settings icon
share icon
கேள்வி

பத்துக் கட்டளைகள் யாவை?

பதில்


இஸ்ரவேல் தேசத்தார் எகிப்திலிருந்து வெளியேறிய சில நாட்களில் தேவன் கொடுத்தப் பத்து பிரமாணங்களே இந்த பத்துக் கட்டளைகள் ஆகும். இந்த பத்து கட்டளைகளும் பழைய ஏற்பாட்டில் காணப்படும் 613 பிரமாணங்களின் யதார்த்தமான சுருக்கமே ஆகும். முதல் நான்கு கட்டளைகளும் தேவனோடு நமக்கு இருக்க வேண்டிய உறவு தொடர்பானது. கடைசியான ஆறு கட்டளைகளும் பிறறோடு நமக்கு இருக்க வேண்டிய உறவை பற்றியது. பத்து கட்டளைகளைக் குறித்து யாத்திராகமம் 20:1-17 மற்றும் உபாகமம் 5:6-21ல் பின்வருமாறு வாசிக்கிறோம்:

1. “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.” இந்த கட்டளை ஒரே உண்மையான தேவனைத் தவிர மற்ற தெய்வங்களை வணங்குவதற்கு எதிரானது ஆகும். மற்ற தெய்வங்கள் எல்லாம் போலியான தெய்வங்கள்.

2. வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.” இந்த கட்டளை விக்கிரகம் மற்றும் காணக்கூடாத தேவனுக்கு பதிலான சொரூபத்தை உருவாக்குவதற்கு எதிரானது. தேவனை சித்தரிக்கக்கூடிய எந்த சொரூபத்தையும் நம்மால் செய்ய முடியாது. தேவனுக்கு பதிலாக விக்கிரகத்தை உருவாக்குவது தவறான தெய்வத்தை வழிபடுவது ஆகும்.

3. “உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக் கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.” இந்த கட்டளை தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குவது குறித்தது. தேவனுடைய நாமத்தை நாம் அற்பமாக பயன்படுத்தக் கூடாது. நாம் மரியாதை மற்றும் கனத்தோடு அவருடைய நாமத்தை பயன்படுத்துவதன் மூலமே நாம் தேவனுக்கு கனத்தை செலுத்த வேண்டும்.

4. “ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக் ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக் ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம். கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதை பரிசுத்தமாக்கினார்.” இந்த கட்டளை ஓய்வுநாளை (அதாவது சனிக்கிழமை, வாரத்தின் கடைசி நாள்) ஓய்ந்திருந்து தேவனுக்கான நாளாக அனுசரிக்க வேண்டும் என்பதை பற்றியதாகும்.

5. “உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.” இது தகப்பனையும் தாயையும் மரியாதையோடும் கனத்தோடும் நடத்த வேண்டும் என்பதற்கான கட்டளை ஆகும்.

6. “கொலை செய்யாதிருப்பாயாக.” திட்டமிட்டு மற்ற நபரை கொலை செய்வதற்கு எதிரான கட்டளையாகும்.

7. “விபசாரம் செய்யாதிருப்பாயாக.” தன்னுடைய மனைவியைத் தவிர மற்றவர்களோடு பாலியல் உறவு வைத்துக்கொள்வதற்கு எதிரான கட்டளையாகும்.

8. “களவு செய்யாதிருப்பாயாக.” மற்றவர்களுக்குச் சொந்தமான, நமக்கு சொந்தமல்லாத எந்த பொருளையும் அவர்களுடைய அனுமதியின்றி எடுப்பதற்கு எதிரான கட்டளையாகும்.

9. “பிறனுக்கு விரோதமாகப் பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக.” பிறருக்கு விரோதமாக பொய்சாட்சி கூறுவதற்கு எதிரான கட்டளையாகும். இது பொய்க்கு எதிரான கட்டளையும் ஆகும்.

10. “பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக, பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.” தனக்கு சொந்தமல்லாத எதையும் இச்சிப்பதற்கு எதிரான கட்டளையாகும். இச்சையானது மேல்குறிப்பிடப்பட்ட கொலை, விபசாரம், மற்றும் களவு ஆகிய கட்டளைகளில் எதையாகிலும் மீரி நடக்கச் செய்கிறது. எதையாவது செய்வது தவறு என்றால் அதை செய்ய இச்சிப்பதும் தவறானதே ஆகும்.

சில நபர்கள் இந்த பத்து கட்டளைகளை நிர்ணயிக்கப்பட்ட விதிகளாகவும் இதை பின்பற்றினால் மரணத்திற்கு பின் நிச்சயம் பரலோகத்திற்கு போக முடியும் என்றும் தவறாக நினைக்கின்றனர். முரணாக ஜனங்கள் இந்த பத்து கட்டளைகளையும் சரியாக கீழ்படிந்து நடக்க முடியாது என்பதை உணரவேண்டும் என்பதே இதனுடைய நோக்கம் ஆகும் (ரோமர் 7:7-11). எனவே அவர்கள் தேவனுடைய கிருபை மற்றும் இரக்கத்திற்கான தேவையை மக்கள் உணருவார்கள். மத்தேயு 19:16ல் பணக்கார வாலிபன் தான் அனைத்து கட்டளைகளையும் சரியாக பின்பற்றுவதாக சொன்னபோதிலும் யாராலும் பத்து கட்டளைகளுக்கு பூரணமாக கீழ்பந்து நடக்க முடியாது (பிரசங்கி 7:20). இந்த பத்து கட்டளைகள் நாம் எல்லொரும் பாவம் செய்தவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது (ரோமர் 3:23) எனவே இயேசுகிறிஸ்து மூலம் உண்டாயிருக்கிற தேவ இரக்கம் மற்றும் கிருபையே நாமெல்லோருக்கும் தேவையாயிருக்கிறது.

English



முகப்பு பக்கம்

பத்துக் கட்டளைகள் யாவை?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries