settings icon
share icon
கேள்வி

அபிஷேகம் என்றால் என்ன? அபிஷேகம் பண்ணப்படுதல் என்றால் என்ன?

பதில்


வேதாகமத்தில், மதச் சடங்குகளில் எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுகிறது மற்றும் அழகுப்படுத்தல் (ரூத் 3:3; மத்தேயு 6:17), இளைப்பாறுதல் (லூக்கா 7:46), மருத்துவ சிகிச்சைகள் (லூக்கா 10:34) மற்றும் அடக்கம்பண்ணும் மரபுகள் (மாற்கு 16:1) போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

பழைய ஏற்பாட்டில் சடங்கு சம்பிரதாயமாக அபிஷேகம் என்பது ஒருவரின் தலையில் (அல்லது ஒரு பொருளின் மீது) பரிசுத்த எண்ணெயைத் தடவுதல், தேய்த்தல் அல்லது ஊற்றுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய பரிசுத்த நோக்கத்தொடுள்ள ஒரு சரீரப்பிரகாரமான செயலாகும்.

மாஷாக் என்ற எபிரேய வார்த்தையின் அர்த்தம் "எண்ணெய் தடவுதல் அல்லது பூசுதல்" ஆகும். கர்த்தரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட விதிமுறைகளின்படி, மதப்பிரகாரமான அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும் எண்ணெயானது கவனமாக நன்றாக வாசனைப் பொருட்களுடன் கலக்கப்பட்டது (யாத்திராகமம் 30:22-32). இந்த எண்ணெயை வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்துவது சமூகத்தில் இருந்து அவர்கள் "துண்டிக்கப்படும்" (யாத்திராகமம் 30:33) தண்டனைக்குரிய கடுமையான குற்றமாகும்.

ராஜாக்கள், ஆசாரியர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் போன்றோர் இன்னும் ஆழமான ஆவிக்குரிய யதார்த்தத்தை அடையாளப்படுத்துவதற்காக வெளிப்புறமாக எண்ணெயால் அபிஷேகம் செய்யப்பட்டனர்—தேவனுடைய பிரசன்னம் அவர்களுடன் இருந்தது மற்றும் அவருடைய தயவு அவர்கள் மீது இருந்தது (சங்கீதம் 20:6; 28:8). தாவீது இன்னும் இளவயது மேய்ப்பனாக இருந்தபோது, இஸ்ரவேலின் ராஜாவாக அவரை அபிஷேகம் செய்யும்படி தேவன் சாமுவேலிடம் கூறினார் (1 சாமுவேல் 16:3). அந்த நாளிலிருந்து, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின் வாழ்க்கையில் வல்லமையுடன் தங்கியிருந்தார் (1 சாமுவேல் 16:13; சங்கீதம் 89:20).

தாவீதின் காலத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஆரோனையும் அவருடைய குமாரர்களையும் ஆசாரியர்களாகப் பணிபுரியும்படி பரிசுத்தம்பண்ணும்படி கர்த்தர் மோசேக்கு அறிவுறுத்தினார் (யாத்திராகமம் 28:41; 30:30; லேவியராகமம் 8:30; 10:7). அவர்களுடைய பலிகளை பட்சித்து தம் பிரசன்னத்தின் அக்கினிமயமான மகிமையுடன் அவர்களுடைய ஆசாரிய ஊழியத்தை தேவன் அங்கீகரித்தார். ஆராதனை மற்றும் பலியிடும் முறைமைகளில் பயன்படுத்துவதற்காக அபிஷேகம் பண்ணுதலின் மூலம் ஆசரிப்புக்கூடாரம் உட்பட பரிசுத்தப் பொருட்களும் தனித்தனியாக பரிசுத்தம்பண்ணப்பட்டன அல்லது பிரதிஷ்டை செய்யப்பட்டன (ஆதியாகமம் 28:18; யாத்திராகமம் 30:26-29; 40:9-11).

எலிசாவை எலியாவிற்குப் பின் தீர்க்கதரிசியாக அபிஷேகம் பண்ணும்ம்படி கர்த்தர் எலியாவுக்குக் கட்டளையிட்டபோது ஒரு தீர்க்கதரிசியின் அபிஷேகம் பற்றிய நேரடியான குறிப்பு வேதாகமத்தில் உள்ளது (1 இராஜாக்கள் 19:16). தீர்க்கதரிசிகள் தங்கள் அழைப்பை ஏற்றுச் செய்யத்தக்கதாக கர்த்தருடைய ஆவியானவரால் பெலப்படுத்தப்பட்டதை மற்றும் பாதுகாக்கப்பட்டதைக் குறிக்க அபிஷேகம் பற்றிய உருவக குறிப்புகளும் இதில் அடங்கும் (1 நாளாகமம் 16:22; சங்கீதம் 105:15).

தலையில் எண்ணெய் பூசுவதும் கனத்துக்குரிய விருந்தினர்களுக்கு வழங்கப்படும் விருந்தோம்பல் ஒரு பண்டைய வழக்கம் ஆகும். சங்கீதம் 23:5 இல், தாவீது ராஜா தன்னை கர்த்தருடைய மேஜையில் அமர்ந்திருக்கும் ஒரு மதிப்புமிக்க விருந்தினராக சித்தரிக்கிறார். இரவு விருந்தினருக்கு எண்ணெய் பூசும் இந்த வழக்கம் சுவிசேஷப் புத்தகங்களில் மீண்டும் காணப்படுகிறது (லூக்கா 7:46; மாற்கு 14:3-9; யோவான் 12:3).

புதிய ஏற்பாட்டில், இயேசு கிறிஸ்து தம்மை அபிஷேகம் செய்யப்பட்ட ராஜாவாகவும், ஆசாரியராகவும், தீர்க்கதரிசியாகவும் வெளிப்படுத்துகிறார். அவர் தேவனுடைய பரிசுத்தர் மற்றும் தெரிந்துகொள்ளப்பட்ட குமாரகிய, மேசியா. உண்மையில், "அபிஷேகம் பண்ணப்பட்டவர்" என்று பொருள்படும் மேசியா என்னும் சொல், "அபிஷேகம் பண்ணப்பட்டவர்" என்பதற்கான எபிரேய வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. கிறிஸ்து (கிரேக்க மொழியில், கிறிஸ்டோஸ்) என்றால் "அபிஷேகம் பண்ணப்பட்டவர்" என்று பொருள்.

இயேசு தனது ஊழியத்தின் துவக்கத்தில் கூறினார், “கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்” (லூக்கா 4:18; ஏசாயா 61:1). இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தை அபிஷேகம் பண்ணப்பட்டவராக, தெரிந்துகொள்ளப்பட்ட மேசியாவாக நிறைவேற்றினார் (லூக்கா 4:21). அவர் செய்த அற்புதங்கள் மற்றும் உலக இரட்சகராக அவர் பலியாக கொடுத்த ஜீவன் மூலம் தனது அபிஷேகத்தை நிரூபித்தார் (அப்போஸ்தலர் 10:38).

இன்று கிறிஸ்தவர்களும் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு உணர்வும் உள்ளது. இயேசு கிறிஸ்து மூலம், விசுவாசிகள் "பரிசுத்தராலே அபிஷேகம் பெற்று" இருக்கிறார்கள் (1 யோவான் 2:20). இந்த அபிஷேகம் ஒரு வெளிப்புற நிகழ்வில் வெளிப்படுத்தப்படவில்லை, மாறாக பரிசுத்த ஆவியின் வரத்தில் பங்குகொள்வதன் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது (ரோமர் 8:11). இரட்சிக்கப்பட்ட தருணத்தில், விசுவாசிகள் பரிசுத்த ஆவியானவரால் உள்ளில் வாசம் செய்யப்பட்டு, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்துவுடன் இணைந்திருக்கிறார்கள். இதன் விளைவாக, நாம் அவருடைய அபிஷேகத்தில் பங்கு கொள்கிறோம் (2 கொரிந்தியர் 1:21-22). ஒரு வேத அறிஞரின் கூற்றுப்படி, இந்த அபிஷேகம் "தேவனுக்கு ஆசாரியர்களாகவும் ராஜாக்களாகவும் இருக்கும் கிறிஸ்தவர்கள் மீது பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்தமான தாக்கங்களை வெளிப்படுத்துகிறது" (Smith, W., “Anointing,” Smith’s Bible Dictionary, revised ed., Thomas Nelson, 2004).

புதிய ஏற்பாடு அபிஷேக எண்ணெயை வியாதிகளை குணப்படுத்துதல் மற்றும் ஜெபத்துடன் தொடர்புபடுத்துகிறது. இயேசு நற்செய்தியைப் பிரசங்கிக்க சீடர்களை அனுப்பியபோது, "அநேகம் பிசாசுகளைத் துரத்தி, அநேகம் நோயாளிகளை எண்ணெய் பூசிச் சொஸ்தமாக்கினார்கள்" என்று வாசிக்கிறோம் (மாற்கு 6:13, NLT). யாக்கோபு விசுவாசிகளுக்கு அவர்கள் வியாதியுற்று இருக்கும்போது "உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்" (யாக்கோபு 5:14) என்று அறிவுறுத்துகிறார்.

கரிஸ்மாட்டிப் பிரிவில் உள்ளவர்கள் "அபிஷேகம்" என்பது கிறிஸ்தவர்களால் பெற்றிருக்கக்கூடிய மற்றும் தேட வேண்டிய ஒன்று என்கிறார்கள். அவர்கள் “அபிஷேகம் பண்ணப்பட்ட” போதகர்கள், பிரசங்கங்கள், ஊழியங்கள், பாடல்கள் போன்றவற்றைப் பற்றி பேசுவதும், மற்றவர்களிடம் “அவர்களுடைய அபிஷேகத்தை திறக்க” அல்லது “அபிஷேகத்தில் நடக்க” அறிவுறுத்துவதும் பொதுவானது ஆகும். அபிஷேகம் என்பது அபிஷேகம் பண்ணப்பட்டவர் மூலம் ஒரு காரியத்தை நிறைவேற்றுவதற்கான தேவனுடைய வல்லமையின் வெளிப்பாடாகும் என்பது கருத்து. அவர்கள் பொதுவான கூட்டு அபிஷேகங்கள் மற்றும் பல்வேறு வகையான தனிப்பட்ட அபிஷேகங்கள் உள்ளன என்று ஜனங்களைக் கவர்ந்திழுக்கிறார்கள்: ஐந்து மடங்கு அபிஷேகம்; அப்போஸ்தலிக்க அபிஷேகம்; மேலும், பெண்களுக்கு, ரூத் அபிஷேகம், தெபோராள் அபிஷேகம், அன்னா அபிஷேகம் போன்றவை இவற்றுள் அடங்கும். சிலர் இசைக்கருவிகளில் "தாவீதின் அபிஷேகம்" பற்றி பேசுகிறார்கள் — "அபிஷேகம் பண்ணப்பட்ட" இசைக்கருவிகள் பேய்களை விரட்ட முன்பை விட இன்னும் உயர்ந்த நிலையில் தேவனால் இசைக்கப்படுகின்றன என்கிறார்கள். சிறப்பு அபிஷேகங்கள் ஒரு நபர் தனது ஆவிக்குரிய வரத்தை "உயர்ந்த நிலையில்" பயன்படுத்த அனுமதிப்பதாக கூறப்படுகிறது. "ஒருவரின் விசுவாசத்தை வெளிக்கொணர்வது மூலம்" சிறப்பு அபிஷேகங்கள் பெறப்படுகின்றன என்று கரிஸ்மாட்டிக் பிரிவினர் கூறுகிறார்கள்.

அபிஷேகம் பற்றிய கரிஸ்மாட்டிக் பிரிவினர் போதிக்கும் போதனைகள் வேதாகமம் பொதுவாக சொல்வதைத் தாண்டி அதீத நிலைக்குச் செல்கிறது. அடையாளங்கள் மற்றும் அதிசயங்களுக்கான அவர்களின் பசியில், பல கரிஸ்மாட்டிக் பிரிவினர் புதிய மற்றும் இன்னும் அதிக உற்சாகமளிக்கும் அனுபவங்களைத் தேடுகிறார்கள், மேலும் அதற்கு அதிக வெளிப்பெருக்குகள், அதிக ஆவிக்குரிய ஞானஸ்நானம் மற்றும் அதிக அபிஷேகங்கள் தேவைப்படுகின்றன என்கின்றனர். ஆனால் வேதாகமம் ஒரேஒரு ஞானஸ்நானத்தை சுட்டிக்காட்டுவது போலவே, ஆவியின் ஒரேஒரு அபிஷேகத்தையும் சுட்டிக்காட்டுகிறது: "நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது" (1 யோவான் 2:27; 2 தீமோத்தேயு 1:14 ஐயும் பார்க்கவும்). இதே வேதப்பகுதி மற்றொரு தவறான கருத்தையும் மறுக்கிறது, அதாவது, சாத்தான் எப்படியாவது ஒரு விசுவாசியின் அபிஷேகத்தை "திருட" முடியும். நாம் பெற்ற அபிஷேகத்தை இழப்பதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை, ஏனென்றால் அது அப்படியே இருக்கிறது என்று வேதம் கூறுகிறது.

ஆவியின் அபிஷேகம் பற்றிய மற்றொரு தவறான போதனை "மிம்ஷாக் அபிஷேகம்" ஆகும். மிம்ஷாக் என்பது மாஷாக் (“அபிஷேகம்”) தொடர்பான எபிரேய வார்த்தையாகும், இது எசேக்கியேல் 28:14 இல் மட்டுமே காணப்படுகிறது, அங்கு அபிஷேகம் “மூடுதல்” (NKJV) அல்லது “மூடி பாதுகாத்தல்” (AMP) என்று கூறப்படுகிறது. விசுவாச வார்த்தை முகாமில் உள்ள சிலரின் கூற்றுப்படி, மிம்ஷாக் அபிஷேகம் (லூசிபரின் வீழ்ச்சிக்கு முன் அவனுக்கு வழங்கப்பட்டது) இப்போது விசுவாசிகளுக்கு கிடைக்கிறது என்பதாகும். இந்த அபிஷேகத்தைப் பெறுவதால் ஒருவர் தொடும் அனைத்தும் அதிகரிக்க அல்லது விரிவடையச் செய்யும், மேலும் அபிஷேகம் பண்ணப்பட்டவர் அதிக வெற்றி, பொருள் ஆதாயம், ஆரோக்கியம் மற்றும் வல்லமை ஆகியவற்றை அனுபவிப்பார்.

ஒரு புதிய அபிஷேகத்தைத் தேடிப்போவதற்குப் பதிலாக, விசுவாசிகள் தங்களுக்கு ஏற்கனவே பரிசுத்த ஆவியானவரின் வரம் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆவியானது ஒரு பகுதியாக கொடுக்கப்படவில்லை, அவர் பகுதிகளாகவோ அல்லது அளவுகளாகவோ வருவதில்லை, மேலும் அவர் எடுத்துச் செல்லப்படவில்லை. “தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும். அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தது” (2 பேதுரு 1:3) என்கிற வாக்குத்தத்தம் நமக்கு இருக்கிறது.

English



முகப்பு பக்கம்

அபிஷேகம் என்றால் என்ன? அபிஷேகம் பண்ணப்படுதல் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries