settings icon
share icon
கேள்வி

பின்மாற்றமடைந்த கிறிஸ்தவன் இன்னும் இரட்சிக்கப்பட்டாரா?

பதில்


இது பல ஆண்டுகளாக முடிவில்லாமல் விவாதிக்கப்படும் ஒரு கேள்வியாகும். "பின்மாற்றம்" அல்லது "பின்வாங்குதல்" என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில் வரவில்லை மற்றும் பழைய ஏற்பாட்டில் முதன்மையாக இஸ்ரவேலர்களோடு ஒப்பிட்டு பயன்படுத்தப்படுகிறது. யூதர்கள், அவர்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாக இருந்தாலும், தொடர்ந்து அவருக்கு எதிராக திரும்பி அவருடைய வார்த்தைக்கு எதிராக கலகம் செய்தனர் (எரேமியா 8:9). அதனால்தான் அவர்கள் புண்படுத்திய தேவனுடனான உறவை மீட்டெடுப்பதற்காக அவர்கள் மீண்டும் மீண்டும் தங்கள் பாவத்திற்காக பலி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும், கிறிஸ்தவன், கிறிஸ்துவின் பரிபூரணமான, ஒரேதரம்-பலியிட்டதை தனக்குப் பயன்படுத்திக் கொண்டான், மேலும் அவனுடைய பாவத்திற்கு மேலும் பலி செலுத்தத் தேவையில்லை. தேவனே நமக்காக நம் இரட்சிப்பைப் பெற்றுள்ளார் (2 கொரிந்தியர் 5:21), நாம் அவரால் இரட்சிக்கப்பட்டதால், ஒரு உண்மையான கிறிஸ்தவன் தான் திரும்பி வராதபடி விலகிச் செல்ல முடியாது.

கிறிஸ்தவர்கள் பாவம் செய்கிறார்கள் (1 யோவான் 1:8), ஆனால் கிறிஸ்தவ வாழ்க்கையானது பாவத்தின் வாழ்க்கையால் வகைப்படுத்தப்படுவதில்லை. விசுவாசிகள் புதிய சிருஷ்டிகள் (2 கொரிந்தியர் 5:17). நல்ல கனியைத் தரும் பரிசுத்த ஆவியானவர் நம்மில் இருக்கிறார் (கலாத்தியர் 5:22-23). ஒரு கிறிஸ்தவ வாழ்க்கை மாற்றப்பட்ட வாழ்க்கையாக இருக்க வேண்டும். கிறிஸ்தவர்கள் எத்தனை முறை பாவம் செய்தாலும் மன்னிக்கப்படுகிறார்கள், ஆனால் அதே சமயத்தில் கிறிஸ்தவர்கள் தேவனுடன் நெருங்கி, கிறிஸ்துவைப் போல வளரும்போது படிப்படியாக பரிசுத்தமான வாழ்க்கையை வாழ வேண்டும். தன்னை விசுவாசி என்று கூறிக்கொள்ளும் அதேவேளையில் வேறுவிதமாகக் கூறும் வாழ்க்கையை வாழ்கிற ஒரு நபரைப் பற்றி நமக்கு கடுமையான சந்தேகங்கள் இருக்க வேண்டும். ஆமாம், தற்காலிகமாக பாவத்தில் விழுந்த ஒரு உண்மையான கிறிஸ்தவன் இன்னும் இரட்சிக்கப்பட்டவனாகவே இருக்கிறான், ஆனால் அதே நேரத்தில் பாவத்தால் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கையை வாழும் ஒரு நபர் உண்மையில் ஒரு கிறிஸ்தவன் அல்ல.

கிறிஸ்துவை மறுதலிக்கும் ஒரு நபரைப் பற்றி என்ன? ஒரு நபர் கிறிஸ்துவை மறுதலிக்கிறார் என்றால், தொடங்குவதற்கு அவர் ஒருபோதும் கிறிஸ்துவை அறிந்திருக்கவில்லை என்று வேதாகமம் சொல்லுகிறது. "அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்துபோனார்கள்" (1 யோவான் 2:19). கிறிஸ்துவை புறக்கணித்து விசுவாசத்தை மறுதலிப்பவன், தான் ஒருபோதும் கிறிஸ்துவுக்கு சொந்தமானவன் அல்ல என்பதை நிரூபிக்கிறான். கிறிஸ்துவுக்கு சொந்தமானவர்கள் கிறிஸ்துவுடன் இருக்கிறார்கள். தங்கள் விசுவாசத்தை துறந்தவர்கள் அதை ஆரம்பிக்கவே இல்லை. “இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்; அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்; நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்" (2 தீமோத்தேயு 2:11-13).

English



முகப்பு பக்கம்

பின்மாற்றமடைந்த கிறிஸ்தவன் இன்னும் இரட்சிக்கப்பட்டாரா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries