settings icon
share icon
கேள்வி

நமது இரட்சிப்பு நித்தியமாக பாதுகாப்பானதாக இருந்தால், விசுவாசத்துரோகத்திற்கு எதிராக வேதாகமம் ஏன் மிகவும் கடுமையாக எச்சரிக்கிறது?

பதில்


விசுவாசத்துரோகத்திற்கு எதிராக மிகவும் கடுமையாக வேதாகமம் நம்மை எச்சரிக்கிறதற்கு காரணம், உண்மையான மனந்திரும்பினதன் மாற்றம் வெளிப்படையாக தெரியும் கனியின் மூலம் அளவிடப்படுகிறது. யோர்தான் நதியில் யோவான்ஸ்நானன் ஜனங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தபோது, தங்களை நீதிமான்களாக கருதியவர்களை “மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்” என்று எச்சரித்தார் (மத்தேயு 3:7). மலைப்பிரசங்கத்தில் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் என்று அவரைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களை இயேசு எச்சரித்தார் (மத்தேயு 7:16) நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் (மத்தேயு 7:19) என்று கூறினார்.

இந்த எச்சரிக்கைகளுக்கு பின்பாக இருக்கும் நோக்கம் என்னவெனில், சிலர் அழைக்கிறதுபோல “எளிதான-நம்பிக்கை கோட்பாடு” ஆகும். வேறுவிதமாகக் கூறினால், இயேசுவைப் பின்பற்றுகிற காரியம் நீ ஒரு கிறிஸ்தவன் என்று கூறிக்கொள்வதைவிட மேலானதாக இருக்கிறது. யார் வேண்டுமானாலும் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள முடியும், ஆனால் உண்மையாகவே இரட்சிக்கப்படுகிறவர்கள் தங்கள் வாழ்க்கையில் காணக்கூடிய கனியைக் கொடுப்பார்கள். இப்போது, ஒரு கேள்வி கேட்கத்தோன்றும், "கனி என்பதன் பொருள் என்ன?" கனியைப்பற்றிய மிகவும் எளிமையான உதாரணம், பவுல் பரிசுத்த ஆவியின் கனியை விளக்குகிற கலாத்தியர் 5:22-23-ல் காணலாம்: அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், மற்றும் இச்சையடக்கம். மற்ற வகையான கிறிஸ்தவ கனியும் (துதித்தல், கிறிஸ்துவிற்காக ஆத்துமாக்களை சம்பாதித்தல் போன்றவை) உள்ளன, ஆனால் இந்த பட்டியல் கிறிஸ்தவ மனப்பான்மையின் நல்ல சுருக்கத்தை நமக்கு அளிக்கிறது. உண்மையான கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ நடைபயணத்தில் முன்னேறும்போது அதிகரித்து வரும் மனப்பான்மைகளை தங்கள் வாழ்வில் வெளிப்படுத்துவார்கள் (2 பேதுரு 1:5-8).

நித்திய பாதுகாப்பிற்கான உத்தரவாதம் பெற்றிருக்கும் இந்த உண்மை, கனி கொடுத்துச் செல்லும் சீஷர்கள், முடிவில் அவர்கள் உறுதியாக இருப்பார்கள். இதைக்குறித்து அநேக வேதவாக்கியங்கள் கூறுகின்றன. ரோமர் 8:29-30 வரையிலுள்ள வசனங்களில் தேவனால் முன்னறிந்து, அழைக்கப்பட்டு, நீதிமானாக்கப்பட்டு, மற்றும் மகிமைப்படுத்தப்படுவார்கள் என்று சுட்டிக்காட்டியதன் மூலம் இரட்சிப்பின் "தங்கச் சங்கிலியை" இந்த பகுதி கோடிட்டுக் காட்டுகிறது – போகிற வழியில் நஷ்டம் ஏதும் இல்லை. நம்மில் நற்கிரியையைத் தொடங்கின தேவன் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று பிலிப்பியர் 1:6 கூறுகிறது. எபேசியர் 1:13-14 வரையிலுள்ள வசனங்கள், நாம் நமது இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டிருக்கிறோம் என்று போதிக்கிறது. பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது என்பதை யோவான் 10:29 உறுதிப்படுத்துகிறது. இன்னும் அநேக வசனங்கள் இதைக் குறித்து கூறுகிறது – மெய்யான விசுவாசிகள் தங்கள் இரட்சிப்பில் நித்திய பாதுகாப்பாய் இருக்கிறார்கள்.

விசுவாசத்துரோகத்திற்கு எதிரான எச்சரிக்கைகள் இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டிருக்கின்றன. முதலாவதாக, மெய்யான விசுவாசிகள் தங்கள் "அழைப்பு மற்றும் தேர்ந்தெடுத்தல்" ஆகியவற்றை உறுதிப்படுத்தும்படி அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். நாம் விசுவாசத்தில் இருக்கிறோமா இல்லையா என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கும்படியாக 2 கொரிந்தியர் 13:5-ல் பவுல் நமக்கு சொல்லுகிறார். மெய்யான விசுவாசிகள் தங்கள் வாழ்வில் கனிகொடுத்து இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக இருந்தால், நாம் அவர்களில் இரட்சிப்பின் சான்றுகளைக் காண முடியும். கிறிஸ்தவர்கள் தங்களுக்குள்ள கீழ்ப்படிதல் மற்றும் ஆவிக்குரிய வரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபட்ட வெவ்வேறு அளவுகளில் கனியைக் கொடுப்பார்கள், ஆனால் எல்லா கிறிஸ்தவர்களும் கனி கொடுக்கிறார்கள்; சுய பரிசோதனையின் மூலமாக அந்த ஆதாரங்களை நாம் பார்க்க வேண்டும்.

ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையில் கனி இல்லாத காலங்கள் இருக்கும். இவை பாவம் மற்றும் கீழ்படியாமையின் காலங்களாகும். இப்படிப்பட்ட நீடித்த கீழ்ப்படியாமையின் காலங்களில் என்ன நடக்கிறது என்றால், தேவன் நம்முடைய இரட்சிப்பின் உறுதிப்பாட்டிலிருந்து நம்மை விலக்கி வைப்பதாகும். அதனால்தான் தாவீது சங்கீதம் 51-ல் "இரட்சணியத்தின் சந்தோஷத்தைத்" (சங்கீதம் 51:12) திரும்பத்தரும்படி ஜெபம் செய்தார். நாம் பாவத்தில் வாழும்போது நம் இரட்சிப்பின் சந்தோஷத்தை இழந்து விடுகிறோம். அதனால்தான் வேதாகமம், “நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்” (2 கொரிந்தியர் 13:5) என்று கூறுகிறது. ஒரு உண்மையான கிறிஸ்தவர் தன்னைப் பரிசோதித்துப்பார்த்து, சமீபத்தில் எந்த பலனையும் காணாதபோது, அது சீரிய மனந்திரும்புதலுக்கும் தேவனிடம் திரும்பவும் வழிநடத்த வேண்டும்.

விசுவாசத்துரோகத்தின் மீதான பத்திகளுக்கான இரண்டாவது காரணம் விசுவாசத்துரோகிகளை சுட்டிக்காட்டி, நாம் அவர்களை அடையாளம் கண்டுகொள்ளுவதாகும். விசுவாசத்துரோகி என்பவர் விசுவாசத்தை விட்டுக்கொடுக்கும் ஒருவர் ஆவார். இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதாக அறிக்கைசெய்து அதே சமயத்தில் அவரை இரட்சகராக மெய்யாகவே ஏற்றுக்கொள்ளாதவர்கள் என்று வேதாகமத்திலிருந்து தெளிவாகிறது. மத்தேயு 13:1-9 (விதைக்கிறவரின் உவமை) இந்தச் செய்தியைச் சரியாக விளக்குகிறது. அந்த உவமையில், விதைக்கிற ஒருவன் விதைகளை விதைக்கிறான், அது நான்கு வகையான நிலத்தின்மீது விழுகிற தேவனுடைய வார்த்தையை அடையாளப்படுத்துகிறது: கடுமையான நிலம், பாறை நிலம், களைகளுள்ள நிலம், மற்றும் நன்றாகப் பண்படுத்தப்பட்ட நிலம். இந்த நிலங்கள் நற்செய்திக்கு நான்கு வகையான பதில்களை பிரதிபலிக்கிறது. முதலாவது ஒரு முற்றிலும் மறுப்பு தெரிவிக்கிற நிலம், மற்ற மூன்று நிலங்கள் பல்வேறு நிலைகளில் ஏற்றுக்கொள்ளப்படுகிற காரியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பாறை நிலமும் களைகளுள்ள நிலமும் ஆரம்பத்தில் சுவிசேஷத்திற்கு சாதகமாக பதிலளிக்கின்ற ஜனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, ஆனால் உபத்திரவம் வரும் போது (பாறை நிலம்) அல்லது உலகின் கவலைகள் நெருக்கும்போதும் (களைகளுள்ள நிலம்), அவர்கள் பின்மாரி போய்விடுவார்கள். நற்செய்தியை ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டபோதிலும், அவர்கள் ஒருபோதும் கனிகொடுப்பதில்லை, ஏனெனில் அந்த வித்து (நற்செய்தியின்) இருதயமாகிய நிலத்தில் ஊடுருவதில்லை என்று இயேசு கிறிஸ்து அதை தெளிவாக விளக்குகிறார். தேவனால் "ஆயத்தமாக்கப்பட்ட" நான்காவது நிலம் மட்டுமே விதையைப் பெற முடிந்தது. மறுபடியும் மலைப் பிரசங்கத்தில் இயேசு இவ்வாறு கூறுகிறார்: "என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை" (மத்தேயு 7:21).

வேதாகமம் விசுவாசத்துரோகத்திற்கு எதிராக எச்சரிப்பதும் அதே சமயத்தில் ஒரு உண்மையான விசுவாசி ஒருபோதும் விசுவாசத்துரோகத்தில் செல்லமாட்டார் என்று சொல்லுவதும் ஒருவேளை ஆச்சரியமாக தோன்றலாம். எனினும், இதைத்தான் வேதவாக்கியம் கூறுகிறது. 1 யோவான் 2:19-ல் குறிப்பிடுகிறபடி, விசுவாசத்துரோகிகள் விசுவாசிகளாக இல்லை என்பதை வெளிப்படுத்துகிறார்கள். ஆகவே விசுவாசத்துரோகிகளுக்கு எதிரான வேதாகம எச்சரிப்புகள், "விசுவாசத்தில்" இருக்கிறோம் என்று கூறுகிறபோதிலும் உண்மையிலேயே அதைப் பெற்றிராதவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எபிரேயர் 6:4-6, எபிரெயர் 10:26-29 போன்ற வேதவாக்கியங்கள் விசுவாசிகளாக "தங்களை காண்பித்துக்" கொள்ளுகிறவர்களை எச்சரிக்கின்றன. மத்தேயு 7:22-23 குறிப்பிடுகிறது என்னவெனில், "விசுவாசிகளாகிய நடிப்பவர்களை" தேவன் நிராகரிக்கின்றார், அவர்கள் விசுவாசத்தை இழந்ததினால் அல்ல, ஆனால் தேவன் அவர்களை அறிந்திருக்கவில்லை என்ற உண்மையின் காரணமாகவே அவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள்.

இயேசுவோடு தங்களை அடையாளம் காட்டத் தயாராக உள்ளவர்கள் பலர் இருக்கிறார்கள். நித்திய ஜீவனையும் ஆசீர்வாதத்தையும் விரும்பாதவர் யார்? இருப்பினும், சீஷர்களுடைய விலையை கணக்கிடவேண்டும் இயேசு நம்மை எச்சரிக்கிறார் (லூக்கா 9:23-26; 14:25-33). உண்மையுள்ள விசுவாசிகள் அந்த விலைகளை எண்ணிப்பார்த்தார்கள், ஆனால் விசுவாசத்துரோகிகள் இல்லை. விசுவாசத்தை விட்டு விலகும்போது, விசுவாசத்துரோகிகள் முதலில் அவர்கள் ஒருபோதும் இரட்சிக்கப்ட்டிருக்கவில்லை என்பதற்கு ஆதாரங்களைக் கொடுத்தவர்கள் (1 யோவான் 2:19). விசுவாசத்துரோகம் என்பது இரட்சிப்பின் இழப்பு அல்ல, மாறாக இரட்சிப்பு உண்மையிலேயே பெற்றிருக்கவில்லை என்பதற்கான ஒரு அடையாளமாகும்.

Englishமுகப்பு பக்கம்

நமது இரட்சிப்பு நித்தியமாக பாதுகாப்பானதாக இருந்தால், விசுவாசத்துரோகத்திற்கு எதிராக வேதாகமம் ஏன் மிகவும் கடுமையாக எச்சரிக்கிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries