settings icon
share icon
கேள்வி

ஆன்டினோமியனிசம் என்றால் என்ன?

பதில்


ஆன்டினோமியனிசம் என்ற வார்த்தை இரண்டு கிரேக்க வார்த்தைகளில் இருந்து வருகிறது, ஆன்டி, அதாவது "எதிராக"; மற்றும் நோமோஸ், அதாவது "நியாயப்பிரமாணம்." ஆன்டினோமியனிசம் என்றால் "நியாயப்பிரமாணத்திற்கு எதிராக" என்று பொருள். இறையியல் ரீதியாக, கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கும் தார்மீக நியாயப்பிரமாணங்கள் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையே ஆன்டினோமியனிசம் ஆகும். ஆன்டினோமியனிசம் ஒரு வேதாகமப் போதனையை வேதாகமம் அல்லாத முடிவுக்கு கொண்டு செல்கிறது. கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தை இரட்சிப்பின் வழிமுறையாகக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்பது வேதாகமப் போதனை. இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தபோது, பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார் (ரோமர் 10:4; கலாத்தியர் 3:23-25; எபேசியர் 2:15). கிறிஸ்தவர்கள் கீழ்ப்படிய வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கும் தார்மீக நியாயப்பிரமாணம் எதுவும் இல்லை என்பது வேதாகமத்திற்கு எதிரான முடிவு.

அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 6:1-2ல் உள்ள ஆன்டினோமியனிசத்தின் பிரச்சினையைக் கையாள்கிறார், “ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே. பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?" கிருபையால் மட்டுமே இரட்சிப்பு என்கிற கோட்பாட்டின் மீது அடிக்கடித் தாக்குதல், அது பாவத்தை ஊக்குவிக்கிறது. "நான் கிருபையால் இரட்சிக்கப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டால், நான் விரும்பும் அனைத்தையும் ஏன் செய்யக்கூடாது?" என்று ஜனங்கள் ஆச்சரியப்படலாம். அந்த எண்ணம் உண்மையான மனமாற்றத்தின் விளைவு அல்ல, ஏனென்றால் உண்மையான மனமாற்றம் கீழ்ப்படிவதற்கான அதிக விருப்பத்தை அளிக்கிறது, குறைவான ஒன்றை அல்ல. தேவனுடைய விருப்பம்—அவருடைய ஆவியானவரால் நாம் மறுபடியும் ஜெநிப்பிக்கப்படும்போது நம்முடைய விருப்பம்—நாம் பாவம் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே. அவருடைய கிருபைக்கும் மன்னிப்புக்கும் நன்றியுணர்வுடன், அவரைப் பிரியப்படுத்த விரும்புகிறோம். தேவன் இயேசுவின் மூலம் இரட்சிப்பின் எல்லையற்ற கிருபையை நமக்கு அளித்துள்ளார் (யோவான் 3:16; ரோமர் 5:8). அவர் நமக்காகச் செய்ததற்காக அன்பு, ஆராதனை மற்றும் நன்றியுணர்வு ஆகியவற்றால் நம் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணிப்பதே நமது பதிலாக இருக்கவேண்டும் (ரோமர் 12:1-2). ஆண்டினோமியனிசம் வேதாகமத்திற்கு எதிரானது, அது தேவனுடைய கிருபையுள்ள தயவின் அர்த்தத்தை தவறாகப் பயன்படுத்துகிறது.

ஆன்டினோமியனிசம் வேதாகமத்திற்கு எதிரானது என்பதற்கான இரண்டாவது காரணம், தேவன் நாம் கீழ்ப்படிய வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒரு தார்மீக பிரமாணம் உள்ளது. 1 யோவான் 5:3 நமக்குச் சொல்கிறது, “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல”. நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கும் இந்த பிரமாணம் என்ன? இது கிறிஸ்துவின் பிரமாணம்—“ இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்” (மத்தேயு 22:37-40). இல்லை, நாம் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லை. ஆம், நாம் கிறிஸ்துவின் பிரமாணத்தின் கீழ் இருக்கிறோம். கிறிஸ்துவின் பிரமாணம் என்பது பிரமாண சட்டத் தொகுப்புகளின் விரிவான பட்டியல் அல்ல. இது அன்பின் பிரமாணம். நாம் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும், பலத்தோடும் தேவனை நேசித்தால், அவரைப் பிரியப்படுத்தாமல் இருக்க நாம் எதையும் செய்ய மாட்டோம். நம்மைப் போலவே அயலகத்தாரையும் நேசித்தால், அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய மாட்டோம். கிறிஸ்துவின் பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவது இரட்சிப்பைப் பெறுவதற்கோ அல்லது பராமரிப்பதற்கோ தேவையான செயல் அல்ல. கிறிஸ்துவின் பிரமாணம் என்பது ஒரு கிறிஸ்தவனிடம் தேவன் எதிர்பார்ப்பது ஆகும்.

ஆண்டினோமியனிசம் வேதாகமம் கற்பிக்கும் அனைத்திற்கும் முரணானது. நாம் ஒழுக்கம், நேர்மை மற்றும் அன்புடன் வாழ வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தின் பாரமான கட்டளைகளிலிருந்து இயேசு கிறிஸ்து நம்மை விடுவித்தார், ஆனால் அது பாவம் செய்வதற்கான உரிமம் அல்ல, மாறாக கிருபையின் உடன்படிக்கை. பரிசுத்த ஆவியானவரைச் சார்ந்து, பாவத்தை வென்று, நீதியை வளர்த்துக்கொள்ள நாம் பாடுபட வேண்டும். பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தின் கோரிக்கைகளிலிருந்து நாம் கிருபையுடன் விடுவிக்கப்படுகிறோம் என்பது கிறிஸ்துவின் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்து நம் வாழ்க்கையை வாழ வைக்க வேண்டும். 1 யோவான் 2:3-6 அறிவிக்கிறது, “அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம். அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.”

English



முகப்பு பக்கம்

ஆன்டினோமியனிசம் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries