settings icon
share icon
கேள்வி

தேவதூதர்கள் இன்று மக்களுக்குத் தோன்றுகிறார்களா?

பதில்


வேதாகமத்தில் தேவதூதர்கள் மக்களுக்கு முன்னறிவிப்பு இல்லாத மற்றும் பல்வேறு வழிகளில் தோன்றுகிறார்கள். வேதாகமத்தின் சாதாரண வாசிப்பிலிருந்து, ஒரு நபர் தேவதூதர்கள் தோன்றுவது ஓரளவு பொதுவானது என்ற எண்ணத்தைப் பெறலாம், ஆனால் அது அப்படி இல்லை. இன்று தேவதூதர்கள் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது, மேலும் தேவதூதர்கள் தோன்றியதாக பல கூற்றுக்கள் உள்ளன. தேவதூதர்கள் ஏறக்குறைய ஒவ்வொரு மதத்தினுடைய ஒரு பகுதியாகும் மற்றும் பொதுவாக தேவதூதரின் அதே பங்கைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. தேவதூதர்கள் இன்று தோன்றுகிறார்களா என்பதை அறிய, நாம் முதலில் அவர்களின் பண்டைய காலத்தில் தோன்றின தோற்றங்களைப் பற்றிய வேதாகமப் பார்வையைப் பெற வேண்டும்.

வேதாகமத்தில் தேவதூதர்களின் முதல் தோற்றம் ஆதியாகமம் 3:24 இல் உள்ளது, ஆதாம் மற்றும் ஏவாள் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். கேரூபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் தேவன் வைத்தார். அடுத்தபடியாக தேவதூதர் தோற்றம் ஆதியாகமம் 16:7 இல், சுமார் 1,900 ஆண்டுகளுக்குப் பிறகு. ஆபிரகாமினிடத்தில் இஸ்மவேலைப் பெற்றெடுத்த எகிப்திய அடிமைப்பெண்ணாகிய ஆகார், ஒரு தேவதூதனால் திரும்பி வந்து அவளுடைய நாச்சியாராகிய சாராயிடம் கீழ்ப்படிந்து இருக்கும்படிக்கு அறிவுறுத்தப்பட்டார். ஆதியாகமம் 18:2 இல் ஆபிரகாம் தேவனையும் இரண்டு தேவதூதர்களையும் சந்தித்தார், சோதோம் மற்றும் கொமோராவின் அழிவு குறித்து தேவன் அவருக்கு அறிவித்தபோது. அதே இரண்டு தேவதூதர்கள் லோத்தைப் பார்வையிட்டு அந்த நகரத்தை அழிப்பதற்கு முன்பு குடும்பத்துடன் தப்பித்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினார்கள் (ஆதியாகமம் 19:1-11). இந்த நிகழ்வில் தேவதூதர்கள் லோத்துவை அச்சுறுத்தும் பொல்லாத மனிதர்களை குருட்டாட்டம் பிடிக்க வைப்பதன் மூலம் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியை வெளிப்படுத்தினர்.

யாக்கோபு பல தேவதூதர்களைக் கண்டபோது (ஆதியாகமம் 32:1), அவர்களை உடனடியாக தேவனுடைய சேனையாக அங்கீகரித்தார். எண்ணாகமம் 22:22 இல், ஒரு தேவதூதன் கீழ்ப்படியாத தீர்க்கதரிசியான பிலேயாமை எதிர்கொண்டார், ஆனால் பிலேயாம் தேவதூதனை முதலில் பார்க்கவில்லை, இருப்பினும் அவனது கழுதை பார்த்தது. மரியாள் ஒரு தேவதூதரிடமிருந்து வருகை பெற்றார், அவர் மேசியாவின் தாயாக இருப்பார் என்று கூறினார், மேலும் யோசேப்பு ஒரு தேவதூதனால் எச்சரிக்கப்பட்டார், மரியாளையும் இயேசுவையும் எகிப்துக்கு அழைத்துச் சென்று ஏரோதின் கட்டளையிலிருந்து காப்பாற்றினார் (மத்தேயு 2:13). தேவதூதர்கள் தோன்றும்போது, அவர்களைப் பார்ப்பவர்கள் பெரும்பாலும் பயத்தால் ஆட்கொள்ளப்படுகிறார்கள் (நியாயாதிபதிகள் 6:22; 1 நாளாகமம் 21:30; மத்தேயு 28:5). தேவதூதர்கள் தேவனிடமிருந்து செய்திகளை கொண்டுவந்து வழங்குகிறார்கள் மற்றும் அவருடைய சித்தத்தின்படி செய்கிறார்கள், சில நேரங்களில் இயற்கைக்கு அப்பாற்பட்ட வழிகளில் செயல்படுகிறார்கள். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தேவதூதர்கள் மக்களை தேவனிடம் சுட்டிக்காட்டி அவருக்கு மகிமையைக் கொடுக்கிறார்கள். பரிசுத்த தேவதூதர்கள் தாங்கள் ஆராதிக்கப்படுவதை மறுக்கிறார்கள் (வெளிப்படுத்துதல் 22:8-9).

சமீபத்திய அறிக்கைகளின்படி, தேவதூதர்களின் வருகைகள் பல்வேறு வடிவங்களில் வருகின்றன. சில சந்தர்ப்பங்களில், ஒரு அந்நியருக்கு ஏற்படவிருக்கும் கடுமையான காயம் அல்லது மரணத்தைத் தடுக்கிறார்கள், பின்னர் மர்மமான முறையில் மறைந்து விடுகிறார்கள். மற்ற சந்தர்ப்பங்களில், ஒரு சிறகு அல்லது வெண்ணிற ஆடையில் ஒரு கணம் தோன்றி மற்றும் பின்னர் மறைந்து விடுகிறார்கள். தேவதூதரைப் பார்க்கும் நபர் பெரும்பாலும் சமாதானம் மற்றும் தேவனுடைய இருப்பை உறுதிப்படுத்தும் உணர்வுடன் இருப்பார்கள். இந்த வகையான வருகை அப்போஸ்தலர் 27:23 இல் காணப்பட்ட வேதாகம மாதிரியுடன் ஒத்துப்போகிறது.

இன்று சில நேரங்களில் அறிவிக்கப்படும் மற்றொரு வகை வருகை "தூத பாடகர் குழு" வகை. லூக்கா 2:13 இல், மேய்ப்பர்கள் இயேசுவின் பிறப்பைப் பற்றிச் சொல்லப்பட்டதால், பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி அவர்களைச் சந்தித்தனர். ஆராதனைத் தலங்களில் இதே போன்ற அனுபவங்களை சிலர் தெரிவித்துள்ளனர். இந்த அனுபவம் மாதிரிக்கு சரியாகப் பொருந்தாது, ஏனெனில் இது பொதுவாக ஆவிக்குரிய உற்சாகத்தின் உணர்வைத் தவிர வேறு எந்த நோக்கத்தையும் அளிக்காது. லூக்காவின் நற்செய்தியில் உள்ள தூதர் சேனையின் பாடகர் குழு சில குறிப்பிட்ட செய்திகளை அறிவித்தது.

மூன்றாவது வகை வருகை ஒரு சரீரப் பிரகாரமான உணர்வை மட்டுமே உள்ளடக்கியது. தீவிரமான தனிமையின் காலங்களில் கைகள் அல்லது இறக்கைகள் தங்களைச் சுற்றிக் கொண்டிருப்பதைப் போல வயதானவர்கள் அடிக்கடி உணர்கிறார்கள். தேவன் நிச்சயமாக சகல ஆறுதலின் தேவன், மற்றும் வேதம் தேவன் தமது சிறகுகளால் மூடுவதைப் பற்றி பேசுகிறது (சங்கீதம் 91:4). அத்தகைய கூற்றுக்கள் அந்த மூடுதலுக்கான எடுத்துக்காட்டுகளாக இருக்கலாம்.

தேவன் எப்பொழுதும் போலவே உலகில் இன்னும் சுறுசுறுப்பாகவே இருக்கிறார், அவருடைய தேவதூதர்கள் நிச்சயமாக வேலை செய்கிறார்கள். கடந்த காலத்தில் தேவதூதர்கள் தேவனுடைய மக்களை பாதுகாத்தது போல், அவர்கள் இன்றும் நம்மை பாதுகாக்கிறார்கள் என்று நாம் உறுதியாக நம்பலாம். எபிரேயர் 13:2 கூறுகிறது, "அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு." நாம் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதால், நாம் அதை அறியாவிட்டாலும், அவருடைய தேவதூதர்களை நாம் சந்திக்க நேரிடும். விசேஷ சூழ்நிலைகளில், தேவன் தமது ஜனங்களை தமது காணக்கூடாத தேவதூதர்களைக் காண அனுமதித்தார், எனவே தேவனுடைய ஜனங்கள் ஊக்குவிக்கப்பட்டு அவருடைய சேவையில் தொடர வேண்டும் (2 இராஜாக்கள் 6: 16-17).

தேவதூதர்களைப் பற்றிய வேதத்தின் எச்சரிக்கைகளையும் நாம் கவனிக்க வேண்டும்: சாத்தானுக்கு வேலை செய்யும் விழுந்துப்போன தேவதூதர்கள் இருக்கிறார்கள், அவர்கள் நம்மைத் தகர்க்கவும் அழிக்கவும் எதையும் செய்வார்கள். கலாத்தியர் 1:8 எந்த "புதிய" சுவிசேஷத்தையும் அது தேவதூதரால் வழங்கப்பட்டாலும் அது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கிறது. கொலோசெயர் 2:18 தேவதூதர்களின் ஆராதனைக்கு எதிராக எச்சரிக்கிறது. வேதாகமத்தில் ஒவ்வொரு முறையும் மனிதர்கள் தேவதூதர்களுக்கு முன்பாக பணிந்து குனிந்தபோது, அந்த மனிதர்களால் ஆராதிக்கப்படுவதை அவர்கள் உறுதியாக மறுத்தனர். ஆராதனையை ஏற்றுக்கொள்ளும் எந்த தேவதூதனும், அல்லது கர்த்தராகிய இயேசுவை மகிமைப்படுத்தாத எந்த தேவதூதனும், ஒரு ஏமாற்றுக்காரன் ஆவான். 2 கொரிந்தியர் 11:14-15 கூறுகையில், சாத்தானும் அவனது தேவதூதர்களும் தங்களைக் கேட்கும் எவரையும் ஏமாற்றி வழிதவறச் செய்வதற்காக ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டுள்ளனர்.

தேவனுடைய தேவதூதர்கள் வேலை செய்கிறார்கள் என்ற அறிவினால் நாம் ஊக்குவிக்கப்படுகிறோம். விசேஷ சூழ்நிலைகளில், அந்த அரிய தனிப்பட்ட வருகைகளில் ஒன்று கூட நமக்கு இருக்கலாம். இருப்பினும், அந்த அறிவை விட பெரியது, இயேசு கூறிய அறிவு, "இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்" (மத்தேயு 28:20). தேவதூதர்களை சிருஷ்டித்து அவர்களின் ஆராதனையைப் பெற்ற இயேசு, நம்முடைய சோதனைகளில் அவர் இருக்கிறேன் என்று நமக்கு உறுதியளித்திருக்கிறார்.

Englishமுகப்பு பக்கம்

தேவதூதர்கள் இன்று மக்களுக்குத் தோன்றுகிறார்களா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries