நாம் அனைவரும் தேவனுடைய பிள்ளைகளா, அல்லது கிறிஸ்தவர்கள் மட்டும்தானா?


கேள்வி: நாம் அனைவரும் தேவனுடைய பிள்ளைகளா, அல்லது கிறிஸ்தவர்கள் மட்டும்தானா?

பதில்:
எல்லா ஜனங்களும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் (கொலோசெயர் 1:16) என்றும், தேவன் உலகம் முழுவதையும் நேசிக்கிறார் (யோவான் 3:16) என்றும் வேதாகமம் தெளிவாக கூறுகிறது, ஆனால் மறுபடியும் பிறந்தவர்கள் மட்டுமே தேவனுடைய பிள்ளைகள் (யோவான் 1:12; 11:52; ரோமர் 8:16; 1 யோவான் 3:1-10).

வேதத்தில், இழந்துபோனவர்கள் ஒருபோதும் தேவனின் பிள்ளைகள் என்று குறிப்பிடப்படுவதில்லை. நாம் இரட்சிக்கப்படுவதற்கு முன்பு நாம் “இயல்பாகவே கோபத்தின் பொருள்களாக” இருந்தோம் என்று எபேசியர் 2:3 சொல்கிறது (எபேசியர் 2:1-3). ரோமர் 9:8 கூறுகிறது, “அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள்.” தேவனுடைய பிள்ளைகளாகப் பிறப்பதற்குப் பதிலாக, நாம் பாவத்தில் பிறக்கிறோம், அது நம்மை தேவனிடமிருந்து பிரிக்கிறது மற்றும் நம்மை சாத்தானுடன் சேர்ந்து தேவனுக்கு எதிரியாக இணைக்கிறது (யாக்கோபு 4:4; 1 யோவான் 3:8). இயேசு சொன்னார், “தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்” (யோவான் 8:42). சில வசனங்களுக்கு பின்னர் யோவான் 8:44-ல், பரிசேயர்களிடம் இயேசு “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்” என்று கூறினார். உண்மை என்னவென்றால், இரட்சிக்கப்படாதவர்கள் தேவனுடைய பிள்ளைகள் அல்ல, இது 1 யோவான் 3:10-லும் காணலாம்: “இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச்செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனாலுண்டானவனல்ல.”

இயேசு கிறிஸ்துவுடனான நமது உறவின் மூலம் தேவனுடைய குடும்பத்தில் தத்தெடுக்கப்படுவதால், நாம் இரட்சிக்கப்படுகையில் நாம் தேவனின் பிள்ளைகளாகி விடுகிறோம் (கலாத்தியர் 4:5-6; எபேசியர் 1:5). இதை ரோமர் 8:14-17 போன்ற வசனங்களில் தெளிவாகக் காணலாம்: “...எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.” இரட்சிக்கப்படுபவர்கள் “கிறிஸ்து இயேசுவை விசுவாசிப்பதன் மூலம் தேவனுடைய பிள்ளைகள்” ஆகிறார்கள் (கலாத்தியர் 3:26) ஏனென்றால், “பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக தேவன் முன்னரே தீர்மானித்திருக்கிறார்” (எபேசியர் 1:5 ).

English


முகப்பு பக்கம்
நாம் அனைவரும் தேவனுடைய பிள்ளைகளா, அல்லது கிறிஸ்தவர்கள் மட்டும்தானா?