settings icon
share icon
கேள்வி

ஒளிவிளக்கத்தின் வேதாகமப் போதனை என்ன?

பதில்


எளிமையாகச் சொன்னால், ஆவிக்குரிய அர்த்தத்தில் ஒளிவிளக்கம் என்பது சில பகுதிகளில் புரிந்துகொள்ளுதலுக்காக "ஒளியைத் தருதல்" ஆகும். தெய்வீக ஞானம் புதிய அறிவு அல்லது வருங்காரியங்களைக் கையாளும் போது, நாம் அதை "தீர்க்கதரிசனம்" என்று அழைக்கிறோம். அறிவொளியானது ஏற்கெனவே கொடுக்கப்பட்ட அறிவைப் புரிந்துகொண்டு பயன்படுத்துவதைக் கையாளும் போது, நாம் அதை "ஒளிவிளக்கம்" என்று அழைக்கிறோம். இங்கே கேள்வி எழுகிறது, "தேவன் அவருடைய வார்த்தையைப் படிப்பவர்களின் மனதை எப்படி ஒளியூட்டுகிறார்?"

அறிவொளியின் மிக அடிப்படையான நிலையானது பாவத்தின் அறிவு ஆகும்; அந்த அறிவு இல்லாமல், மற்ற அனைத்தும் அர்த்தமற்றவை. சங்கீதம் 18:28 கூறுகிறது, “தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.” சங்கீதம் 119, வேதாகமத்தின் மிக நீளமான அதிகாரம், தேவனுடைய வார்த்தையைப் பற்றிய சங்கீதம். வசனம் 130 கூறுகிறது, "உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்." இந்த வசனம் தேவனுடைய ஒளிவிளக்கத்தின் அடிப்படை முறையை நிறுவுகிறது. தேவனுடைய வார்த்தை ஒரு நபரின் இதயத்தில் பிரவேசிக்கும் போது, அது ஒளியையும் புரிதலையும் தருகிறது. இந்த காரணத்திற்காக, தேவனுடைய வார்த்தையை வாசிக்கும்படி நாம் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறோம். சங்கீதம் 119:11 கூறுகிறது, "நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்." வசனங்கள் 98 மற்றும் 99 கூறுகிறது, "நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு, என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது. உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்கள் எல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்.”

தேவனுடைய வார்த்தையை தொடர்ந்து படிப்பது வாழ்க்கையின் பிரச்சினைகளில் நடத்துதலையும் புரிதலையும் கொடுக்கும். இது தேவனுடைய ஒளிவிளக்கத்தின் முதல் முறை மற்றும் நம் அனைவருக்கும் தொடக்கப்புள்ளி ஆகும். சங்கீதம் 119 இல் தேவனுடைய ஒளிவிளக்கத்தின் மற்றொரு வகையையும் நாம் காண்கிறோம். வசனம் 18 கூறுகிறது, "உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்". இந்த "அதிசயங்கள்" புதிய வெளிப்பாடுகள் அல்ல, ஆனால் நீண்ட காலத்திற்கு முன்பே எழுதப்பட்டவை, இப்போது வாசகர்களால் புரிந்து கொள்ளப்பட்டவை ஆகும். இதேபோல், வசனம் 73 கூறுகிறது, “உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்." தேவனுடைய நியாயப்பிரமாணங்களைப் பயன்படுத்துவதற்கு வேண்டியுள்ள தனிப்பட்ட புரிதலுக்கான வேண்டுகோள். இந்த சங்கீதத்தில் பதினைந்து முறை, தேவன் தமது பிரமாணங்களை போதிக்க அல்லது புரிந்துகொள்ளும்படி செய்யக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

யோவான் 14:26, சில சமயங்களில் ஒளிவிளக்கம் பற்றிய சர்ச்சையை தூண்டும் ஒரு பத்தியாகும், "என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்." இயேசு தமது சீடர்களோடு மேலறையில் பேசிக்கொண்டிருந்தார், அவர் மரிப்பதற்கு முன்பு அவர்களுக்கு கடைசியாக அறிவுரைகளை வழங்கினார். இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை உலகம் முழுவதும் பரப்புவதற்கு இந்த சிறப்பு மனித குழு பொறுப்பாக இருந்தது. அவர்கள் அவருடன் மூன்றரை வருடங்கள், அவருடைய அற்புதங்களைப் பார்த்து, அவருடைய போதனைகளைக் கேட்டார்கள். உலகின் மற்ற பகுதிகளுக்கு அந்த போதனைகளை தெரிவிப்பதில், துல்லியமாக நினைவில் கொள்வதற்கு அவர்களுக்கு தேவனுடைய சிறப்பு உதவி தேவைப்படும். பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கற்பிப்பார் என்றும் அவர் சொன்னதை அவர்களுக்கு நினைவூட்டுவார் என்றும், அதனால் அவர்கள் அதை மற்றவர்களுடன் தொடர்புகொள்ள முடியும் என்றும் இயேசு கூறினார். இந்த வசனம் சுவிசேஷங்களை எழுதுவதில் அப்போஸ்தலர்களுக்கு தெய்வீக உதவியாக இருக்கும் என்று போதிக்கும் அதே வேளையில், ஆவியானவர் அதையே எல்லா விசுவாசிகளிடமும் செய்வார் என்று அது கற்பிக்கவில்லை.

அப்படியானால், பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளில் செய்யும் ஒளிவிளக்கம் வேலை என்ன? எபேசியர் 1:17-18 ஆவியானவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய ஞானத்தையும் வெளிப்பாட்டையும் தருகிறார் மற்றும் புரிந்துகொள்ளும்படி கண்களைத் திறக்கிறார், அதனால் நம் வாழ்வில் தேவனுடைய நோக்கங்களை அறிய முடியும். 1 கொரிந்தியர் 2:10-13 இல், தேவன் நமக்கு ஆவிக்குரிய விஷயங்களை போதிக்கும் அவருடைய ஆவியால் அவருடைய திட்டங்களை வெளிப்படுத்துகிறார். இங்குள்ள பின்னணி வெளிப்படுத்தப்படுகிற தேவனுடைய வார்த்தையை சுட்டிக்காட்டுகிறது. தேவனுடைய ஆவியானவர் எப்போதும் நம் அறிவுறுத்தலுக்காக தேவனுடைய வார்த்தையை சுட்டிக்காட்டுகிறார். யோவான் 16:12-15 இல் இயேசு தனது சீடர்களிடம் கூறியது போல், பிதாவும் குமாரனும் ஏற்கனவே கூறியதை ஆவியானவர் திரும்பச் சொல்லி நினைவூட்டுகிறார். இந்த மறுபடியும் கூறல் தேவன் நமக்கு ஏற்கனவே சொன்னதை நினைவில் வைத்து முழுமையாக கேட்க உதவுகிறது. சில நேரங்களில் நாம் காரியங்களை "கேட்பதற்கு" முன்பு பல முறை கேட்க வேண்டும். அங்குதான் ஆவியானவர் வருகிறார்.

ஒளிவிளக்கம் பற்றிய விவாதத்தில் சில நேரங்களில் கவனிக்கப்படாத ஒரு விஷயம் என்னவென்றால் அதன் நோக்கம். சில வாதங்களைக் கேட்க, ஒளிவிளக்கத்தின் முழு நோக்கமும் தேவனுடைய வார்த்தையின் துல்லியமான மற்றும் கல்விசார் புரிதலே என்று தோன்றுகிறது. அவர் நமக்குத் தந்ததைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள வேண்டும் எனத் தேவன் விரும்புகிறார் என்பதில் சந்தேகமில்லை. வார்த்தைகளுக்கு அர்த்தம் உள்ளது, அந்த வார்த்தைகளில் உள்ள விவரங்களுக்கு நாம் கவனம் செலுத்த வேண்டும். இருப்பினும், உண்மைகளைப் பற்றிய கல்விப் புரிதல் அந்த உண்மைகளைப் பயன்படுத்தாமல் யாருக்கும் எந்த நன்மையும் செய்யாது.

சங்கீதம் 119 க்கு திரும்ப வரும்போது, ஒளிவிளக்கம் பற்றிய வசனங்களுடன் தொடர்புடைய நோக்கத்தின் கூற்றுக்களைக் காணலாம். "உமது அதிசயங்களைத் தியானிப்பேன்" (வசனம் 27), "உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்" (வசனம் 34), "உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும்" (வசனம் 125), “அப்பொழுது நான் பிழைத்திருப்பேன்” (வசனம் 144). ஒளிவிளக்கம் எப்போதும் செயலைச் சுட்டிக்காட்டுகிறது. அவருடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள தேவன் நமக்கு ஏன் உதவுகிறார்? அதனால் அதன் வெளிச்சத்தில் நம்மால் வாழ முடிகிறது. 1 யோவான் 1:6 நமக்கு சவால் விடுக்கிறது, "நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்கள் என்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம்." நாம் இதை இவ்வாறு விளக்கலாம்: "நாம் அறிவொளி பெற்றோம் என்று சொன்னால், ஆனால் இருட்டில் நடந்தால், தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்வதில் பொய் சொல்கிறோம்." தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள நமக்கு அறிவூட்டும் தேவனுடைய ஆவியானவர், அந்த அறிவை எடுத்துக்கொண்டு நம்மை வாழ வழிநடத்துகிறார். ரோமர் 8:14 கூறுகிறது, "எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்." நம் வாழ்வில் பரிசுத்த ஆவியின் ஒளியூட்டும் வேலையானது நாம் உண்மையில் தேவனுடைய பிள்ளைகள் என்பதை உறுதிப்படுத்துகிறது.

Englishமுகப்பு பக்கம்

ஒளிவிளக்கத்தின் வேதாகமப் போதனை என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries