுதியாகும், இது பெரும்பாலும் மனிதநேயமுள்ளதாய் இருக்கிறது, ஏழைகளின் அவலநிலைக்கு கிறிஸ்தவ இறையியலைப் பயன்படுத்த முயற்சிக்கிறது. கறுப்பின விடுதலை இறையியல் பொதுவாக ஆப்பிரிக்கர்கள் மற்றும் குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் சமூக, அரசியல், பொருளாதாரம் அல்லது மதம் எதுவாக இருந்தாலும், உண்மையான அல்லது உணரப்பட்ட அனைத்து வகையான அடிமைத்தனம் மற்றும் அநீதிகளிலிருந்து விடுவிக்கப்படுவதை மையமாகக் கொண்டுள்ளது.

கறுப்பின விடுதலை இறையியலின் குறிக்கோள் "கிறிஸ்துவத்தை கறுப்பர்களுக்கு மெய்யானதாக மாற்றுவது" ஆகும். கறுப்பின விடுதலை இறையியலில் முதன்மையான பிழை அதன் கவனம் ஆகும். கறுப்பின விடுதலை இறையியல், மரணத்திற்குப் பிறகுள்ள வாழ்க்கையைக் காட்டிலும், இங்கே இப்போதுள்ள சமூக அநீதியிலிருந்து விடுதலை பெறுவதில் கிறிஸ்தவத்தை மையப்படுத்த முயற்சிக்கிறது. இயேசு இதற்கு நேர்மாறாகக் கற்பித்தார்: "என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல" (யோவான் 18:36). சமீபத்திய வரலாற்றில் கறுப்பர்கள்/ஆப்பிரிக்கர்கள் மற்றும் குறிப்பாக ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் மோசமாகவும், அநியாயமாகவும், தீமையாகவும் நடத்தப்பட்டிருக்கிறார்களா? ஆம் முற்றிலும்! நற்செய்தியின் விளைவுகளில் ஒன்று இனவெறி, பாகுபாடு, தப்பெண்ணம் மற்றும் சமத்துவமின்மையின் முடிவாக இருக்க வேண்டுமா? மீண்டும், ஆம், முற்றிலும் (கலாத்தியர் 3:28)! சமூக அநீதியிலிருந்து விடுபடுவது நற்செய்தியின் அடிப்படைக் கொள்கையா? இல்லை.

சுவிசேஷத்தின் செய்தி இதுதான்: நாம் அனைவரும் பாவத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம் (ரோமர் 3:23). நாம் அனைவரும் தேவனிடமிருந்து நித்தியமாக பிரிந்திருக்கும் பிரிவினைக்கு தகுதியானவர்கள் (ரோமர் 6:23). இயேசு சிலுவையில் மரித்தார், நாம் அடையவேண்டிய நமக்குத் தகுதியான தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டார் (2 கொரிந்தியர் 5:21; 1 யோவான் 2:2), நமக்கு இரட்சிப்பை வழங்கினார். இயேசு உயிர்த்தெழுந்தார், அவருடைய மரணம் உண்மையில் பாவ தண்டனைக்கு போதுமான விலைக்கிரயம் என்பதை நிரூபித்தார் (1 கொரிந்தியர் 15:1-4). இரட்சகராக இயேசுவை நம்பினால், நம்முடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு, மரணத்திற்குப் பிறகு நாம் பரலோகத்தில் பிரவேசிப்போம் (யோவான் 3:16). அதுவே நற்செய்தி. அதுதான் நம் கவனமாக இருக்க வேண்டும். அதுவே மனிதகுலத்தை உண்மையாக வாதிப்பவற்றுக்கு மருந்தாகும்.

ஒரு நபர் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது, அவன்/அவள் ஒரு புதிய சிருஷ்டியாகிறார்கள் (2 கொரிந்தியர் 5:17), மற்றும் உள்ளில் வசிக்கும் பரிசுத்த ஆவியானவர் அவரை/அவளை கிறிஸ்துவின் சாயலுக்கு மாற்றும் செயல்முறையைத் தொடங்குகிறார் (ரோமர் 12:1-2). இந்த ஆவிக்குரிய மாற்றத்தின் மூலமே இனவாதத்தை உண்மையாக வெல்ல முடியும். கருப்பின விடுதலை இறையியல் தோல்வியடைகிறது, ஏனெனில் அது வியாதியை உண்மையாகக் கவனிக்காமல் அறிகுறிகளைத் தாக்குகிறது. பாவம்/வீழ்ச்சி என்பது நோய்; இனவெறி என்பது பல அறிகுறிகளில் ஒன்றாகும். சுவிசேஷத்தின் செய்தி நமது பாவங்களுக்காக இயேசுவின் பாவப்பரிகார பலி மற்றும் விசுவாசத்தின் மூலம் கிடைக்கும் இரட்சிப்பு. இனவெறியின் முடிவு, ஜனங்கள் இயேசுவை இரட்சகராக உண்மையாகப் பெறுவதன் விளைவாக இருக்கும், ஆனால் இனவெறி என்பது நற்செய்தியில் குறிப்பாகக் குறிப்பிடப்படவில்லை.

இனப் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், கறுப்பின விடுதலை இறையியலின் எதிர்மறையான விளைவு என்னவென்றால், அது கருப்பு மற்றும் வெள்ளை கிறிஸ்தவ சமூகங்களைப் பிரிக்க முனைகிறது, மேலும் இது முற்றிலும் வேதாகமத்துக்கு எதிரானது. கிறிஸ்து தம்மை நம்புகிற அனைவரையும் ஒரு உலகளாவிய சபையில் ஒன்றிணைக்க பூமிக்கு வந்தார், அவர் தலையாக இருக்கிறார் (எபேசியர் 1:22-23). கிறிஸ்துவின் சரீரத்தின் உறுப்பினர்கள் பின்னணி, இனம் அல்லது தேசியத்தைப் பொருட்படுத்தாமல் மற்ற எல்லா கிறிஸ்தவர்களுடனும் பொதுவான பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள். “சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கவேண்டும்” (1 கொரிந்தியர் 12:25). நாம் ஒருமனதாக இருக்க வேண்டும், கிறிஸ்துவின் மனதைக் கொண்டிருக்க வேண்டும், ஒரே குறிக்கோளுடன் இருக்க வேண்டும், கிறிஸ்துவின் கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் தேவனை மகிமைப்படுத்த வேண்டும், "உலகம் முழுவதும் போங்கள்," மற்றவர்களுக்கு அவரைப் பற்றிச் சொல்லுங்கள், நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும், மற்றவர்களுக்கு போதிக்க வேண்டும். அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள வேண்டும் (மத்தேயு 28:19-20). தேவனில் அன்புகூற வேண்டும், நம்மைப் போலவே பிறரையும் நேசிக்கவேண்டும் என்கிற இரண்டு பெரிய கற்பனைகள் என்பதை இயேசு நமக்கு நினைவூட்டுகிறார் (மத்தேயு 22:36-40).

English



முகப்பு பக்கம்

கருப்பின விடுதலை இறையியல் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries