settings icon
share icon
கேள்வி

தேவன் ஏன் நல்ல மனிதர்களுக்கு தீமையான காரியங்களை சம்பவிக்கும்படி அனுமதிக்கிறார்?

பதில்


நாம் வேதனையும் துன்பமும் உள்ள ஒரு உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வாழ்வின் கடுமையான உண்மைகளிலிருந்து பாதிக்கப்படாதவர் எவரும் இல்லை. கேள்வி என்னவென்றால், “நல்ல மனிதர்களுக்கு தீமையான காரியங்கள் ஏன் சம்பவிக்கிறது?” எல்லா இறையியலிலும் இது ஒரு மிகவும் கடினமான கேள்வியாகும். தேவன் இறையாண்மையுள்ளவர், ஆகையால் சம்பவிக்கிற எதுவாக இருந்தாலும் அவரால் நேரடியாக செயல்படுத்தப்டாமல் போனாலும், அது அவரால் நிச்சயமாக அனுமதிக்கப்பட்டாவது இருக்கவேண்டும். மறுவசம், நித்தியமில்லாத, முடிவற்ற மற்றும் சர்வவல்லமையற்ற மனிதர்கள், தேவனுடைய நோக்கங்களையும், வழிகளையும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

நல்ல மனிதர்களுக்கு தீமையான காரியங்களை தேவன் ஏன் அனுமதிக்கிறார் என்கிற பிரச்சினையை யோபுவின் புத்தகம் விவரிக்கிறது. யோபு நீதிமானாயிருந்தான் (யோபு 1:1), ஆனாலும் விசுவாசத்திற்கு அப்பாற்பட்ட வழிகளில் அவன் மிகவும் பாடுகளை கடந்து சென்றான்.

யோபுவின் உயிரை மாத்திரம் எடுக்காமல் பிற எல்லாவற்றையும் செய்து கொள்ளும்படி சாத்தானுக்கு தேவன் அனுமதி கொடுத்தார். இதற்கு யோபுவின் பதில் என்ன? "அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்" (யோபு 13:15). “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” என்றான் (யோபு 1:21). தேவன் இந்த காரியங்களை ஏன் அனுமதித்திருக்கிறார் என்பதை யோபு புரிந்து கொள்ளவில்லை, ஆனால் தேவன் நல்லவர் என்பதை மட்டும் அவர் அறிந்திருந்தார், எனவேதான் தேவன்மேல் தொடர்ந்து நம்பிக்கை வைத்துவந்தார். இறுதியில், அதுதான் நம்முடைய அனுகுமுறையாகவும் இருக்க வேண்டும்.

நல்ல மனிதர்களுக்கு தீமையான காரியங்கள் ஏன் நடக்கின்றன? ஒப்புக்கொள்வதற்கு கடினமாக இருந்தாலும் இதற்குள்ள வேதத்தின் பதில் என்னவென்றால் 'நல்லவர்' ஒருவருமில்லை என்பதுதான். நாம் எல்லோரும் பாவத்தால் களங்கமடைந்திருக்கிறோம் என்று மிகத் தெளிவாக வேதம் காட்டுகிறது. (பிரசங்கி 7:20; ரோமர் 6:23; 1 யோவான் 1:8).

இயேசு சொன்னார், “தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே” (லூக்கா 18:19). நாம் அனைவரும் ஏதோ ஒரு வவகையில் பாவத்தில் விளைவை உணரத்தான் செய்கிறோம். சிலவேளைகளில் நம்முடைய தனிப்பட்ட பாவம், மற்ற வேளைகளில் மற்றவர்களுடைய பாவம். வீழ்ந்துபோன ஒரு உலகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதனுடைய விளைவுகளும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அதிலே ஒரு விளைவுதான் அநீதியும் உணர்வில்லாத வேதனையும்.

நல்லவர்களுக்கு தீமையான காரியங்களை தேவன் ஏன் அனுமதிக்கிறார் என்று அதிசயத்து பார்க்கிற வேளையில், சம்பவிக்கிற தீமையான காரியங்களைப் பற்றிய இந்த நான்கு விஷயங்களைக் கருத்தில் கொள்வது நல்லது:

1) நல்லவர்களுக்கு தீமையான காரியங்கள் இவ்வுலகில் சம்பவிக்கலாம், ஆனால் இந்த உலகத்தோடு எல்லாம் முடிந்து போகிறதில்லை. கிறிஸ்துவர்களுக்கு ஒரு நித்தியமான முன்னோக்கு உள்ளது: “ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது. மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்” (2 கொரிந்தியர் 4:16-18). நமக்கு ஒருநாள் வெகுமதி கிடைக்கும், அது மகிமை உள்ளதாக இருக்கும்.

2) நல்லவர்களுக்கு தீமையான காரியங்கள் சம்பவிக்கிறது, ஆனால் அந்த தீமையான காரியங்களை தேவன் இறுதியில், நிலையான நீடித்திருக்கிற நன்மைக்காக அவைகளை பயன்படுத்துகிறார். “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோமர் 8:28). ஒரு தீங்கும் செய்யாத மற்றும் ஒன்றும் அறியாத யோசேப்பு, கடைசியில் கொடூரமான துன்பங்களை அனுபவித்தபோது, அவைகள் எல்லாவற்றிலும் தேவனுடைய நல்ல திட்டத்தை அவனால் காண முடிந்தது (ஆதியாகமம் 50:19-21 ஐ பார்க்கவும்).

3) நல்லவர்களுக்கு தீமையான காரியங்கள் சம்பவிக்கிறது, ஆனால் அந்த தீமையான காரியங்கள் இன்னும் வல்லமையோடு ஊழியத்தில் ஈடுபடுவதற்கு, விசுவாசிகளை அவைகள் கட்டிஎழுப்புகின்றன. “சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர். எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது" (2 கொரிந்தியர் 1:3-5). போர்க்களங்களில் போராடுபவர்களுக்கு போராடியதால் ஏற்பட்ட போர்க்கள தழும்புகள் உதவிசெய்யும்.

4) நல்லவர்களுக்கு தீமையான காரியங்கள் சம்பவிக்கிறது, மிகவும் மோசமான காரியங்கள் சிறந்த நபர்களுக்கு சம்பவிக்கிறது. இயேசு ஒருவர் மட்டுமே மெய்யான நீதிமான், ஆனாலும் நாம் கற்பனை செய்யமுடியாத அளவுக்கு அவர் அவ்வளவு துன்பங்களை அனுபவித்தார். நாம் அவருடைய அடிச்சுவடுகளை பின்பற்றுவோம்: “நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும். இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை; அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்" (1 பேதுரு 2: 20-23). நம்முடைய வேதனைகளை புரிந்துகொள்ளாதபடிக்கு, நம்முடைய வேதனைக்கு இயேசு ஒரு அந்நியர் அல்ல.

ரோமர் 5:8 இவ்வாறு கூறுகிறது: “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்”. உலகத்திலுள்ள மக்களின் பாவ சுபாவமுள்ளவர்களாக இருக்கின்றபோதிலும், தேவன் இன்றும் நம்மை நேசிக்கிறார். இயேசு நம்மை மிகவும் நேசித்து நம்முடைய பாவங்களுக்கான தம்மேல் ஏற்றுக்கொண்டு மரித்தார் (ரோமர் 6:23). நாம் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டால் (யோவான் 3:16, ரோமர் 10:9), நாம் மன்னிக்கப்படுவோம், பரலோகத்தில் ஒரு நித்தியமான வீட்டை நமக்கு வாக்கு பண்ணியிருக்கிறார் (ரோமர் 8:1).

தேவன் ஒரு காரணத்திற்காக காரியங்களை சம்பவிக்க அனுமதிக்கிறார். நாம் அவருடைய காரணங்களை அறிந்துகொண்டோமோ இல்லையோ, தேவன் நல்லவர், நீதியுள்ளவர், அன்புள்ளவர், மற்றும் இரக்கமுள்ளவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் (சங்கீதம் 135:3). பெரும்பாலும், தீமையான காரியங்கள் சம்பவிக்கும்போது, ஏன் சம்பவிக்கிறது என்று நமக்கு ஒன்றும் புரியாது. தேவனுடைய நற்குணத்தை சந்தேகிப்பதைக்காட்டிலும், அவரையே முழுமையாக நம்பவேண்டும். “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” (நீதிமொழிகள் 3:5-6). நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.

Englishமுகப்பு பக்கம்

தேவன் ஏன் நல்ல மனிதர்களுக்கு தீமையான காரியங்களை சம்பவிக்கும்படி அனுமதிக்கிறார்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries