எனது இரட்சிப்பின் நிச்சயத்தை நான் எப்படி பெற்றுக்கொள்வது?


கேள்வி: எனது இரட்சிப்பின் நிச்சயத்தை நான் எப்படி பெற்றுக்கொள்வது?

பதில்:
இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிற அநேகர் தவறான இடங்களில் இரட்சிப்பின் நிச்சயத்தைத் தேடுகிறார்கள். நம்முடைய வாழ்வில் தேவன் நடப்பிக்கிறதான, நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியில், நற்கிரியைகளில், மற்றும் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிதல் போன்றவைகள் நம்முடைய கிறிஸ்தவ நடப்பில் வெளிப்படும்போது, அவற்றின் ஊடாக இரட்சிப்பின் நிச்சயத்தை நாம் தேடுகிறோம். இந்த காரியங்கள் இரட்சிப்பின் சான்றுகளாக இருந்தாலும், இவைகளில் நம்முடைய இரட்சிப்பின் நிச்சயத்தை நாம் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மாறாக, தேவனுடைய வார்த்தையின் புறநிலையான சத்தியத்திலிருந்து நம்முடைய இரட்சிப்பின் நிச்சயத்தை நாம் கண்டறிந்துகொள்ள வேண்டும். தேவன் நமக்களித்த வாக்குத்தத்தங்களை அடிப்படையாகக் கொண்டு, தேவன் நம்மை இரட்சித்து விட்டார் என்பதில் நாம் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும், அதைவிடுத்து நம் உள்ளார்ந்த அனுபவங்களின் காரணமாக அல்ல.

நீங்கள் இரட்சிப்பின் நிச்சயத்தை எப்படி பெற்றுக்கொள்வது? 1 யோவான் 5:11-13-ஐ கவனியுங்கள்: “தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச்சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்”. குமாரனை உடையவர்கள் யார்? அவரில் விசுவாசம் வைத்தவர்கள்தான் (யோவான் 1:12). உங்களிடம் இயேசு இருந்தால், உங்களுக்கு ஜீவன் உண்டு. அந்த வாழ்க்கை ஒரு தற்காலிகமான வாழ்க்கை அல்ல, மாறாக நித்தியமான வாழ்க்கை.

தேவன் நாம் இரட்சிப்பின் நிச்சயத்தோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஒவ்வொரு நாளும் மெய்யாகவே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோமா அல்லது இல்லையா என்கிற கவலையோடும் திகிலோடும் வாழ முடியாது. எனவேதான் பரிசுத்த வேதாகமம் இரட்சிப்பின் திட்டத்தை தெளிவுப்படுத்துக்கின்றது. இயேசு கிறிஸ்துவில் விசுவாசியுங்கள் (யோவான் 3:16; அப்போஸ்தலர் 16:31). “கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்” (ரோமர் 10:9). உங்களுடைய பாவங்களிலிருந்து மனதிரும்பி விட்டீர்களா? உங்களுடைய பாவங்களின் விலைக்கிரயத்தை செலுத்துவதற்காக இயேசு மரித்து பிறகு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக்கிறீர்களா? (ரோமர் 5:8; 2 கொரிந்தியர் 5:21) இரட்சிப்பிற்காக அவரை மட்டுமே விசுவசிக்கிறீர்களா? இந்த கேள்விகளுக்கெல்லாம் உங்கள் பதில் “ஆம்” என்றால், நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள்! ‘நிச்சயம்’ என்பது சந்தேகங்கள் எதுவுமின்றி இருக்கிற நிலையாகும். தேவனுடைய வார்த்தையை உங்கள் இருதயத்தில் ஏற்றுக் கொள்ளும்போது, நீங்கள் உங்களுடைய நித்தியமான இரட்சிப்பின் யதார்த்தத்தை எந்தவிதமான சந்தேகங்களும் இல்லாமல் உடையவர்களாயிருப்பீர்கள்.

இயேசு, தம்மை விசுவசிக்கிறவர்களுக்கு இந்த நிச்சயத்தை அளிக்கிறார்: “நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன், அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்ளுவதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார், அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக் கொள்ள ஒருவனாலும் கூடாது” (யோவான் 10:28-29). நித்திய ஜீவன் என்பது நித்தியமானதே! கிறிஸ்துவின் இந்த ஈவாகிய இரட்சிப்பை யாராலும் எடுத்துப்போட முடியாது, ஏன், உங்களாலும் கூட அதை எடுத்துப்போட முடியாது.

தேவனுடைய வார்த்தை உங்களுக்கு சொல்லுகிற சந்தோஷத்தை எடுத்துக்கொள்ளுங்கள்: சந்தேகமில்லாமல் நம்பிக்கையோடே நாம் வாழ முடியும்! எந்தவிதமான கேள்வியோ சந்தேகமோ இல்லாமல் இரட்சிப்பின் நிச்சயத்தை கிறிஸ்துவின் வார்த்தையிலிருந்தே நாம் பெற்றுக்கொள்ளலாம். நமது இரட்சிப்பின் நிச்சயம் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் தேவன் நமக்களித்த முழுமையான மற்றும் பரிபூரணமான இரட்சிப்பில் அடங்கியிருக்கிறது.

English
முகப்பு பக்கம்
எனது இரட்சிப்பின் நிச்சயத்தை நான் எப்படி பெற்றுக்கொள்வது?