settings icon
share icon
கேள்வி

இயேசு பரிபூரண ஜீவனை வாக்குத்தத்தமாக அளித்தபோது அவர் எதை அர்த்தப்படுத்தினார்?

பதில்


யோவான் 10:10ல் இயேசு சொன்னார், “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.” திருடனைப் போல ஆண்டவர் இயேசு சுயநலமான காரணங்களுக்காக வரவில்லை. அவர் கொடுக்க வருகிறார், பெறுவதற்காக அல்ல. ஜனங்கள் அவரில் அர்த்தமுள்ள, நோக்கமுள்ள, மகிழ்ச்சியான மற்றும் நித்தியமான ஜீவனைப் பெறுவதற்காக அவர் வருகிறார். அவரை நம்முடைய இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் தருணத்தில் இந்த பரிபூரண ஜீவனைப் பெறுகிறோம்.

கிரேக்க மொழியில் "பரிபூரணமாக" என்ற இந்த வார்த்தையானது பெரிஸ்ஸன் ஆகும், அதாவது "அதிகமாக, மிக அதிகமாக, அளவிட முடியாத அளவுக்கு, அளவுக்கதிகமாக, மிதமிஞ்சியதாக, ஒருவர் நினைப்பதைவிட அல்லது எதிர்பார்ப்பதை விட கணிசமாக அதிகமாக இருக்கும் அளவுக்கு மிகுதியாக உள்ளது" என்று அர்த்தமாகும். சுருக்கமாகச் சொன்னால், 1 கொரிந்தியர் 2:9-ஐ நினைவுபடுத்தும் ஒரு கருத்து, நாம் கற்பனை செய்வதைவிட மிகச் சிறந்த ஜீவனையே இயேசு நமக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார்: “தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை." நாம் கேட்பது அல்லது நினைப்பது அனைத்திற்கும் மேலாக தேவன் மிகுதியாகச் செய்ய வல்லவர் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார், நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய தேவன் (எபேசியர் 3:20).

ஆடம்பரமான வீடுகள், விலையுயர்ந்த கார்கள், உலகளாவிய கப்பல்கள் மற்றும் நமக்கு என்ன செய்வது என்று தெரிந்ததை விட அதிகமாக இருக்கும் பணம் ஆகியவற்றைக் குறித்த தரிசனங்களைப் பெறத் தொடங்குவதற்கு முன்பு, இந்த பரிபூரணமான ஜீவனைக் குறித்து இயேசு என்ன கற்பிக்கிறார் என்பதைப் பற்றி நாம் சற்று நிதானித்து சிந்திக்க வேண்டும். இவ்வுலகில் செல்வம், கௌரவம், பதவி, அதிகாரம் ஆகியவை தேவனின் முதன்மையானவை அல்ல என்று வேதாகமம் சொல்லுகிறது (1 கொரிந்தியர் 1:26-29). பொருளாதாரம், கல்வி மற்றும் சமூக அந்தஸ்தின் அடிப்படையில், பெரும்பாலான கிறிஸ்தவர்கள் சலுகை பெற்ற வகுப்பினரிடமிருந்து வரவில்லை. அப்படியானால், பரிபூரணமான ஜீவன் என்பது அளவுக்கதிகமான பொருள்களைக் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகிறது. அப்படி இருந்திருந்தால், மனிதர்களில் இயேசுவே செல்வந்தராக இருந்திருப்பார். ஆனால் இதற்கு நேர்மாறானது உண்மையாயிருக்கிறது (மத்தேயு 8:20).

பரிபூரணமான ஜீவன் என்பது நித்திய வாழ்வு, நாம் கிறிஸ்துவிடம் வந்து அவரை நம்முடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் தருணத்தில் தொடங்கி, நித்தியம் முழுவதும் செல்லுகிற ஒரு வாழ்க்கை. ஜீவனின் வேதாகம வரையறை — குறிப்பாக நித்திய ஜீவன் — இயேசுவால் வழங்கப்படுகிறது: "ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்" (யோவான் 17:3). இந்த வரையறை நாட்களின் நீட்டிப்பு, ஆரோக்கியம், செழுமை, குடும்பம் அல்லது தொழில் ஆகியவற்றைக் குறிப்பிடவில்லை. உண்மையில், அது குறிப்பிடும் ஒரே விஷயம் தேவனைப் பற்றிய அறிவு மட்டுமே, இது உண்மையிலேயே பரிபூரணமான ஜீவனுக்கான திறவுகோலாகும்.

பரிபூரணமான ஜீவன் என்றால் என்ன? முதலாவதாக, பரிபூரணமான என்பது ஆவுக்குரிய பரிபூரணம் ஆகும், பொருள்களின் திரட்சி அல்ல. உண்மையில், தேவன் நம் வாழ்வின் பௌதிக சூழ்நிலைகளில் அதிக அக்கறை காட்டுவதில்லை. என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று அவர் நமக்கு உறுதியளிக்கிறார் (மத்தேயு 6:25-32; பிலிப்பியர் 4:19). சரீரப்பிரகாரமான ஆசீர்வாதங்கள் தேவனை மையமாகக் கொண்ட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம்; நம்முடைய செல்வமோ அல்லது வறுமையோ தேவனோடு நாம் நிலைத்து நிற்கும் உறுதியான அறிகுறி அல்ல. சாலமோன் ஒரு மனிதனுக்கு கிடைக்கக்கூடிய அனைத்துப் பொருட்களின் ஆசீர்வாதங்களையும் கொண்டிருந்தார், ஆனால் அவை அனைத்தும் அர்த்தமற்றவையாகக் கண்டார் (பிரசங்கி 5:10-15). மறுபுறம், பவுல் எந்த சூழ்நிலையிலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன் என்கிறார் (பிலிப்பியர் 4:11-12).

இரண்டாவதாக, நித்திய ஜீவன், ஒரு கிறிஸ்தவன் உண்மையிலேயே அக்கறைக் கொண்டுள்ள வாழ்க்கை, இது காலத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை, ஆனால் தேவனுடனான நமது உறவால் தீர்மானிக்கப்படுகிறது. அதனால்தான், நாம் மனந்திரும்பி பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்றவுடன், நிச்சயமாக, அதன் முழுமையுடன் இல்லாவிட்டாலும் நித்திய ஜீவனை ஏற்கனவே பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது (1 யோவான் 5:11-13). பூமியில் வாழ்வின் நீளம் ஏராளமான வாழ்க்கைக்கு ஒத்ததாக இல்லை.

இறுதியாக, ஒரு கிறிஸ்தவனின் ஜீவன் "நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருதல்" சுற்றியே சுழல்கிறது (2 பேதுரு 3:18). பரிபூரண ஜீவன் என்பது கற்றல், கைக்கொள்ளுதல் மற்றும் முதிர்ச்சி அடைதல், தோல்வி, மீளுதல், சரிசெய்தல், சகித்துக்கொள்வது மற்றும் சமாளித்தல் ஆகியவற்றின் தொடர்ச்சியான செயல்முறையாகும் என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது, ஏனெனில், நமது தற்போதைய நிலையில், "இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம்” (1 கொரிந்தியர் 13:12). ஒரு நாள் நாம் தேவனை நேருக்கு நேர் முகமுகமாய்க் காண்போம், நாம் அப்பொழுது நாம் அறியப்பட்டிருக்கிறபடியே, முமையாக அறிந்துகொள்ளுவோம் (1 கொரிந்தியர் 13:12). நாம் இனி பாவத்துடனும் சந்தேகத்துடனும் போராட மாட்டோம். இது தான் இறுதியில் பரிபூரனமான வாழ்வாக இருக்கும்.

நாம் இயற்கையாகவே உலப்பிரகாரமான பொருள்களை விரும்பினாலும், கிறிஸ்தவர்களாகிய நம்முடைய ஜீவனைப் பற்றிய கண்ணோட்டம் புரட்சிகரமாக இருக்க வேண்டும் (ரோமர் 12:2). கிறிஸ்துவிடம் வரும்போது நாம் புதிய சிருஷ்டியாக மாறுவது போல (2 கொரிந்தியர் 5:17), "பரிபூரணம்" பற்றிய நமது புரிதலும் மாற்றப்பட வேண்டும். உண்மையான பரிபூரணமான ஜீவன் அன்பு, சந்தோஷம், சமாதானம் மற்றும் ஏனைய ஆவியின் கனிகள் ஆகும் (கலாத்தியர் 5:22-23), அவை மிகுதியான "பொருட்கள்" அல்ல. இந்த ஜீவனானது நித்தியமான வாழ்க்கையைக் கொண்டுள்ளது, எனவே, நமது விருப்பம் நித்தியத்தின்மேல் உள்ளது, தற்காலிகமானதின்மேல் அல்ல. பவுல் நமக்கு அறிவுரை கூறுகிறார், “பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது” (கொலோசெயர் 3:2-3).

Englishமுகப்பு பக்கம்

இயேசு பரிபூரண ஜீவனை வாக்குத்தத்தமாக அளித்தபோது அவர் எதை அர்த்தப்படுத்தினார்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries